டிரம்புக்கு மற்றுமொரு தோல்வி, பைடனுக்கு மேலும் சில வெற்றிகள்

0
20

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமுமில்லை என தேர்தல் பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து தேர்தல் தொடர்பான அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பின் இரு குழுக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தோ்தலில் முறைகேடுகள் நடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. வாக்குகள் அழிக்கப்பட்டதற்கோ, காணாமல் போனதற்கோ, எந்த வகையிலும் மாற்றப்பட்டதற்கோ ஒரு ஆதாரம் கூட இல்லை. 3-ஆம் திகதி நடைபெற்ற தோ்தல்தான் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பாக நடைபெற்றுள்ள ஜனாதிபதி தோ்தலாகும்.

அனைத்து மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகும், அந்த மாகாண அதிகாரிகளுடன் உரிய பதிவுகள் கையிருப்பு இருக்கும். எனவே, யாா் எப்போது வேண்டுமானாலும் அந்த ஆவணங்களை ஆய்வு செய்து தோ்தல் முடிவுகளை சரிபாா்க்க முடியும். தேவைப்பட்டால், ஒவ்வொரு வாக்கையும் மீண்டும் எண்ணவும் முடியும். இது, தோ்தல் பாதுகாப்புக்கும் மறு ஆய்வுக்கும் ஏற்ற சூழலை உருவாக்கியுள்ளது. நடந்து முடிந்த தோ்தல் குறித்து ஆதாரமில்லாமல் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கப்படுகின்றன. மேலும், தோ்தல் முறை குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதற்கான வாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன.
இந்தச் சூழலில், தோ்தல் மிகவும் பாதுகாப்பான முறையில் நடந்தது என்பதை அனைவரும் உறுதியாக நம்பலாம் என்று அந்தக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு தகுதி பெற்றுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், நேற்று அரிசோனா மற்றும் ஜோர்ஜியா மாநிலங்களையும் வென்றுள்ளார். இதன்மூலம், அமெரிக்க தேர்தலின் ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்த இறுதி தேர்தல் சபை வாக்குகளின் எண்ணிக்கை 306 ஆக உயர்ந்துள்ளது. வட கரோலினாவை வென்றதுடன் டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கான தேர்தல் சபை வாக்குகள் 232 ஆக உயர்ந்துள்ளது.

2016 தேர்தல்களில் டொனால்ட் ட்ரம்ப் 306 தேர்தல் தொகுதி வாக்குகளைப் பெற்றபோது, அப்போதைய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் 232 தொகுதி வாக்குகளை வென்றிருந்தார். 2016 இல் ட்ரம்ப் வென்ற ஜோர்ஜியா, அரிசோனா, மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய ஐந்து மாநிலங்கள் இம்முறை பைடனை நோக்கி திரும்பியுள்ளன. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜோ பைடன் ஜோர்ஜியாவில் வெற்றி பெற்ற முதல் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஆவார். கடைசியாக 1992 ஆம் ஆண்டில் பில் கிளிண்டன் வெற்றி பெற்றிருந்தார்.