#Dead Body Matters#

38
  • பியாஸ் முஹம்மத்

அரசியலுக்கும் அறிவியலுக்கும் இடையில் அல்லல்படுகின்றன இலங்கையில் மரணிக்கும் உடல்கள். கொவிட் 19 மரணங்கள் 50 ஐத் தாண்டியும் இறந்த உடல்களை என்ன செய்வது என்பது தொடர்பில் இலங்கையிடம் இதுவரை தீர்க்கமான முடிவில்லை. கடவுளே கலங்கி நின்றது போல 20 ஆம் திருத்தத்தின் மூலம் அசுர பலம் பெற்ற பின்னரும் இந்த விடயத்தில் முடிவெடுக்க முடியாமல் ஜனாதிபதி திக்குமுக்காடுகிறார். மேல்மாகாண ஊரடங்குச் சட்டத்தை நீக்க வேண்டாம் என சுகாதாரத் துறை அறிவுரை வழங்கியதையும் மீறி ஊரடங்கைத் தளர்த்திய அரசாங்கம், கொரோனாவால் மரணித்த உடல்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு சுகாதாரத் துறையின் வழிகாட்டலை எதிர்பார்த்திருக்கிறது. சுகாதாரத் துறை இதற்கான நிபுணத்துவக் குழுவொன்றை நியமித்து அதனுடைய அறிக்கை வரும் வரை எதிர்பார்த்திருக்கிறது. அந்த அறிக்கை விரைவில் வருமா என்பது தொடர்பில் நம்பிக்கை வைக்கும் நிலை இல்லை. ஈஸ்டர் தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பதை விசாரிக்கும் குழுவினர் ஒருவருட காலமாகியும் இன்னும் அறிக்கை முன்வைக்கவில்லை. பிரான்டிக்ஸ் கொத்தணி யார் மூலம் உருவாகியது என்பதை விசாரிக்கும் குழு கொத்தணி பிரான்டிக்ஸில் இருந்து மீன் சந்தைக்கு மாறி அங்கிருந்து சிறைச்சாலைக்கு மாறியும் இன்னும் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி சொன்ன அவர்கள் காணாமலாகி விட்டார்கள், இனி அவர்களைப் பற்றிப் பேசிப் பயனில்லை என்பதை வைத்துப் பார்க்கும் போது இறந்தவர்கள் தொடர்பில் இந்த அறிக்கைகளை எதிர்பார்த்திருப்பதால் என்ன வந்துவிடப் போகிறது என்ற நப்பாசை தான் எஞ்சுகிறது.

இறந்த உடல்களை அப்புறப்படுத்துவது தொடர்பில் உலக சுகாதார உயர்பீடமான உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள வழிகாட்டல்களை இலங்கையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய்வதற்கென அரசாங்கம் நியமித்துள்ள நிபுணத்துவக் குழு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும் இவற்றையெல்லாம் கையாளக் கூடிய நிபுணர்கள் இலங்கையின் சுகாதாரத் துறையில் இருக்கிறார்களா என்ற கேள்வி மக்களிடையே கொரோனா விட வேகமாகப் பரவிவருகிறது. இங்கு இலங்கையின் மருத்துவத்துறையை மருத்துவர்களின் புலமையை நான் கேள்விக்குப்படுத்தவில்லை. ஆனாலும் அரசியலுக்கு முன்னால் அறிவியல் தோற்றுப் போய்விட்டதா என்ற மக்களின் நியாயமான அச்சத்தையே முன்வைக்கிறேன்.

ஒரு மீட்டர் சமூக இடைவெளியில் பரவாத வைரஸ் எப்படி அண்ணளவாக மூன்று மீட்டர் ஆழமான குழிக்குள் பரவும், கொரொனா தொற்றாளர் பாவித்த நீரில் கலக்காத வைரஸ், எப்படி எட்டடி ஆழமான குழியிலுள்ள தண்ணீருடன் கலக்கும் என இதுபோன்ற பல கேள்விகளுக்கு இலங்கையின் மருத்துவத் துறையால் பதிலளிக்க முடியாமல் போகுமானால் கொரோனா மக்கள் மத்தியில் இலங்கையின் மருத்துவத்துறை பற்றிய நம்பிக்கையீனத்தை விதைத்து விடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.

தற்போது அதிகம் பேசப்படுகின்ற பேராசிரியர் மெத்திக விதானகே வெளியிட்டுள்ள கொரோனா வைரஸ் நிலக்கீழ் நீருடன் கலக்கும் என்ற கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.  பேராசிரியர் மெத்திகா விதானகே நீரியல் துறையில் கலாநிதிப் பட்டத்தை முடித்தவர். இயற்கை வளங்கள் தொடர்பிலான பேராசிரியர். ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் சுற்றுச் சூழல் மறுசீராக்க ஆராய்ச்சி மையத்தின் (Ecosphere Resilience Research Centre) பணிப்பாளர். கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்ட உடல்களை அப்புறப்படுத்துவது தொடர்பிலான நிபுணத்துவக் குழுவில் இவரும் ஓர் அங்கத்தவர். சமூக ஊடகமொன்றுடன் இவர் நடத்திய உரையாடலில், இலங்கையில் ஏராளமான நீர் மூலங்கள் இருக்கின்றன. இந்த உடல்களை அடக்கம் செய்வதால் இதிலிருந்து வெளியேறும் திரவம் ஆறுகள், ஓடைகள், கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளிலுள்ள தண்ணீருடன் கலப்பது தவிர்க்க முடியாதது என்கிறார். இறந்த ஒருவரின் உடம்பில் ஒரு கிலோவுக்கு ஒரு லீட்டர் திரவம் இருக்கிறது. இதனால் தான் நாங்கள் உடலை அடக்கம் செய்ய வேண்டாம் என்கிறோம் என அவர் கூறுகிறார். இதே கருத்தை அவர் 2020 ஏப்ரல் 07 ஆம் திகதி த ஸ்ரீலங்கன் ஸயன்டிஸ்ட் சஞ்சிகையிலும் பல உசாத்துணைகளை மேற்கோள்காட்டி எடுத்துக் காட்டியிருக்கிறார்.  (https://scientist.lk/2020/04/07/science-behind-burying-the-covid-19-infected-dead-bodies/) ஆனாலும் இன்றைய அனித்தா பத்திரிகை அவர் அந்தக் கருத்தை மறுப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. அப்படியானால் இதற்கு அவர் முன்வைத்த ஆதாரங்களின் நிலை என்ன ? எதனை மக்கள் நம்புவது ? இவரது முன்னைய கருத்து தொடர்பில் தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் பிரதமரின் மகள் டொக்டர் துஷார விக்ரமநாயக்க, நினைத்தது போலவே இவரும் குறித்த விடயம் தொடர்பில் அறிவில்லாமல் கருத்து வெளியிட்டிருக்கிறார் என்பது உறுதியாகிறது. 20-21 ஆம் நூற்றாண்டுகளில் பல வைரஸ்கள் பரவியபோதும் அடக்கம் செய்யப்பட்ட உடல்களில் இருந்து வைரஸ் பரவியதாக எங்குமே தகவல்கள் இல்லை. அது வெறும் மூட நம்பிக்கை. மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் எனக் கேட்டுள்ளார். இது தான் சாதாரண பொதுமக்கள் அனைவரும் இந்த நிபுணர்களிடம் வேண்டுவதாக இருக்கின்றது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட வழிகாட்டலின் அடிப்படையில் உடல்களைத் தகனம் செய்த எந்த நாட்டிலிருந்தும் பூமிக்குள் இருந்து வைரஸ் வெடித்து வந்து பரவியதாக எந்தத் தகவலும் இதுவரை இல்லை. முகக்கவசம், கைழுவுதல், சமூக இடைவெளி என எல்லாவற்றையும் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தும் போது அடக்கத்தை சவாலுக்குட்படுத்தும் வகையில் எமது நிபுணர்களிடம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் உலக சுகாதார அமைப்பு உலகிலுள்ள தலைசிறந்த நிபுணர்களின் கருத்தைப் பெற்றுத் தான் இந்த முடிவுக்கு வந்திருக்க முடியும். அடக்கத்துக்காக உடலைத் தயார் செய்யும் போது கொரோனா வைரஸ் பரவுவதற்கான எந்தச் சான்றுகளும் இல்லை என கனடா பொதுச் சுகாதாரப் பிரிவின் அவசரகால தயார்நிலைகளுக்கும் எதிர்வினைகளுக்குமான நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் ரொனால்ட் ஜோன் தெரிவிக்கிறார். 2003 இல் கனடாவில் சார்ஸைக் கட்டுப்படுத்துவதில் இவர் பெரும்பங்காற்றியவர். அதேபோல ஜெரூஸலமின் ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதாரத்துக்கான ஹதெஸ்ஸா கல்லூரியின் தொற்றுநோயியல் பேராசிரியரும் தொற்றுநோய் பரவல் ஆராய்ச்சி நிபுணருமான டொக்டர் ஹேகி லெவைன் கூறும் போது, இறந்த உடம்பிலிருந்து கசிகின்றவற்றிலிருந்து தொற்றுவதற்கான (droplet transmission ) வாய்ப்புக்கள் மிகவும் அரிது எனக் குறிப்பிடுகின்றார்.  https://www.aljazeera.com/news/2020/2/9/china-virus-funeral-order-fuels-upset-as-death-toll-rises

இலங்கையின் தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர பிபிசிக்கு கருத்து வெளியிடும் போது, அரசாங்கம் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையையே பின்பற்றுகிறது எனத் தெரிவித்தார். கொவிட் 19 இனால் அல்லது அதன் சந்தேகத்தினால் மரணித்தவர்களை அடக்கம் செய்வதனால் நிலக்கீழ் நீர் தொற்றுக்குள்ளாகிறது என்பதும் ஆகவே அனைவரையும் எரிக்க வேண்டும் என்பதுமே அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார். https://www.bbc.com/news/world-asia-53295551 அப்படியானால் நிபுணர்கள் அரசாங்கத்தின் கொள்கையை வடிவமைப்பதில் குழப்பத்தை  ஏற்படுத்துகிறார்களா ? நிபுணர்களின் குழப்பத்தினால் தானா இலங்கையில் இறந்த உடல்கள் எரிக்கப்படுகின்றன ? அல்லது அரசாங்கத்தை வழிநடத்தக் கூடிய அளவுக்கு நிபுணர்கள் இல்லையா ?

மற்றுமொரு நிபுணரான சுகாதார அமைச்சின் தடயவியல் கூற்று நிபுணர் டொக்டர் சன்ன பெரேரா வேறுவகையான நிபுணத்துவ அறிக்கையொன்றை முன்வைக்கிறார். அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல, ஆனால் வைரஸ் வேறுவிதங்களில் பயன்படுத்தப்படுமோ என்று அரசாங்கம் அஞ்சுகிறது. யாரேனும் இறந்த உடம்பை எடுத்து அதிலிருந்து வைரஸைப் பெற்று உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடும் என்கிறார் அவர். BBC World Service சீனாதான் அமெரிக்காவுக்கு வைரஸைப் பரப்பியது என்று ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டும் போது கூட இதை ஒரு பயோலொஜிகல் வெப்பனாக உலகில் யாரும் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. அப்படியே இருந்தாலும் இலங்கையில் அந்தத் தேவையும் அறிவுமுடையவர்கள் யாராக இருக்க முடியும் என்று அவர் கருதுகிறார் ?

மார்ச் 27 ஆம் திகதி சுகாதார அமைச்சு வெளியிட்ட வழிகாட்டலில் உடல்களைத் தகனம் செய்யவும் அடக்கம் செய்யவும் முடியும் எனத் தெரிவித்திருந்தது. ஏப்ரல் 3 ஆம் திகதி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பியிருந்த கடிதத்திலும் சடலங்களை அப்புறப்படுத்துவதற்கான இடத்தில் மண் ஆய்வு செய்யக் கூடிய நிபுணர்கள் குழுவொன்றை நியமித்து அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு கோரியிருந்தது. இதன் பின்னரே சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சியினால் தகனம் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்ற ஏப்ரல் 11 ஆம் திகதிய 2170/ 8 ஆம் இலக்க வர்த்தமானி வெளியிடப்பட்டது. இதன் பிறகு இரண்டாவது அலையின் பி்ன்னர் மரணங்கள் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதனால் மீண்டும் அது தொடர்பான வாதங்கள் எழும்பத் தொடங்கியுள்ளன. நவம்பர் 11 ஆம் திகதி மீண்டும் ஒரு நிபுணத்துவக் குழு நியமிக்கப்பட்டது. உடல்களைப் புதைப்பதால் வைரஸ் வெளியாகும் என்ற கருத்தை வெளியிட்ட பேராசிரியர் மெத்திக விதானகே போன்றவர்களையும் உள்ளடக்கிய  புதியதொரு நிபுணத்துவத்துவக் குழுவொன்றூடாக சுகாதார அமைச்சு அறிக்கை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தக் குழுவிடமிருந்து நாங்கள் பல அறிக்கைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவை கிடைத்தபின் இறுதித் தீர்மானம் எடுப்போம் என நேற்று முன்தினம் சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இங்கு அறிக்கை எப்படி வந்தாலும் அரசியலுக்கு முன்னால் அறிவியலின் பாடு எப்படி இருக்கப் போகிறது என்பது மக்களுக்குத் தெளிவாகப் போகிறது. அரசியலுக்கு என்றால் அவமானப்படுவது பரவாயில்லை. ஆனால் நாட்டு மக்களுக்கு மத்தியில் அறிவியல் அவமானப்படும் நிலையிலிருந்து பாதுகாக்க வேண்டிய தேவை முதலில் நிபுணர்களுக்கும் அடுத்து நாட்டு மக்கள் அனைவருக்கும் இருக்கிறது. ஏற்கனவே மலட்டுக் கொத்து, மலட்டு மாத்திரை, மலட்டு உள்ளாடைகளுக்கு முன்னால் அடங்கிப் போன மருத்துவத்துறைக்கு, 400 பெண்களை மலடாக்கிய விடயத்தில் மௌனித்துப் போன மருத்துவத் துறைக்கு, உள்நாட்டு மாட்டிறைச்சி புற்று நோயை உண்டாக்கும், எனவே வெளிநாட்டு மாட்டிறைச்சி வாங்கத் தூண்டலாம் என்று தீர்மானமெடுக்கின்ற மருத்துவத்துறைக்கு இனிமேலும் களங்கம் ஏற்படாதவாறு காக்கும் கடமை அடக்க மறுப்பு மூலமாக அனைவர் முன்னாலும் விரிகிறது.

இந்த விடயத்தில் அறிவியலுடன் தோற்றுப் போகின்ற மற்றுமொரு விடயமும் இருக்கிறது. அதுதான் ஏற்கனவே கண்களைக் கட்டிப் போட்டு இருட்டாகியிருக்கின்ற நீதித்துறை. நீதி மறுக்கப்படுவது என்பது இங்கு நீதியமைச்சராலேயே கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் போயிருக்கிறது. உலக சுகாதார அமைப்பு சொன்ன சுகாதார வழிகாட்டலையும் இலங்கை புறக்கணிக்கிறது. இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் இந்த விடயத்தில் நீதியாய் நடந்து கொள்ளுமாறு கூறியிருக்கிறது. இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகள் சங்கம் ஐசிசிபிஆரின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் மத நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கான உரிமையை வழங்குமாறு கோரியிருக்கிறது. சர்வதேச மன்னிப்புச் சபை மக்களைப் பிளவுபடுத்த வேண்டாம் என்று அரசுக்கு எடுத்தோதியிருக்கிறது. இவ்வளவும் இருந்தும் அரசாங்கம் எந்த நாகரிகமான முயற்சிகளையும் எடுக்காமலிருக்கிறது. அரசியலமைப்பில் இது மதச் சுதந்திரத்தை மீறுகின்ற செயலாக இருக்கிறது என சுட்டிக் காட்டும் உள்ளுர் சட்டத்தரணிகள் அரசாங்கமே அரசியலமைப்பை மீறுகிறது எனக் குறிப்பிடுகிறார்கள். இது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து 20 ஆவது திருத்தம் மூலம் பெற்றுக் கொடுத்த ஜனாதிபதி அரசியலமைப்பை மதிக்க வேண்டியதில்லை என்ற அதிகாரத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது என அரசியல் ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். நீதியையும் நியாயத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க வேண்டியதும், நாட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அவற்றை மதிப்பதை உறுதிப்படுத்த வேண்டியதும் மக்கள் அனைவரதும் கடமை. ஆனாலும் யாரும் வாய்திறக்க முடியாதவண்ணம் இன மேலாதிக்க உணர்வுகள் கட்டிப் போட்டிருக்கின்றன.

அடக்க மறுப்பு விவகாரம் வெளிப்படுத்தியுள்ள மூன்றாவது விடயம் இனவாதம் பற்றியது. “கொரோனாவைப் போலவே ஆட்கொல்லி நோயாக இனவாதம் இருக்கிறது. நாம் ஒன்றை மூட முயற்சித்து இன்னொன்றைத் திறந்து விடுகிறோம் “ என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்திருந்தார். கொரோனாவுக்குப் பின்னரான இலங்கையைக் கட்டியெழுப்புவதில் மனிதவள முதலீடு முக்கியமானது என உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பாரிஸ் ஹத்தாத் தெரிவித்திருந்தார். ஆகவே இருக்கின்ற மனித வளங்களை அழிவுக்குப் பயன்படுத்தாமல் ஆக்கத்துக்குப் பயன்படுத்துவதில் தான் நாட்டுத் தலைவரின் வெற்றிகரமான தலைமைத்துவம் தங்கியிருக்கிறது. இனவாதம் பரப்பும் ஊடகமொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் முஸ்லிம் சமூகத்தின் சிலரை அழைத்து ஆக்ரோஷமாக நடத்திய கலந்துரையாடலில் அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் இலங்கையின் பெரிய சமூகத்தின் பலரதும் கருத்தாக இருக்குமாக இருந்தால் இனமேலாதிக்க உணர்வுக்கெதிரான செயற்பாடுகளுக்கு நாடு முன்னுரிமை கொடுக்க வேண்டியிருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. உங்களுக்குத் தந்திருக்கின்ற உரிமைகள் போதாதா, ஒரு நாடு ஒரு சட்டம் தான். ஏன் உங்களுக்கு மட்டும் விஷேடமான சட்டம் கேட்கிறீர்கள், நீங்கள் இப்படிக் கோரிக்கை விடுப்பது இன உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும், ஏன் நீங்கள் இதனைப் பொறுத்துக்கொள்ளக் கூடாது, உங்களது இந்தக் கோரிக்கையால் நாட்டு மக்களுக்கு ஏற்படப் போகும் தீங்கை யோசிப்பதில்லையா, ஏன் உங்களைப் பற்றி மட்டுமே யோசிக்கின்றீர்கள் என்பன போன்ற கேள்விகள் ஊடகங்களைப் பயன்படுத்தி சிலரால் கேட்கப்படுகின்றன. இது நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களின் கேள்வியாக இருக்குமாக இருந்தால் நாகரிகமானதொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான பணி அத்திவாரத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டியிருப்பதை அது புலப்படுத்துகிறது.

இறுதியாக முஸ்லிம் சமூகம் தொடர்பானது. முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் மற்றும் யூதர்களும் இறந்தவர்களை கௌரவமாக அடக்கம் செய்வதை தமது மரபாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இலங்கையிலுள்ள முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தாம் கௌரவமாக அடக்கம் செய்யப்படுவதை விரும்பும் ஏனையவர்களும் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிகாரிகள் நினைக்கப் போதுமான குரல் கொடுக்கவில்லை. சமூக ஊடகங்களிலோ பொதுவெளிகளிலோ மேடைகளிலோ இவை பேசப்படுகின்ற அளவு அதிகாரிகள் செயற்படுவதற்குப் போதுமானதாக இல்லை என்றே தெரிகிறது. சொல்லப் போனால் இதற்கென ஒரு சிவில் அமைப்பொன்றையாவது உருவாக்கி இதனை “எரிகின்ற “ ஒரு பிரச்சினையாக எடுத்துக் காட்டுவதற்கும் போதுமான அசைவியக்கங்கள் தெரியவில்லை. வழமைபோல் சிலோன் தௌஹீத் ஜமாஅத் விவகாரத்தை திசை திருப்பி விட்டது. இம்முறை அதற்கும் மேலாக நீதியமைச்சர் அலிசப்ரி சொன்னதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் வெளியிட்ட தகவல் சமூகத்தில் வேறு கோணத்தில் பார்க்கப்பட்டு வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைத்த பழியை அவர்கள் மீது போட்டு விட்டு முஸ்லிம் சமூகம் பேஸ்புக் முன்னால் பொழுதைக் கழித்தது. வழமையாக நடக்கும் ஒட்டுப்போடும் முயற்சிக்கு பலம் சேர்க்கும் விதத்தில் ஒருவர் காணி தருவதற்கும் இன்னொருவர் பிசிஆர் பிரசோதனை செய்வதற்கும் மற்றுமொருவர் சவப்பெட்டி வாங்குவதற்கும் முன்வந்திருக்கின்றனர். இன்னும் சில கீபோர்ட் போராளிகள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தம் பங்குக்கு திறந்த மடல் எழுதி வருகின்றனர். சிலவேளை மக்களது முயற்சிகள் ஐநாவின் இலங்கை அலுவலகம் பதிலளிக்க வேண்டிய அளவுக்கும் சென்றிருக்கின்றன. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஹனா சிங்கர் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் இது தொடர்பில் தம்மிடம் கோரிக்கை விடுத்தாகத் தெரிவித்திருக்கிறார். இப்போது இது பொதுப் பிரச்சினையாகியிருக்கிறது. ஆகவே வாழ்வு எப்படிப் போனாலும் இறப்பு நாட்டு மக்களை ஒன்றுபடுத்த வாய்ப்பிருக்கிறது. மாற்றங்கள் சிலவேளை தலைகீழாகவும் வரலாமல்லவா?

சமூக ஊடகங்களில் வெளியான என்னுடைய மகனை எரிக்க விடாதீர்கள் என்று கதறும் ஒரு பெண்ணின் அவலக்குரல் பளக் லைவ்ஸ் மட்டர்ஸ் இனைத் தான் ஞாபகப்படுத்தியது. அடங்க மறுப்பதும் அடக்க மறுப்பதும் மக்கள் இதனை எவ்வளவு பாரிய பிரச்சினை என்பதை முன்வைப்பதில் தான் இருக்கிறது.