நம்பிக்கைக்கு நடைமுறை வடிவம் தர வந்தவரா கமலா தேவி ?

60

இயான் மிஷல்

கமலா தேவி ஹரிஸ். பிடென் நிர்வாகத்தின் நம்பிக்கைக் கீற்றாகப் பலரும் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். தாங்கள் டிரம்பின் எதேச்சாதிகார நிர்வாக முறைக்கு முற்றிவும் மாற்றமானவர்கள் என்பதற்கான அடையாளக் குறியீடாக கமலா பார்க்கப்படுவதற்குக் காரணம் டிரம்ப் எதிர்த்த குடியேற்றவாசியாகவும் மதச் சிறுபான்மைக்கும் சொந்தக்காரராகவும் அவர் இருப்பது தான். தற்போது 55 வயைத அடைந்திருக்கும் அமெரிக்க உபஜனாதிபதி கமலா தேவி ஹரிஸுக்கு அமெரிக்க அரசியல் யாப்பின்படி 2024 தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராவதற்கும் அருகதையுண்டு.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள தாத்தா வீட்டுக்கு கமலா ஹாரிஸ் (பின்வரிசையில் இடது பக்கம்) வந்தபோது எடுத்த படம். வலது ஓரத்தில் அவரது சகோதரி மாயா ஹாரிஸ்

அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு அறிவிக்கப்பட்ட முதல் கறுப்பின பெண் மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண் கமலா ஹாரிஸ். இதற்கு முன்பு இரண்டு முறை மட்டுமே பெண்கள் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டுள்ளனர்; 2008ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் சார்பாக சாரா பாலினும், 1984ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜெரால்டின் ஃபெரொரோவும் போட்டியிட்டுள்ளனர். ஆனால் இவர்கள் வெற்றி பெறவில்லை. எனவே கமலா ஹாரிஸ் தற்போது அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற சிறப்பை பெறுகிறார்.

இந்தியாவுடன் தொப்புள் கொடி உறவைத் தவறாமல் பேணி வரும் கமலா, தனது தாய் ஒக்லாந்தின் கறுப்பினக் கலாச்சாரத்துக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டு தங்கள் இருவரையும் அப்படியே வளர்த்தார் என்றும் இரு கறுப்பின மகள்களை வளர்க்கிறோம் எனறு புரிந்து கொண்டே வளர்த்தார் என்றும் தனது சுயசரிதையான த ட்ருத்ஸ் வீ ஹோல்ட் இல் குறிப்படுகின்றார்.

“நாங்கள் வாழச் சென்ற இடம் என்னையும் எனது சகோதரியையும் கருப்பின பெண்களாகதான் பார்க்கும் எனவே நாங்கள் தன்நம்பிக்கைக் கொண்ட கருப்பின பெண்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதில் எனது தாய் உறுதியாக இருந்தார்,” என கமலா குறிப்பிட்டிருந்தார். தனது அடையாளம் குறித்து தனக்கு எந்த ஒரு அசெளகரியமும் இதுவரை ஏற்படவில்லை என்றும், எளிமையாக சொல்லவேண்டுமானால் `நான் ஒரு அமெரிக்கர்` என்றும் கமலா ஹாரிஸ் குறிப்பிடுவார். 2019ஆம் ஆண்டு வாஷிங்டன் போஸ்டுக்கு பேசிய அவர், “நிறத்தாலோ அல்லது பின்புலத்தாலோ ஒருவர் அரசியல்வாதியாக கூடாது. “நான் யாரோ அதில் சிறப்பாக உள்ளேன் என்று கூறியிருந்தார்.

கமலா ஹாரிஸ் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். பல்கலைக்கழக வாழ்க்கை தனது வாழ்க்கையை செதுக்குவதில் பெரிதும் உறுதுணையாக இருந்தது என ஹாரிஸ் குறிப்பிடுவார். நான்கு வருட ஹாவார்ட் பல்கலைக்கழக படிப்புக்கு பின் கமலா கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார் அலமேடா கவுண்டியின் மாவட்ட அட்டர்னி அலுவலகத்தில் தனது பணியை தொடங்கினார். 2003ஆம் ஆண்டு சான் ஃபிரான்ஸிஸ்கோ மாவட்டத்தின் அட்டர்னி ஜெனரல் ஆனார். அதன்பிறகு அதிக மக்கள் தொகை கொண்ட கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலானார். மேலும் கலிஃபோர்னியாவின் முதல் பெண் மற்றும் முதல் ஆப்ரிக்க அமெரிக்க பெண் அட்டர்னி ஜெனரல் என்ற சிறப்பையும் அவர் பெற்றார். இரு முறை அட்டர்னி ஜெனரலாக இருந்த கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் வளரும் நட்சத்திரமாக அறியப்பட்டுள்ளார்.

இவரது தாத்தா கோபாலன் இந்தியாவில் மத்திய அரசுப் பணியில் இருந்தவர். கோபாலனின் மகள் ஷியாமளா, தமது 19ம் வயதில் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று அங்கேயே குடியேறினார். அந்த நாட்டின் தலைசிறந்த மார்பகப் புற்றுநோய் மருத்துவச் சிகிச்சை நிபுணராக அவர் விளங்கினார். அங்கு ஜமைக்காவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய டொனால்ட் ஹாரிஸை ஷியாமளா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கமலா ஹாரிஸ், மாயா ஹாரிஸ் ஆகிய இரு மகள்கள். ஏழு ஆண்டுகள் டொனால்ட் ஹாரிஸுடன் வாழ்ந்த ஷியாமளா, பிறகு அவரை மணவிலக்கம் செய்தார். அதற்குப் பிறகு தமது இரு மகள்களையும் தனியாக வளர்த்து ஆளாக்கினார். கமலா ஹாரிஸ் அட்டர்னி, செனட்டர் என பொது வாழ்வில் பதவிகளை அடைந்து, தற்போது நாட்டின் துணை அதிபராகவுள்ளார். இவரது சகோதரி மாயா ஹாரிஸ், அமெரிக்காவில் வழக்கறிஞராக இருக்கிறார்.

தனது தாய் மற்றும் தங்கையுடன் கமலா ஹாரிஸ்

இவர்களின் தாத்தா கோபாலன் மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சென்னை பெசன்ட் நகரில் குடியேறினார். அப்போது அவரை பார்க்க ஷியாமளா தனது பெண் குழந்தைகளுடன் தமிழ்நாட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதன் மூலம் தமது தாய்நாட்டுக்கும் குழந்தைகளுக்கும் இடையே அவர் பிணைப்பை உருவாக்கினார்.

தங்களின் வளர்ப்பு பற்றி கமலா ஹாரிஸ் தனது புத்தகத்தில், “என் தாய் என்னையும் எனது சகோதரி மாயாவையும் அழைத்துக் கொண்டு அப்போது மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட நகருக்கு செல்வார். அதற்கு காரணம், நாங்கள் யார், எங்களுடைய பின்புலம் என்ன என்பதை எங்களுக்கு அவர் புரிய வைக்க முற்பட்டதுதான். சென்னையில் ஓய்வு பெற்ற எனது தாத்தாவுடன் கைகோர்த்து நீண்ட தூரம் பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபயிற்சி செய்ததுண்டு. அப்போது தாத்தா நிறைய கதைகள் கூறுவார். ஒரு நாள் பாதியிலேயே விட்டு விட்ட கதையை மறுநாள் நடைப்பயிற்சியின்போது தாத்தா தொடருவார். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் ஆரம்ப கால கதைகளை அவர் எங்களுக்கு அழகாக விவரிப்பார். அந்த படிப்பினைதான் இன்று இங்குவரை நான் வர உந்து சக்தியாகியிருக்கின்றன” என்று தனது ஆழமான இந்திய பாரம்பரிய உணர்வை அவர் பகிர்ந்து கொள்கிறார்.

தமிழகத்தின் மன்னார்குடி பகுதியில் உள்ள துளசேந்திரபுரத்தை கிராமவாசியும், கமலாவின் பூஜை செய்யும் கோவிலின் பூஜை ஒருங்கிணைப்பாளருமான சுதாகர். ”எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. அவர் வெற்றி பெறவேண்டும் என நாங்கள் பூஜை செய்கிறோம். கமலாவின் பங்கேற்பு எங்கள் கிராமத்து இளம் தலைமுறையினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது,” என்கிறார்

தற்போது அமெரிக்காவின்  துணை ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுடன் சேர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதும் தனது கடந்த காலத்தை மறக்காது உரையாற்றினார். தனி மனுசியாக எனது தாய் என்னை வளர்த்தெடுத்தார் அவரை நான் இந்த தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன். இந்த தருணத்தை சாத்தியப்படுத்திய கருப்பின மக்களை, ஆசியர்களை, வெள்ளை இனத்தவர்களை, லத்தீனியர்களை நான் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன் என அவர் தன் உரையில் குறிப்பிட்டார். இப்படியான ஒரு நிகழ்வு அமெரிக்காவில் நிச்சயம் சாத்தியப்படும் என எனது தாய் கூறினார் என அவர் தெரிவித்தார்.’ஒரு பெண் துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிப்பதை குறிப்பிட்டே கமலா இவ்வாறாக பேசினார்.’

 “ஜனநாயகம் என்பது ஒரு நிலை அல்ல. அது ஒரு செயல்பாடு என்று நாடாளுமன்ற உறுப்பினரான ஜான் லூயிஸ் இறப்பதற்கு முன்பு எழுதினார். அமெரிக்காவின் ஜனநாயகம் என்பது உத்தரவாதம் செய்யப்பட்டது அல்ல. ஜனநாயகத்துக்காகப் போராடுவதற்கு நாம் எந்த அளவுக்கு விரும்புகிறோமோ அந்த அளவுக்கே அது வலுவாக இருக்கும் என்பதே அவர் சொன்னதன் பொருள்” எனவும் அவர் கூறினார்.

“இதில் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் இருக்கிறது. சிறந்த எதிர்காலத்தைக் கட்டமைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு சக்தி இருக்கிறது” என்று பேசிய கமலா ஹாரிஸ், 2020 தேர்தலுக்கான பைடனின் முழக்கமான “அமெரிக்காவுக்கு நீங்கள் புதிய நாளைத் தொடங்கினீர்கள்” என்ற வாசகத்தையும் குறிப்பிட்டு அவர் பேச்சைத் தொடர்ந்தார்.

“நீங்கள் நம்பிக்கையை தேர்வு செய்தீர்கள். ஒற்றுமையை, கண்ணியத்தை, அறிவியலை, உண்மையை தேர்வு செய்தீர்கள். அதனால் நீங்கள் பைடனை தேர்வு செய்தீர்கள்” என கமலா ஹாரீஸ் கூறி னார்.

பைடன் ஒரு ஹீலர் (குணப்படுத்துபவர்) என மக்களின் ஆரவாரத்திற்கு இடையே உரையாற்றிய கமலா, கடந்த காலங்களில் தோல்வியை சந்தித்த நபருக்குத்தான் மக்களின் தேவை குறித்த ஒரு புரிதல் இருக்கும். அந்த புரிதல் ஒரு தேசமாக நம் நோக்கத்தை மீட்டெடுக்க உதவும் எனவும்  கூறினார். இந்த மக்கள்தான் ஜனநாயகத்தின் முதுகெலும்பு. நூறு ஆண்டுகளுக்கு முன்பு 19வது சட்டத் திருத்தத்திற்காகப் போராடியவர்கள் அவர்கள். 55 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குரிமைக்காகப் போராடியவர்கள் அவர்கள். 2020 இல் புதிய தலைமுறை பெண்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளார்கள். இந்த போராட்டத்தின், இலக்கின் வெளிப்பாடாக இப்போது நான் இருக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

துணை ஜனாதிபதியாக ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்ததற்கு பைடனைப் பாராட்டிய கமலாஹாரிஸ், துணை ஜனாதிபதியாகப் பதவி ஏற்கும் முதல் பெண்ணாக நான் இருக்கலாம். நான் கடைசி பெண் அல்ல எனத் தெரிவித்தார்.

பலஸ்தீன் மற்றும் பரந்த மத்திய கிழக்கு நிர்வாகம் தொடர்பான டொனால்ட் டிரம்பின் பல சர்ச்சைக்குரிய கொள்கைகளை ஜோ பைடனின் நிர்வாகம் மாற்றியமைக்கும் என அரப் அமெரிக்கன் நியூஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். ஒவ்வொரு பலஸ்தீனியரதும் ஒவ்வொரு இஸ்ரேலியரதும் கௌரவத்திலும் பெறுமானத்திலும் ஜோவும் நானும் நம்பிக்கை வைக்கிறோம். சுதந்திரம், பாதுகாப்பு, அபிவிருத்தி, ஜனநாயகம் அனைத்திலும் பலஸ்தீனர்களும் இஸ்ரேலியர்களும் சமமான வாய்ப்புக்களை அனுபவிப்பதை நாம் உறுதி செய்வோம் என அவர் தெரிவித்திருந்தார்.

பலஸ்தீன் விரோத பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் டிரம்பின் அமெரிக்காவுடைய உறவுகள் குறித்துக் கேட்டபோது, நாங்கள் இணைப்பையும் குடியிருப்புக்களை விஸ்தரிப்பதையும் எதிர்க்கிறோம். இரு நாட்டுத் தீர்வுக்காக நாங்கள் உழைப்போம், அந்த இலக்கைக் குறைத்து மதிப்பிடும் எந்த ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளையும் நாங்கள் எதிர்க்கிறோம் எனவும் தெரிவித்திருந்தார்.

பலஸ்தீன மக்களுக்கான பொருளாதார, மனிதாபிமான உதவிகளை மீளவும் பெற்றுக் கொடுப்பதற்கும், காசாவில் நடைபெற்று வரும் மனித அவலத்தை நிறுத்தவும், அமெரிக்கத் தூதரகத்தை கிழக்கு ஜெரூஸலமில் மீளத்திறக்கவும், பலஸ்தீன அதிகார சபையின் தூதரகமொன்றை வொஷிங்டனில் திறக்கவும் ஏற்பாடு செய்வதாகவும் அவர் அந்தப் பேட்டியின் போது தெரிவித்திருந்தார்.

பெண் என்ற வகையிலும், மதச் சிறுபான்மை என்ற வகையிலும், குடியேற்றவாசி என்ற வகையிலும் வெள்ளையின் மேலாதிக்கத்துக்கு மாறாக கறுப்பினத்தவர் என்ற வகையிலும் கமலாவின் துணை ஜனாதிபதிப் பதவி பல செய்திகளைச் சொல்கிறது. டிரம்ப் நிர்வாகத்துக்கு மாற்றமாக ஜோவின் நிர்வாகம் அமையும் என்பதைச் சொல்வதற்கான நடைமுறை வடிவமாக கமலாவின் தெரிவை உலகத்துக்குக் காட்டுவதற்கு இதனால் அமெரிக்காவுக்கு முடிந்திருக்கிறது என்று தான் சொல்ல  வேண்டும்.