அரச காணிகளைப் பெறுவதற்கான அவகாசம் 15 ஆம் திகதியுடன் நிறைவு

27

அரச காணிகளில் தொழில்முயற்சிகளையும் விவசாயத்தையும் முன்னெடுப்பதற்காக காணி தேவையுடையோருக்கு காணிகளை பெற்றுக் கொள்வதற்கான அவகாசம் 15 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.

இதற்கென தேவையுடைய இளைஞர்களுக்கு அரச காணிகளைப் பகிர்ந்தளிப்பதற்கான அதிகாரம் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது மாவட்டங்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காணிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சுய தொழில் முயற்சிகளை அபிவிருத்தி செய்ய ஆர்வமுடையவர்கள், உள்நாட்டு வெளிநாட்டுச் சந்தைகளில் ஆர்வம் காட்டுவோர், தற்போதுள்ள குடியிருப்புக் காணி நிரூபணத்தில் பிரச்சினை இருப்போர், தற்போதைய சுயதொழில் திட்டங்களை மேலும் அபிவிருத்தி செய்ய நினைப்போர் எவரும் இந்தக் காணிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். 18 -45 வயதுக்கிடைப்பட்ட எவரும் இதற்கென விண்ணப்பிக்க முடியும். குழுவாக இணைந்து கூட்டுப் பண்ணை, விவசாயம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பண்ணை, மீன்வளர்ப்பு, சிறு தொழிற்சாலைகள் போன்ற தொழில் முயற்சியாளர்கள் தமது பிரதேச செயலகத்தின் காணி அலுவலரைச் சந்தித்து பொருத்தமான அரச காணி விபரங்களைச் சேகரித்து தெளிவான திட்ட அறிக்கையை இணைத்து அனுப்ப முடியும். எல்லா மாவட்டங்களில் இருந்தும் விண்ணப்பங்களை அனுப்ப முடியும். விண்ணப்பதாரிகளின் திட்டம், நோக்கத்துக்கு ஏற்ப இடம் ஒதுக்கப்பட முடியும்.

இலங்கைக்குள் அரச காணிகள் இருக்கும் இடங்களில் அப்பகுதி பிரதேச சபையினூடாக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரிகள் தமது பிரதேச செயலகத்துக்கு அனுப்பும் விண்ணப்பப் படிவத்தின் பிரதியை காணி கேட்கும் பிரதேச செயலகத்துக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

ஒரு இலட்சம் ஏக்கர் காணித் துண்டுகளை இளைஞர்களுக்கு வழங்கி விவசாய உற்பத்தி உள்ளிட்ட சுய தொழில் வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு இணங்கவே இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.