நீங்கள் பறித்ததைத் திருப்பிக் கொடுங்கள்

71
  • மாஸ் யூசுப்

பிரெஞ்சு எழுத்தாளரும் தாராளவாதியுமான பிரடெரிக் பஸ்டியாட் எழுதிய பிரபல நூலான “த லோ” வின் “சட்டம் களவுகளைப் பாதுகாக்கிறது” என்ற அத்தியாயத்தில் “சில சமயங்களில் சட்டமானது நீதிபதிகள், பொலிஸ், சிறைச்சாலை, காவல்துறை அனைத்தையும் கொள்ளைக்காரர்களுக்குச் சேவை செய்ய விட்டு விட்டு, தன்னைத் தற்காத்துக் கொள்ள முனையும் பாதிக்கப்பட்டவனை குற்றவாளியாக்குகிறது” எனக் குறிப்பிடுகிறார்.

ஏனையவர்களைப் போலவே முஸ்லிம்களும் அனைத்துப் பிரஜைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துகிறார்கள். அத்தகைய உரிமைகளில் ஒரு பகுதியான மதத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உரிமை, இன்னும் குறி்ப்பாகச் சொல்வதென்றால், அவர்களின் மதம் போதித்துள்ளபடி மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு வழங்கியுள்ள இந்த உரிமையை மீண்டும் நிலைநாட்டுவதற்கென அவர்கள் அதிகாரிகளுடன் கலந்துரையாடும் போது முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. சிலவேளைகளில் அவர்களைத் தீவிரவாதிகள் என்று அழைக்கும் அளவுக்குக் கூட.

1850 இல் பிரடெரிக் பஸ்டியாட் கூறியது உண்மை என்பது இன்று தெளிவாக விளங்குகிறது.

அரசியலமைப்பு என்பது அரசாங்கத்துக்கும் குடிமக்களுக்கும் இடையிலான உடன்படிக்கையாகும். அரசியலமைப்பின் பிரிவு (அ) மற்றும் (இ) இன்படி,

(அ) அரசியலமைப்பையும் சட்டத்தையும் நிலைநிறுத்துவதும் பாதுகாப்பதும்,

(ஆ) மற்றவர்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் மதிப்பதும்

இலங்கையில் உள்ள ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.

ஹட்ட நம லக்ஷய

அனைத்துக் குடிமக்களுக்கும் வாழ்வதற்கும் சுதந்திரம் மற்றும் சொத்துக்களுக்குமான  உரிமை கிடைக்கப் பெறுவதை உறுதி செய்வதே அரசு ஒன்றின் குறிக்கோளாகும். அடிப்படை உரிமைகள் இதில் முக்கியமானவையாகும். அத்தியாயம் மூன்றில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் புனிதமான உரிமைகளில் சிறிதளவு கூட குறுக்கீடுகள் ஏற்படாமல் அதனைப் பாதுகாப்பதும் நிலைநிறுத்துவதும் ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும். ஹட்ட நம லக்ஷயவும் (69 இலட்சமும்) அரசாங்கத்தையும் ஆட்சியையும் ஏகபோகப்படுத்த அனுமதிப்பது ஜனநாயகத்துக்கும் ஜனநாயகக் கொள்கைகளுக்கும் முற்றிலும் முரணானது.

எல்லோருக்கும் சொந்தமான அரசியலமைப்பையும் சட்டத்தையும் நிலைநிறுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமாக முஸ்லிம்களை தீவிரவாதிகள் என அழைப்பது வேடிக்கையாக இல்லையா ?  அரசியலமைப்பு வலியுறுத்தியுள்ள “மற்றவர்களின் உரிமையையும் சுதந்திரத்தையும் மதிக்க வேண்டும்” என்ற கடமை மக்களின் ஒரு பிரிவினரால் ஏன் மீறப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கிறது. அனைவருக்குமான சட்டத்தைப் பாதுகாப்பதற்கு அவர்கள் முற்படும் போது ஏன் தனியான சட்டமொன்றை அவர்கள் வேண்டுகிறார்கள் எனப் பொய்யானதும் பிழையானதுமான பிரச்சாரமொன்றை முன்னெடுக்க வேண்டும் ? அரசியலமைப்பை நிலைநிறுத்துவதும் பாதுகாப்பதுமான இந்த விவகாரத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என இந்த 69 இலட்சமும் நினைத்திருக்கக் கூடாதா ? தமது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்புகின்ற முஸ்லிம் அல்லாதவர்கள் பலரும் இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடத் தொடங்கியிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன செய்யக் கூடாது என்பது தெரியாமல் நமது பெரிய சமூகம் குழம்பிப் போயிருப்பதாகத் தெரிகிறது. புத்திஜீவிகள், கல்வியியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் மௌனம் பெருமளவில் கேள்விக்குரியதாகிறது.

பொதுச் சுகாதார காரணங்களுக்காக சட்டம் திருத்தப்பட்டது என்ற கருத்து சரியானதும் நியாயமானதுமான வாதமாகும். பொது நன்மை ஒன்றுக்காக சில சமரசங்கள் தவிர்க்க முடியாதவை என்பதில் சந்தேகமில்லை.  நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் எதனையும் முஸ்லிம்கள் முழுமனதுடன் ஒப்புக் கொள்வார்கள் என்பதிலும் சந்தேகத்துக்கிடமில்லை. அவர்கள் விருப்பத்துடன் ஒத்துழைத்து ஆதரவளிப்பார்கள். ஆனால் கிளர்ச்சியெல்லாம் செய்ய மாட்டார்கள்.

அறிவியல் மற்றும் அனுபவச் சான்றுகள்

இந்தப் பத்தியில் தொற்றுநோயியல், வைரோலொஜி, மூலக்கூற்று மரபியல், நிலக்கீழ் நீர், கனியவளஅறிவியல், வைரஸின் தாக்கம், அதன் பெருக்கம் என எந்தத் துறையினதும் ஆற்றல் பற்றியோ எதிர்வுகூறல் பற்றியோ உள்ள சிக்கலான விடயங்களை வாதிக்கவரவில்லை. ஏனெனில் கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்ட உடல்களை அடக்கம் செய்வது உடல்களை அப்புறப்படுத்துவதற்கான பாதுகாப்பான முறை என்பதற்கு சந்தேகத்துக்கிடமின்றிய போதுமான சான்றுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. உலகெங்கிலுமுள்ள இலட்சக்கணக்கான புதைகுழிகளும் அனுபவங்களும் இதற்கான மறுக்க முடியாத தெளிவான சான்றுகளாக விளங்குகின்றன.

பௌதீக புவியியல் கண்ணோட்டத்தில் பார்த்தாலும், மாறுபட்ட காலநிலைகளிலும் வெவ்வேறு புவியியல் நிலைமைகளிலும் ( மண், நீர், மக்கள் செறிவு) இவற்றுக்கு இணையான எந்த நிலைமைகளிலும் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. மருத்துவ அறிவியல் நோக்கில் பார்த்தாலும் வைரஸுடைய இயல்பு, வடிவம், வீச்சு தொடர்பான தரவு மையப்படுத்திய அறிவியல் சான்றுகள், உலக மருத்துவ விஞ்ஞானிகளால் துல்லியமாக ஆராயப்பட்டுள்ளன. கொவிட் 19 வைரஸுடைய கட்டமைப்பு, வகைப்படுத்தல், அதனுடைய பரிணாமம், தொற்றும் விதம், பெருகுவதற்கான சந்தர்ப்பங்கள், அதனை அழித்தல், தாக்கத்தைக் கட்டுப்படுத்தல் பற்றி அனைத்தும் தீவிரமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு தகவல்கள் கிடைக்கத்தக்கதாக இருக்கின்றன.

உலகின் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார நிறுவனங்களுக்கும் சுகாதாரத் துறையில் முன்னேறிய நாடுகளுக்கும் கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்வதில் எந்தப் பிரச்சினைகளுமில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய நிறுவனமான உலகின் சுகாதார உயர்பீடமான உலக சுகாதார அமைப்பு இத்தகைய உடல்களை அடக்கம் செய்வதில் எந்தப் பிரச்சினையுமில்லை என்கிறது. கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்ட உடலை அகற்றுவதில் உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள வழிகாட்டலில் அடக்கம், தகனம் இரண்டையும் அனுமதிக்கிறது.

பாரபட்சம்

நியாயமற்றதாக இருந்தாலும் அது ஒரு முஸ்லிமுக்கு நடந்தால் பரவாயில்லையா ? அல்லது ஒரு முஸ்லிமுக்கு ஏதும் நன்மை விளைந்தால் பல்லைக் கடிக்கிறீர்கள், அவர்களுக்கு ஏதும் தீங்கு விளைந்தால் சந்தோஷப்படுகிறீர்கள், அப்படியா ? வயது முதிர்ந்த ஒரு அரசியல்வாதியின் டுவீட்டை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இலங்கைப் பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஏப்ரல் 03 இல் வெளியிட்ட டுவீட்டில், “ கொவிட் 19 உம் இனவாதமும் இரண்டுமே ஆட்கொல்லி தொற்று நோய்கள். இரண்டுமே அவற்றால் பீடிக்கப்படுபவர்களை நோயாளியாக்குகின்றன. ஆனால் நாங்கள் ஒன்றை மூடுகின்றோம், இன்னொன்றுக்கான வாயிலைத் திறந்து விடுகிறோம். இதிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி தனிநபர்களாகவும் தேசமாகவும் இணைந்து இவற்றுக்கான நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதாகும். இந்த மீட்புப் பணிக்கு ஊடகங்கள் ஒத்துழைக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஏப்ரலில் அவர் கூறிய கருத்தில் இன்றும் உண்மைகள் இருக்கின்றன. இந்த வாதத்திலுள்ள அவலம் என்னவென்றால் 69 இலட்சமும் அரசியலமைப்பைப் பாதுகாப்பதில் ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை. ஆனால் முஸ்லிம்களை இம்சிப்பதில் பிஸியாக இருக்கின்றனர். கேட்கின்ற கேள்விகள் புலனாய்வுத் துறையினரையே பின்னடையச் செய்பவையாக இருக்கின்றன. சில முக்கியமான கேள்விகளாக,

  1. முஸ்லிம்களுக்கு அடக்க அனுமதித்தால் சிங்கள பௌத்தர்களுக்கும் அடக்குவதற்கு கிடைக்குமா ?
  2. முஸ்லிம்களுக்கு அடக்கம் செய்ய அனுமதித்தால், சிங்கள பௌத்தர்கள் இறந்தவர்களுக்குச் செய்யும் பான்சகுல மற்றும் பிற சடங்குகளுக்கு அனுமதிக்கப்படுவார்களா ?
  3. ஏன் முஸ்லிம்கள் அடக்கம் செய்வதற்கான தனியான சட்டமொன்றைக் கேட்கிறார்கள் ?

இவற்றுக்கான சுருக்கமான பதில்,

  1. அடக்கம் என்பது தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தினால் கையாளப்படுகிறது. இந்த ஒழுங்குவிதி அனைத்து இலங்கையர்களுக்கும் பொருந்தும். முன்னைய ஒழுங்குவிதியை அமுல்படுத்தினால் அது அனைத்து இலங்கையர்களையும் உள்ளடக்கும்.
  2. முஸ்லிம்களும் அடக்கம் செய்யக் கோரும் ஏனையவர்களும் இறுதிக் கிரியைகளைச் செய்வதற்கான அனுமதியைக் கேட்கவில்லை. தொற்று நிலைமை காரணமாக அவற்றை அவர்கள் நிறைவேற்றப் போவதுமில்லை.
  3. முஸ்லிம்கள் தனிச்சட்டமொன்றைக் கேட்கவில்லை. தொற்று நோய்க்கு முன்னர் முஸ்லிம்களும் ஏனையவர்களும் தங்கள் இறந்தவர்களை அடக்கம் செய்பவர்களாக இருந்தனர். சில பௌத்தர்களும் இதனைப் பின்பற்றினார்கள். புதிய விதிமுறைகள் ஆயிரக்கணக்கான வருடங்களாக பின்பற்றி வந்த ஒரு நடைமுறையை அவர்களுக்கு இழக்கச் செய்தன. நீங்கள் எங்களிடமிருந்து பறித்ததை திருப்பித் தாருங்கள் என்று தான் முஸ்லிம்களும் அடக்கம் செய்ய விரும்புபவர்களும் கேட்கிறார்கள். நாங்கள் புதிதாக எதையும் கேட்கவில்லை.

நீயும் வெற்றி – நானும் வெற்றி

முஸ்லிம்களின் இறுதிச் சடங்கு என்பது தனது அன்புக்குரியவர்களை கண்ணியமாக வழியனுப்பும் எளிய வடிவமாகும். இதில் பெரிய சடங்குகள், மரபுகள், உடலை எம்பாம் செய்தல், நீண்ட நாட்கள் வைத்திருத்தல், மூட நம்பிக்கைகள் எதுவும் அடங்காது. இறுதி நிலை எளியது, தெளிவானது. அடக்கம் பாதுகாப்பானது என்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட, ஏற்றுக் கொள்ளப்பட்ட சான்றுகள் இருக்கின்றனவா ? விடை ஆம் என்றால் அடக்கம் செய்ய அனுமதியுங்கள். இதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் இரு தரப்பும் வெற்றியடையக் கூடிய தீர்வொன்றைக் கண்டறியுங்கள். பல அடுக்குகளினாலான சீல் பைகள், கிருமிநாசினிகள், சீல் செய்யப்பட்ட சவப்பெட்டிகள், ஆழமான புதைகுழிகள் எனப்பலவாறு இவை அமையலாம். சட்டம் பாரபட்சங்களாலும், தனிநபர் விருப்பு வெறுப்புக்களாலும் தவறான உணர்வுகளாலும் சிதைக்கப்பட இடமளிக்கக் கூடாது.

“நல்லதும் நியாயமும் பலத்தாலும் மோசடியாலும் அடையப் பெற்றால் அது கெட்டதாகவும் அநியாயமாகவும் மாறும்“ (3 கோக், 78)

சட்டத்தின் நோக்கம் நீதி ஆட்சி செலுத்துவதாகும். எனவே அநீதி ஆட்சி செய்வதைத் தடுக்க வேண்டும். பொது ஒழுங்குகள் தார்மீக ஒழுங்குகளால் பிறந்தவை. தார்மீக ஒழுங்கு மதத்திலிருந்தே பிறப்பெடுக்கிறது.