அரசாங்கம் அனுமதித்த 25 பேருக்கு மட்டுமே ஜும்ஆ தினத்திலும் அனுமதி

0
178

மேல் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் ஜும்ஆத் தொழுகை நடத்துவதில் முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களம் ஏற்கனவே விடுத்துள்ள வழிகாட்டல்களின் அடிப் படையில் நடந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உதவிப் பொதுச்  செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். தாஸிம் தெரிவித்தார்.

வக்ப் சபை மற்றும் முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களப் பணிப்பாளர் வெளியிட்டிருந்த வழிகாட்டலில் எல்லா பள்ளிவாசல்களிலும் எந்த நேரத் திலும் அதிக பட்சம் 25 நபர்களை மாத்திரமே அனுமதித்தல், அவ்வாறு 25 நபர்களை தேர்ந்தெடுக்கும் முறை ஜமாத்தினருக்கு முன்னரே அறிவிக்கப்பட வேண்டும் என்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அந்த வகையில் நாளைய ஜும்ஆ நாளும் 25 பேருக்கு மட்டுப்படுத்தப் பட்டதாக அமையும். “எண்ணிக்கை குறைவாக இருப்பதனால் பள்ளிவாசல்கள் ஜும்ஆத் தொழுகைக்குப் பதிலாக ளுஹர் தொழுகையை நடத்திக் கொள்ள முடியும்” என அஷ்ஷெய்க் தாஸிம் தெரிவித்தார்.

ஜும்ஆத் தொழுகையின் போதும் ஏனைய வணக்க வழிபாடுகளின் போதும் அரசாங்கத்தின் சுகாதாரத் துறை வழங்கியுள்ள வழிகாட்டல்களின் அடிப்படையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கியுள்ள வழிகாட்டல்களும் அறிவுறுத்தல்களும் கண்டிப்பாகப் பேணப்பட வேண்டும் எனவும் உலமா சபையின் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் தாஸீம்  தெரிவித்தார்.