மையத்துக்களுக்காக ஒலிக்கும் குரல்கள்

40
  • லத்தீப் பாரூக்

ஊழல் நிறைந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் அதே சர்ச்சைக்குரிய மத அமைப்புக்களுக்கும் இடையில் சிக்கித் தவிக்கின்ற குரலற்ற நாதியற்ற முஸ்லிம் சமூகம், கொரோனா வைரஸால் இறந்த முஸ்லிம்களை எரிக்க வேண்டாம், அடக்கம் செய்வதற்கு அனுமதி கொடுங்கள் என்று பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் அரசாங்கம் அவற்றை அலட்சியப்படுத்தியதையிட்டு ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறது.

சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் வெளிப்படுத்தி வரும் கருத்துக்கள் கௌரவமான இறுதிச் சடங்குக்கான உரிமை நாகரிமடைந்த எந்தச் சமூகத்தினதும் அடிப்படை உரிமை என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன. இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையிலன்றி முஸ்லிம்கள் வேறெந்த விஷேட சலுகைகளையும் வேண்டி நிற்கவில்லை. கண்ணியமாக அடக்கம் செய்வதற்கென உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள உரிமையைத் தான் அவர்கள் கேட்கின்றார்கள்.

உலகில் 180 க்கு மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸினால் இறந்தவர்கள் அடக்கம் தான் செய்யப்படுகிறார்கள் என உலக சுகாதார அமைப்பு கூறுகின்றது. இந்த நிலையில் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் துயரத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த அரசாங்கம் ஜனாஸாக்களை எரிக்க விரும்புவது ஏன் என்பது தான் முஸ்லிம் சமூகத்தால் புரிந்து கொள்ள முடியாததாகவிருக்கிறது.

ஒரு சமூக செயற்பாட்டாளரின் முறைப்பாடு

சமூகத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் தெஹிவலையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஹிழ்ர் ஸித்தீக் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

கௌரவ ஜனாதிபதி அவர்களே,

எனது மரணத்தின் பின்னர் எரியும் உன் உடலின் வேதனையை நான் அறியமாட்டேன். ஆனால் எனது பிள்ளைகளும் எனது மனைவி மற்றும் குடும்பத்தினரும் எனது சமூகமும் நிச்சயமாக இதன் வலியை உணர்வார்கள். எரிப்பது ஒன்றுதான் வைரஸைக் கொல்வதற்கான ஒரே தீர்வு, அடக்கம் அல்ல என்பது நிரூபிக்கப்படாவிட்டால், அவர்கள் ஒருபோதும் தவறு செய்தவர்களை மன்னிக்க மாட்டார்கள்.

இலங்கை உலகின் அனைத்து மதங்களாலும் கலாச்சாரங்களாலும் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு. இந்த வளமான பாரம்பரியம் ஒரு தேசத்தின் செல்வம் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன். முஸ்லிம்களது உடலை எரிக்கும் உங்களது தீர்மானத்தை மாற்றிக் கொள்வீர்கள் என்றும் நம்புகிறேன். எரிக்கப்பட்ட உடல்கள் இறைவனின் நாட்டத்தால் சுவர்க்கத்தை அடைந்து கொள்ளும் என்றும் நான் நம்புகிறேன். எனவே இது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால் இந்தத் தவறைச் செய்தவர்களுக்கு அப்படியல்ல.

அனைத்துச் சமூகங்களினதும் அடிப்படை மதச் சடங்குகளை மதித்து அனைத்து இலங்கையர்களையும் சமமாகவும் நியாயமாகவும் நடத்துவதன் மூலம் ஒவ்வொரு பிரஜையினதும் மனத்தை வெல்வது தங்களது பொறுப்பாகும்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் வேண்டுகோள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருப்பதாவது,

இன்று பதிவு செய்யப்பட்ட இருபதாவது கொவிட் மரணமும் அதற்கு முந்திய இரு மரணங்களும் முஸ்லிம்களுடையது என்பதும் அவர்களது உடல்கள் எரிக்கப்பட்டன என்பதும் வேதனையளிக்கிறது. இந்தத் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை முஸ்லிம் சமூகம் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு வழங்கியே வந்திருக்கிறது.

உலகெங்கிலும் நடைமுறையில் உள்ள சர்வதேச விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்குகளுக்கு ஏற்ப இறந்தவர்களை கண்ணியமாக அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதனையே நாங்கள் கேட்கிறோம். இவை அனைத்துக்கும் மாற்றமாக இலங்கைச் சுகாதார விதிமுறைகள் ஏன் செயற்படுகின்றன ?

இந்த விவகாரம் தொடர்பில் அதிகாரிகள் ஒத்துழைக்காமையைக் கருத்திற் கொண்டு நானும் இன்னும் பலரும் கடந்த மே மாதம் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களைச் சமர்ப்பித்திருந்தோம். சுகாதார அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர், சட்டமாஅதிபர் உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாகக் குறி்ப்பிடப்பட்டிருந்தனர்.

வழக்குகள் குவிந்திருப்பது தெரிந்த விடயமே. ஆதலால், கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை அடக்கம் செய்வது உலகெங்குமுள்ள நடைமுறை என்ற வகையில் பலவந்த எரிப்பு தொடர்பான நிலைப்பாட்டை மாற்றியமைத்துக் கொள்ளுமாறும், அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மதச் சுதந்திரத்தை மதிக்குமாறும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, நீதியமைச்சர் அலிசப்ரி ஆகியோருக்கு மனிதாபிமான அடிப்படையில் அவசர அவசரமாக பொது வேண்டுகோள் ஒன்றை விடுக்கிறேன்.

மேலும் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர், தமது செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டே அமையும் என பாராளுமன்றத்தில் தெரிவித்தார்கள். பின்கதவு டீல் எதுவுமின்றி எமது சமூகத்தின் சிறந்த நலன்களை நீங்கள் உண்மையிலேயே மனதில் வைத்திருந்தால், ஏன் நீங்கள் எரித்தல் விவகாரத்தை உரிய இடத்தில் முன்வைக்கவில்லை என்று உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.

ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் நான் கேட்கிறேன், தயவு செய்து இந்த விடயத்தில் மட்டுமாவது உங்களது குறுகிய தனிப்பட்ட அபிலாஷைகளை ஒதுக்கி வையுங்கள். நான் உங்களில் சிலருடன் பிரச்சாரங்களில் ஈடுபட்டவன் என்ற வகையில், இந்தச் சிக்கலைத் தீர்ப்பதாக உங்களது உறுப்பினர்களுக்கு நீங்கள் அளித்த வாக்குறுதிகளை நான் அறிவேன். எனவே இதற்கு முன்னுரிமை வழங்குமாறும் எங்களைக் கைவிட வேண்டாம் என்றும் உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

பதின்மவயதுச் சிறுமியொருவரின் வேண்டுகோள்

இதனிடையில் பதின்மவயதின் வாசலில் ஒருக்கும் ஒரு சிறுமி ஒரு வீடியோ கிளிப்பில் வெளியிட்டுள்ள உணர்ச்சிபூர்வமான முறையீட்டில், ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ மாமாவுக்கு ஓர் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். கொரோனா வைரஸால் இறக்கின்ற முஸ்லிம்களை எரிக்க வேண்டாம், இஸ்லாமிய மதச் சட்டங்களின்படி அவர்களை அடக்கம் செய்ய அனுமதியுங்கள் என்று அவர் வேண்டுகிறார்.

முஸ்லிம்களுடைய ஜனாஸாவை அடக்குவதா எரிப்பதா என்பது தொடர்பில் கடந்த வாரங்களில் தனது வீட்டில் வாதங்கள் நடைபெற்று வருவதாகவும், இதனால் இந்தப் பணிவான வேண்டுகோளை ஜனாதிபதி கோதாபயவிடம் முன்வைக்க தானே சுயமாக முடிவு செய்ததாகவும் அந்தச் சிறுமி கூறுகிறார்.

சிங்கள தேசியவாதத்துக்கு மட்டுமான அரசாங்கமொன்றை அதிகாரத்துக்குக் கொண்டுவர விரும்பிய இனவாதச் சக்திகளைத் திருப்திப்படுத்துவதற்கே இந்த முடிவு என முஸ்லிம்களில் சிலர் தெரிவிக்கின்றனர்.

உலமா சபை எங்கே ?

சமய விவகாரங்கள் அனைத்திலும் முஸ்லிம் சமூகத்தின் மீது இரும்புப் பிடியைக் கொண்டிருக்கின்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, அவ்வப்போது அது உருவாக்குகின்ற சர்ச்சைகளுக்கு மேலதிகமாக அரசியலிலும் மூக்கை நுழைவித்து அதன் பாரம்பரிய மதப் பாத்திரத்திலிருந்து விலகி இப்போது எங்கே போய்விட்டது ?

உலமா சபையின் தலைவர்கள் எல்லாம் ராஜபக்ஷ அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கு ஜெனீவா சென்று அவர்களுடன் உறவுகளை நெருக்கமாக்கிக் கொண்டார்கள். அவர்கள் கொண்டாடிய தேனிலவை சமூகம் அறிந்து வைத்திருக்கிறது. கொரோனா வைரஸினால் மரணிக்கின்ற முஸ்லிம்கள் எரிக்கப்படும் போது மௌனமாக இருப்பதை விட அவர்களை அடக்கம் செய்ய வேண்டியதன் அவசியத்தை ஏன் இவர்களால் எடுத்துச் சொல்ல முடியாதுள்ளது ?

ஜம்இய்யதுல் உலமா ஒரு சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டது, சிலவேளை அது அரசாங்கத்தைத் திருப்திப்படுத்துவதற்காக இருக்கலாம். ஆனால் தென்னாபிரிக்க முஸ்லிம் உட்பட பல்வேறு தரப்புக்களில் இருந்தும் கடந்த மே மாதம் வெளிவந்த பலமான எதிர்ப்புக்களைத் தொடர்ந்து அந்த அறிக்கைக்கு மாற்றமான மற்றுமொரு அறிக்கையை வெளியிட்டது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் நிலைப்பாடு

கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான கட்டுப்பாடுகள் எனக் காட்ட  முடியும் என்பதைத் தவிர, சிறுபான்மையினரின் உறவுகளின் இறுதிச் சடங்குகளை தமது சொந்த மரபுகளுக்கு ஏற்ப நிறைவேற்றுவதற்கான உரிமையை இலங்கை அதிகாரிகள் மதிக்க வேண்டும் என ஏப்ரல் முற்பகுதியில் சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டிருந்தது.

இலங்கையின் முஸ்லிம் சிறுபான்மைச் சமூகம் அரசாங்க அதிகாரிகளால் இலக்கு வைக்கப்படுகின்றன என்ற அச்சத்தை இந்தப் பலவந்த எரிப்புக்கள் மீண்டும் எழுப்பியுள்ளன. மத மற்றும் கலாச்சார உணர்வுகளுக்கு மதிப்பளித்து சர்வதேச வழிகாட்டல்களின் அடிப்படையில் மதச் சடங்குகளும் நடைமுறைகளும் மதிக்கப்படுவதை உறுதி செய்யும்படி சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதோடு, இந்த வழிகாட்டுதல்களில் செய்யப்படும்  எந்த மாற்றங்களும் பாதிக்கப்பட்ட சமூகத்தின் ஆலோசனையுடனேயே நடைபெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இந்த இக்கட்டான தருணத்தில் அதிகாரிகள் சமூகங்களை ஒன்றிணைக்க வேண்டும், அவர்களுக்கிடையே பிளவுகளை ஆழப்படுத்தக் கூடாது எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.