அமெரிக்க வசந்தம் இலங்கைக்கு வராதா ?

120
  • பியாஸ் முஹம்மத்

உலகின் பலமான ஜனநாயக நாடு என்று பேர் பெற்றிருந்த அமெரிக்காவின் பெயரை மீண்டும் நிலைநாட்டுவோம் என்ற கோஷத்துடன் ஜோ ஜனாதிபதியாகியிருக்கிறார். இதற்கு முன் டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாகும் போதும் அமெரிக்காவை மீண்டும் உயர்வடையச் செய்வோம் ( Make America Great Again) என்ற கோஷத்தைத் தான் முழங்கினார். அதற்கு முன்னர் ஒபாமா ஜனாதிபதியாகும் போது மாற்றம் (Change) என்ற வாசகத்தை முன்வைத்தார். ஆகவே மாற வேண்டும் என்பதும் மீண்டும் என்று சொல்வதும் அமெரிக்கா இழந்த ஒன்றைத் தேடிக் கொண்டிருப்பதைக் காட்டுவதாகத்தான் தெரிகிறது. இந்த நிலையில் தான் ஜோசப் ஆர் பைடன் ஒரு சிறுபான்மைத் துணை ஜனாதிபதியுடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாகியிருக்கிறார். அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது அமெரிக்காவின் ஆன்மாவை மீட்டெடுப்பேன் என்று சொல்லியிருப்பது அடுத்த தேர்தலின் போது இந்த மீண்டும் என்ற சொல்லுக்கு இடமில்லாமல் போகும் என்ற எதிர்பார்ப்பை வளர்த்திருக்கிறது.

அடுத்த வருடம் ஜனவரியில் பதவியேற்கவுள்ள புதிய ஜனாதிபதி பைடன் நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இந்த தேசத்தின் மக்கள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் நமக்கு தெளிவான ஒரு வெற்றியை தந்துள்ளனர், “நீங்கள் என்மீது வைத்த நம்பிக்கைக்கும் உறுதிக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். வேற்றுமையை கோராமல் ஒற்றுமையை கோரும் ஒரு அதிபராக நான் இருப்பேன்.” எனக் கூறி உள்ளார்.

சிவப்பு நிற மாகாணங்கள் நீல நிற மாகாணங்கள் என்றில்லாமல், பல மாகாணங்கள் ஒன்றிணைந்த அமெரிக்காவாக நான் பார்ப்பேன். உங்கள் நம்பிக்கையைப் பெற முழு மனதாக பணியாற்றுவேன்,”என அவர் தெரிவித்துள்ளார்.

“அமெரிக்கா என்பது மக்களை குறித்தது. நான் இந்த பதவிக்கு வந்ததற்குக் காரணம், அமெரிக்காவின் ஆன்மாவை மீட்டெடுக்கவும், இந்த நாட்டின் முதுகெலும்பான நடுத்தர வர்க்க மக்களை மீள்கட்டமைக்கவும், மீண்டும் அமெரிக்காவை அனைவரும் மதிக்கும்படியும், நாட்டில் ஒற்றுமையை உருவாக்கவும்தான். எனது இந்த நோக்கத்திற்காக பலர் வாக்களித்துள்ளது குறித்து நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன் ” எனக் கூறிய அவர், தற்போது கடமையாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாக தெரிவித்தார்.

தனது தேர்தல் பிரசாரத்திற்கு உதவிபுரிந்த பல்வேறு தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த பைடன், டிரம்பிற்கு ஆதரவளித்தவர்கள் குறித்தும் உரையாற்றினார். “ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். கசப்புகளை ஒதுக்கி வைத்து, ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வோம், நமது எதிர்த்தரப்பினரை எதிரிகளாக நடத்துவதை நிறுத்துவோம்,” என்றார்.

“எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் எனக்காக வாக்களித்தவர்களுக்காகப் பணி செய்வதுபோலவே நான் கடுமையாக பணி செய்வேன்,” எனது முதல் பணி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதுதான். நாம் இயல்பு நிலைக்குச் செல்ல அதுதான் ஒரே வழி,” என்று கூறிய பைடன்.”திங்களன்று, முன்னணி விஞ்ஞானிகள், நிபுணர்களுடன், பதவி மாற்ற வல்லுநர்களுடன் ஆலோசிப்பேன், எங்கள் கொரோனா கட்டுப்பாட்டுத் திட்டத்தை செயலாக மாற்ற அவர்கள் உதவி செய்வர், இந்த பணி ஜனவரி 20ஆம் தேதி 2021ஆம் ஆண்டு தொடங்கும்,” ” என்று கூறினார்.’

இந்த ஒன்றியத்தை 1860ஆம் ஆண்டு லிங்கன் காத்தார். 1932ஆம் ஆண்டு ரூஸ்வெல்ட் அப்போதைய பிரச்சனைகளை தீர்க்க உறுதி பூண்டார். 1960ஆம் ஆண்டு கென்னடி எல்லைகளுக்கான புதிய உறுதியை அளித்தார். ஒபாமா புதிய வரலாற்றை படைத்தார். நம்மால் முடியும் என்றார். தேவதைகளுக்கும், இருளுக்கும் நடந்த தொடர் சண்டையால் உருப்பெற்ற தேசம் இது. தேவதைகள் நீடிப்பதற்கான தருணம் இது. மொத்த உலகமும் அமெரிக்காவை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த உலகிற்கான வழிகாட்டி அமெரிக்கா என தனது உரையில் பைடன் கூறி உள்ளார்.

ஜோ பைடன் அமெரிக்க மக்களின் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு முன்னுள்ள 45 ஜனாதிபதிகளும் பெறாத அளவு வாக்குகள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. இதற்கு வாக்களிப்பு வீதம் அதிகரித்ததும் ஒரு காரணம். இம்முறை அளி்கப்பட்ட 16 கோடிக்கும் அதிகமான வாக்குகள் அமெரிக்க தேர்தல் வரலாற்றில் 120 வருடங்களுக்குப் பின்னர் வழங்கப்பட்ட அதிகபட்ச வாக்குகளாக அமைந்துள்ளது. பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 66.9 வீதமளவு அதிகமாக வாக்களித்துள்ளமையும் 1900 க்குப் பிறகு இந்த முறை தான் நடந்திருக்கிறது. 1900 இன் தேர்தலில் வாக்களிப்பு வீதம் 73.7 ஆக இருந்துள்ளது. 100 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களித்த முதலாவது சந்தரப்பமும் இதுதான். கொரோனா அச்சத்தின் காரணமாக மக்கள் முன் கூட்டியே தமது வாக்குகளை அளித்திருந்தார்கள். அமெரிக்க ஜனாதிபதிகளில் வயது கூடிய ஜனாதிபதியாக ஜோன் பைடன் தெரிவு செய்யப்பட்டிருப்பதும் முக்கியமானது.

8 ஆண்டு காலம் அதிபர் பராக் ஒபாமாவின் துணை அதிபராக தாம் பணியாற்றிய வெள்ளை மாளிகைக்கு தற்போது அதிபராக திரும்பி வரவிருக்கிறார் 78 வயதாகும் பைடன். ஜோ பைடன், அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் துணை அதிபரையும் தம்முடன் வெற்றிப்பாதையில் அழைத்து வந்திருக்கிறார்.,

தமது மூன்றாவது முயற்சியில் அதிபராகும் முயற்சியில் வெற்றி பெறும் பைடனுக்கு இது 50 வருடக் கனவு. இதற்கு முன்பாக இரண்டு முறை அதிபர் பதவிக்கு முயன்றிருக்கிறார் பைடன். 1988ம் ஆண்டு பிரிட்டன் தொழிலாளர் கட்சித் தலைவர் நெயில் கின்னாக்கின் பேச்சை காப்பியடித்து பேசியதாக அவரே ஒப்புக்கொண்டு அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகினார். 2008ல் ஜனநாயக கட்சியின் சார்பில் வேட்பாளர் ஆவதற்கு முயற்சி செய்தார். பிறகு அவரே அந்தப் போட்டியில் இருந்து விலகி ஒபாமாவின் துணை அதிபர் வேட்பாளராக நியமிக்கப்படுவதை ஏற்றுக்கொண்டார். 8 ஆண்டு காலம் ஒபாமாவோடு துணை அதிபராக இருந்தது ஒபாமா ஆட்சியின் பெருமைகளில், அதன் மரபில் உரிமை கோர பைடனுக்கு உதவியாக இருந்தது.

(1974ல் இளம் செனட்டராக பைடன்)

தமது சொந்த மாநிலமான டெலாவேரில் இருந்து 1972ல் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடன், மொத்தம் ஆறு முறை செனட்டராக தேர்வு செய்யப்பட்டார். நீண்ட தண்டனைக் காலத்தையும், பலரை ஒன்றாக சிறையில் அடைப்பதையும் ஊக்குவித்ததாக இடதுசாரிகளால் குற்றம்சாட்டப்படும் 1994ம் ஆண்டின் ஆன்டி கிரைம் மசோதாவை தீவிரமாக ஆதரித்தவர் பைடன்.

ஜோ பைடனின் வாழ்வு தனி மனித சோகங்கள் நிரம்பியது என்பது பல அமெரிக்கர்களுக்குத் தெரியும்.  1972ல் நடந்த ஒரு கார் விபத்தில் அவர் தமது முதல் மனைவி நெய்லியா மற்றும் பெண் குழந்தை நவோமி ஆகியோரை இழந்தார். இந்த விபத்தில் உயிர் பிழைத்த தமது இளம் மகன்கள் பியூ மற்றும் ஹன்டர் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை அறையில் இருந்து அவர் தமது முதல் செனட்டர் பதவிக்காலத்துக்கான பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டார். 2015ல் அவரது மகன் பியூ மூளை புற்று நோயால் தமது 46வது வயதில் இறந்தார். 2016ல் அதிபர் பதவிக்கான போட்டியில் ஈடுபடாததற்கு இது ஒரு காரணம் என்று பைடன் கூறியுள்ளார்.

இம்முறைய தேர்தலில் அவர் தனது மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், கோபத்தையும், ஆவேச உரைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒரு நாடாக ஒன்றாக சேரவேண்டிய நேரம் இது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வெற்றி தம்மை கௌரவித்திருப்பதாகவும், பணிவுகொள்ள வைத்திருப்பதாகவும் தெரிவித்த அவர், முன்னெப்போதும் இல்லாத தடைகள் ஏற்பட்ட நிலையில் முன்னெப்போதும் இல்லாத அளவில் மக்கள் திரண்டு வாக்களித்திருப்பது, அமெரிக்காவின் இதயத்தின் ஆழத்தில் ஜனநாயகம் துடிக்கிறது என்பதைக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய நிர்வாகத்தை கட்டமைக்கிற கடுமையான பணியை பைடன் இப்போது தொடங்க வேண்டியிருக்கிறது. மூன்று மாதங்களுக்கு உள்ளாக அவர் ஓர் அமைச்சரவையை அமைக்கவேண்டும், முன்னுரிமை கொள்கைகளை முடிவு செய்யவேண்டும், பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிற, கூர்மையாகப் பிளவுபட்டுள்ள நாட்டை ஆள்வதற்குத் தயாராக வேண்டும். வழக்கமாக தோற்கும் வேட்பாளர் தமது தோல்வியை ஒப்புக்கொள்வார். ஆனால், தேர்தல் முடிவுகளை பல முனைகளிலும் சவாலுக்கு உட்படுத்துவது என்று டிரம்ப் தீர்மானித்துள்ளார். இதனையும் எதிர்கொள்ள வேண்டும்.

வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு, அதிகாரபூர்வ முடிவுகள் இந்த டிசம்பர் 14ம் தேதிக்கு முன்னதாக வழங்கப்படவேண்டும். ஜனவரி 20ம் தேதி புதிய அதிபர் பதவியேற்கவேண்டும். அதற்கு முன்னதாக அவர்களுக்கு அமைச்சர்களை நியமித்துக்கொள்ளவும் திட்டங்களைத் தீட்டிக்கொள்ளவும் அவகாசம் வழங்கப்படும். பொறுப்புகளை புதிய அதிபரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு பதவியேற்பு விழாவில் இடம் பெறும். இந்த நிகழ்வு வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கேபிடல் பில்டிங்கின் படிகளில் நடக்கும். இதற்குப் பிறகு பதவியேற்ற அதிபர் நேராக வெள்ளை மாளிகைக்கு செல்வார்.

ஜோ பைடனின் வெற்றியை விட குறுகிய காலத்தில் டிரம்ப் அடைந்த தோல்வியைப் பற்றித் தான் உலகில் விவாதங்கள் நடந்து வருகின்றன. டிரம்பின் எதேச்சாதிகாரப் போக்குக்கான சாவுமணியாகத் தான் அவரது தோல்வி பார்க்கப்படுகிறது. ஒரு தன்னிகரில்லாத் தலைவராக தன்னைக் காட்டிக் கொள்ள முயற்சித்த இந்த ரியல் எஸ்டேட் வியாபாரி அடைந்த தோல்வி இலங்கையின் 2010 ஆம் ஆண்டின் தேர்தலை ஞாபகபப்டுத்துகிறது. வாக்காளர்களிடையே வெளிநாட்டு ஊடகமொன்று நடத்திய கணக்கெடுப்பில் 35 வீதமானவர்கள் கொரோனாவுக்குப் பின்னர் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் 25 வீதமானவர்கள் இனவாதச் செயற்பாடுகளுக்கு எதிராகவும் வாக்களித்ததாகக் கூறியிருக்கின்றனர். அமெரிக்காவில் சிறுபான்மையினர் ஒன்று திரண்டு டிரம்பை வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றியதாகவே விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

டிரம்பின் தோல்வி அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையருக்கு  ஏமாற்றமாக அமைந்துள்ளதாக பிபிசி சிங்கள சேவை நடத்திய நேர்காணல்களில் இருந்து தெரியவருகின்றது. இது தனக்கு ஆச்சரியமானதாக இருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நாட்டை விட்டு வெளியேறி நியுயோர்க்கில் வசிக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர் போத்தல ஜயந்த தெரிவிக்கிறார். எனக்குத் தெரிந்த குடியேற்றவாசி இலங்கையர்களில் கணிசமானவர்கள் டிரம்புக்கு ஆதரவு தெரிவிப்பவர்களாக இருந்தார்கள். குடியேற்றவாசிகளுக்கு எதிராக அவர் கடுமையான நிலைப்பாட்டில் இருக்கும் போதும் இவர்கள் ஏன் அவரை ஆதரிக்கிறார்கள் என எனக்குப் புரியவில்லை என்கிறார் அவர். மார்ட்டின் லூதர் கிங் போன்ற தலைவர்கள் போராடிப் பெற்ற வாக்குரிமை காரணமாகத் தான் நாங்கள் இங்கே இருக்கிறோம், எமக்கு வாக்குரிமை கூட கிடைத்திருக்கிறது. அப்படி இருந்தும் ஏன் இவர்கள் டிரம்பை ஆதரிக்கிறார்கள் என அவர் கேள்வி எழுப்புகிறார்.

கோதாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ பரிவாரங்கள் எல்லாம் குடியரசுக் கட்சி ஆதரவாளர்களாகவே இருக்கிறார்கள் லொஸ் ஏஞ்ஜல்ஸில் வசிக்கும் முன்னாள் கவுன்சிலர் ஸ்வர்ணா புஷ்பகாந்தி கூறுகிறார். அமெரிக்க பிரஜாவுரிமையை கடந்த ஏப்ரலில் இருந்து நீக்கிக் கொண்டதாக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ அறிவித்தாலும் நாட்டின் முதற்பெண்மணியான அவரது மனைவியோ மகனோ சகோதரன் பஷில் ராஜபக்ஷவோ தமது அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டதாக அறிவிக்கவில்லை. மறுபுறத்தில் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸுடைய அலுவலகப் பிரதானியாக ரோஹிணி லக்ஷ்மி கொஸோக்லு பணியாற்றுவதும் குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது வெளிவிவகார அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றி தற்போது சீனாவுக்கான தூதுவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கலாநிதி பாலித்த கொஹோனே தெரன தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றின் போது, ஜோபைடனுக்குரிய வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதனால் இலங்கை அதனை உணர்ந்து கொண்டு வியூகம் வகுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். டிரம்ப் நிர்வாகத்தில் இலங்கைக்குப் பெரியளவு அழுத்தங்கள் இல்லாமலிருந்தாலும் பழுத்த அரசியல்வாதியான ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் இந்த நிலை மாற்றமடையும். அதனால் பைடன் முகாமுடனும் இலங்கை தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். டிரம்பின் கீழ் எங்களுக்கு பெரிய அழுத்தங்கள் இருக்கவில்லை. ஆனால் பைடன் இலங்கையைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ள ஒருவர். இலங்கையை ஊன்றிக் கவனித்துக் கொண்டிருக்கின்ற பலர் அவரைச் சூழ இருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவும் அவரது சகாக்களும் அமெரிக்காவின் டீ பார்ட்டி அமைப்புக்கு நெருக்கமான கலிபோர்னியாவின் தீவிர வலதுசாரி குடியரசுக் குழுக்களின் அங்கத்தவர்கள் எனக் கூறும் கலாநிதி தயான் ஜயதிலக்க, இதனால் ஜோ பைடனுடைய வெளிநாட்டுக் கொள்கைக்குள் ராஜபக்ஷ நிர்வாகத்துக்கு பாரிய அழுத்தங்கள் ஏற்பட முடியும் என்கிறார். இதே கருத்தை வெளியிடும் முன்னாள் லொஸ் ஏஞ்சல்ஸ் கவுன்சிலர் ஸ்வர்ணா புஷ்பகாந்தி, ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையில் பாரிய அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்கிறார். அரசியல் ஆய்வாளரும் ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிடும் போது, ஜோ பைடனின் வெற்றி இலங்கைக்கு மற்றுமன்றி உலகத்துக்கே தாக்கம் செலுத்துவதாக அமையும். ஜனரஞ்சகம் மற்றும் எதேச்சாதிகாரப் போக்குகளுக்கு சர்வதேச ரீதியில் பின்னடைவு ஏற்படும். அமெரிக்காவின் சர்வதேச உறவுகளில் மாற்றம் ஏற்படும். சர்வதேச நியமங்களும் அமைப்புக்களும் மீண்டும் வலுப்பெறும் எனத் தெரிவித்தார்.

இது முழு உலகுக்குமான வெற்றியாக அமையும் என் கூறும் கலாநிதி தயான் ஜயதிலக்க, இம்முறை மக்கள் புரட்சியாகவே தேர்தல் முடிவு வெளிவருகிறது. டைம்ஸ் சஞ்சிகை சொல்வது போல பாரியதொரு புரட்சி அமைதியாக நடந்திருக்கிறது. இது வரலாற்றில் இதுவரை இல்லாத மக்கள் எழுச்சி. மக்கள் இயக்கங்கள் கட்சிகளை விட முன்னணியில் இருப்பதால் கட்சிகள் அவற்றுக்குப் பின்னால் செல்ல வேண்டியேற்பட்டது. இது ப்ளக் லைவ்ஸ் மட்டர் மட்டுமல்ல, இதற்கு முன்னரே இருந்த பர்னி சான்டர்ஸ் போன்ற மக்கள் எழுச்சியின் நீட்சி. இது நாகரிக சமுதாயமொன்றில் நாம் கண்ட முக்கியமான ஜனநாயக மக்கள் எழுச்சி எனக் குறிப்பிடும் கலாநிதி தயான் ஜயதிலக்க, இது அரபு வசந்தம் அல்ல, இது அமெரிக்க வசந்தம் என விவரிக்கிறார்.

இதனால் சேர்பியாவின் ஸ்லோபதான் மிலுாசெவிச்சினுடைய அனுபவத்திலிருந்து இலங்கையின் ராஜபக்ஷ அரசாங்கம் பாடம் படிக்க வேண்டும் எனக் குறிப்பிடும் கலாநிதி ஜயதிலக்க, இதேபோல தீவிர இனவாதச் செயற்பாடுகளால் அது அண்டைநாடான ரஷ்யாவுடன் மோதப் போய், ஜோர்ஜியாவுக்கு என்ன நடந்தது ? ஆகவே இவர்கள் மிலோசெவிச்சுக்கு நடந்தவற்றிலிருந்து பாடம் படிக்க வேண்டும் என்கிறார்.