சவூதி வெடிப்புக்கு பிரான்ஸ் கண்டனம்

65

முதலாம் உலக மகா யுத்த வீரர்களை நினைவு கூரும் வேளையில் சவூதியிலுள்ள சமாதிக்கு அருகில் நடந்த வெடிப்புச் சம்பவத்துக்கு பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

1914 – 1918 காலப்பிரிவில் நடந்த முதலாம் போரில் இறந்தவர்களை நினைவு கூரும் 102 வருட நினைவூட்டல் நிகழ்வுகள் உலகின் பல நாடுகளில் நடைபெற்று வரும் வேளையில் சவூதி ஜித்தாவில் இந்நிகழ்வு நடந்தபோதே வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் மூவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் சவூதி காவல்படையைச் சேர்ந்தவர் என்பதோடு அடுத்தவர்கள் கிரேக்க நாட்டையும் இங்கிலாந்தையும் சேர்ந்தவர்களாவர்.

சவூதி அரேபியாவில் முஸ்லிமல்லாதவர்களின் சமாதிகளுக்கு முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த ஞாபகார்த்த நிகழ்வில் பல நாடுகளையும் சேர்ந்த ராஜதந்திரிகள் கலந்து கொண்டிருந்தனர். வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பிரான்ஸ், கிரேக்கம், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகள் கூட்டான கண்டன அறிக்கையை வெளியிட்டிருந்தன. தாக்குதலுக்கு எந்தத் தரப்பிலிருந்தும் உரிமை கோரப்படவில்லை.

பிரான்ஸில் இஸ்லாம் தொடர்பான ஜனாதிபதி மக்ரோனின் கருத்துக்களை சவூதி அரேபியா கண்டித்ததோடு நைஸில் நடந்த தாக்குதலையும் கண்டித்திருந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தை அடுத்து சவூதியிலுள்ள பிரான்ஸ் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு பிரான்ஸ் தூதரகம் கோரியிருந்தது.