பட்டிகலோ கம்பஸுக்கு முன்னாள் ஜனாதிபதியே காணி வழங்கினார்

0
29

பட்டிகலோ கம்பஸ் நிர்மாணத்துக்கென மகாவலி காணியை முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாஹ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது வழங்கினார் என ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று முன்தினம் (13) சாட்சியமளித்த மகாவலி அபிவிருத்தி அதிகார சபைப் பணிப்பாளர் அசங்க குமார தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஹிரா பௌன்டேசனின் ஸ்தாபகரான ஹிஸ்புல்லாஹ், 2012 மார்ச் 15 இல் மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை தொழிற்பயிற்சி நிலையமொன்றை நடத்துவதற்காக கேட்டிருந்தார். அதற்காக விண்ணப்பிக்குமாறு அவரிடம் கேட்கப்பட்ட போது அவர் சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் அந்த நிலையத்தை அமைப்பதற்காக 35 ஏக்கர்களைக் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதற்குப் பொருத்தமான இடமொன்றில் காணியைப் பார்க்குமாறு அமைச்சர் சிரிசேன அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வாவுக்கு உத்தரவிட்டிருந்தார். பின்னர் 35 ஏக்கர் காணி பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்துடன் குத்தகை அடிப்படையில் ஹிரா பௌண்டேஷனுக்கு வழங்கப்பட்டது. இது ஹிரா பௌன்டேஷனின் பெயரில் எழுதப்படுவதற்கான சட்டபூர்வ ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டன. சமூக சேவைத் திணைக்களத்தில் அது பதிவு செய்யப்பட்டிருப்பதற்கான ஆவணங்களை அவர்கள் சமர்ப்பித்தனர எனவும் அவர் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துகின்ற ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று முன்தினம் முதல் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுடன் தொடர்புடைய ஹிரா பௌண்டேஷன் தொடர்பில் விசாரித்து வருகின்றனர்.