கல்வியின் பண்புத் தரம்

54
 • கலாநிதி றவூப் ஸெய்ன்

ஒரு தேசத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்தியில் கல்வியின் பண்புத் தரம் முக்கிய இடத்தினை வகிக்கின்றது. கல்வியின் பண்புத் தரத்தை விருத்தி செய்வதில் பல்வேறு காரணிகள் பங்களிக்கின்றன. கலைத் திட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் ஆசிரியர்களின் தொழில்சார் தகைமைகள் என்பன அவற்றுள் பிரதானமானவை. இதற்கு மேலதிகமாக ஆசிரியர்களின் வாண்மைசார் திறன்கள் கற்பித்தல்-கற்றலுக்கான திட்டமிடல்கள், வினைத் திறன் மிக்க கற்பித்தல் முறைகள், கற்றல் செயன்முறைகள் என்பனவும் விளங்குகின்றன.

கல்வியின் பண்புத் தரத்தில் ஆசிரியர் கொண்டுள்ள வகிபாகம் புறக்கணிக்க முடியாதளவு பிரதானமானது. இதற்கு ஆசிரியர் தனது வாண்மைத்துவ ஆற்றல்களை விருத்தி செய்தல் அவசியம். வாண்மை விருத்திக்கு கல்விப் புலன் குறித்த விரிவான அறிவும் முயற்சியும் இன்றியமையாதவை. ஆசிரியர்களின் பங்களிப்பை பண்புத் தர விருத்தியில் செயற்திறன் மிக்கதாக்கும் முக்கிய காரணிகள் இவையே.

மாணவர்களது கற்றல் பேறுகளை காலத்தின் தேவைகளோடு பொருந்தும் வகையில் அமைப்பாக்கம் செய்ய வேண்டும். சமகால உலகில் எழுகின்ற புதிய சவால்களுக்கு முகம்கொடுக்கக் கூடிய அறிகைசார் ஆற்றல்களை, உயர் நிலைப்பட்ட சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் வளர்த்தெடுப்பது ஆசிரியர்களின் சமகாலக் கடமைகளில் பிரதானமானவை எனக் கருதப்படுகின்றது. இதற்கு வாண்மைத் திறன் மிக்க ஆசிரிய வளம் அவசியம்.

கல்வியின் பண்புத் தர விருத்தி என்பது வெறுமனே பௌதிக விருத்தியை மாத்திரம் கருத்திற் கொண்டதல்ல. அது உள, மனவெழுச்சி, ஒழுக்க, ஆன்மீக, சமூக வளர்ச்சியுடன் கூடிய மனித வாழ்க்கையின் பண்புகளை விருத்தி செய்யக் கூடிய உத்திகளை உள்ளடக்கிய ஒரு செயன்முறையாகும்.

இலங்கை கல்வியமைச்சின் முகாமைத்துவ தர உறுதிப்பாட்டு அலகு (Management Quality Assurance Unit) பண்புசார் தன்மையின் உள்ளடக்கம் தொடர்பாக பின்வரும் கூறுகளை முன்வைத்துள்ளது.

 1. செயற்சாதனை
 2. நம்பிக்கைத் தத்துவம்
 3. உரிய இலட்சனம்
 4. ஆக்கக் கூற்றுக்கேற்றதாய் இருத்தல்
 5. கால உபயோகம்
 6. தொடர் பயன்பாட்டுத் தன்மை
 7. அழகுணர்வு
 8. பொருளாதாரத் தன்மை

எந்தவொரு செயற்பாட்டினதும் தர நிர்ணயத்திற்கு இப்பண்புசார் இயல்புகள் அவசியமானவை. இவற்றை மாணவர் மத்தியில் வளர்த்தெடுப்பதற்கு பின்வரும் தேர்ச்சிகளை ஆசிரியர்கள் மாணவர் மத்தியில் விருத்தி செய்ய வேண்டும்.

 1. தற்றுணிவு
 2. சுயமாக வேலை செய்யும் ஆற்றல்
 3. சுய முகாமைத்துவம்
 4. சுயமதிப்பீடு
 5. பிரச்சினையைத் தீர்க்கும் ஆற்றல்
 6. நேர்மனப்பாங்கு
 7. வாழ்க்கை நீடித்த கற்றல்
 8. சமூக கலாசாரப் புரிந்துணர்வு
 9. நெகிழ்ச்சித் தன்மை
 10. குழுவாக இணைந்து செயற்படல்
 11. தொடர்பாடல் திறன்

கல்வியின் பண்பு தரவிருத்தி தொடர்பாக ஆராய்ந்தவர்கள் ஒரு நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான சாதகமான மனப்பாங்குகள் குறித்துச் சுட்டிக்காட்டியுள்ளனர். அதன்படி சமகால மனிதனிடம் இருக்க வேண்டிய பண்புகளாக பின்வருவன அடையாளப்படுத்தப்படுகின்றன.

 1. புதிய அனுபவங்களை எதிர்நோக்குவதற்கான விருப்பம்
 2. சமூக மாற்றத்தை ஏற்பதற்கு ஆயத்தமாக இருத்தல்
 3. சரியான தகவல்கள் மற்றும் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் அபிப்பிராயங்களை உருவாக்கிக் கொள்வதும் பொருத்தமான முடிவுகளை எடுத்தலும்
 4. அபிப்பிராயங்கள் பல வகைப்படும் என்பதனை ஏற்றுக்கொள்ளல்.
 5. கடந்த வரலாற்றை விடுத்து நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் முக்கியத்துவம் வழங்கல்
 6. சமூக நிறுவனங்களில் நம்பிக்கை வைத்தல்.
 7. தொழில்நுட்ப அறிவு, தொழிற் தகைமைகள் மற்றும் திறன்கள் என்பவற்றுக்கு முக்கியத்துவமளித்தல்.
 8. கல்வியில் அதிக அக்கறை செலுத்தல்.
 9. அடிப்படை தர்க்க நியாயங்கள் பற்றிய புரிந்துணர்வைப் பெற்றிருத்தல்

இவற்றைக் கட்டியெழுப்புவதில் ஆசிரியர் தேர்ச்சியே முன்னிலை வகிக்கின்றது. ஒரு தேசத்தில் ஆசிரியர்கள் எந்தத் தரத்தில் உள்ளனரோ அந்தத் தரத்திலேயே அத்தேசத்தின் கல்வி அறிவும் காணப்படும் என்பது கல்வியியலாளர்களின் அபிப்பிராயமாகும்.

முன்னொரு காலத்தில் ஆசிரியர்கள் பிறக்கின்றனர் என்றும் அவர்களுக்கான தேர்ச்சிகள் உள்ளார்ந்த திறன்களாக உருவாகின்றன என்றும் நம்பப்பட்டது. ஆனால் இன்று ஆசிரியர்கள் பிறப்பதில்லை. அவர்கள் உருவாக்கப்படுகின்றனர். அவர்களுக்கான தேர்ச்சிகள் பல்வேறு தொழிற்பாடுகளினூடாக வளர்த்தெடுக்கப்படக் கூடியது என நம்பப்படுகின்றது.

தேர்ச்சி என்ற பதம் பல்வேறு வாத விவாதங்களுக்கு உட்பட்டு வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற கல்வித் தர மீளாய்வு தொடர்பான விவாதமொன்றில் முக்கிய கருவாக இச்சொல் அமைந்தது. இவ்விவாதத்தில் தேர்ச்சி என்பது ஒரு குறிக்கப்பட்ட இலக்கை அடைவதற்காக அறிவு, திறன் ஆகியவற்றை சரியான முறையில் பாவிக்கும் திறன் என குறிக்கப்பட்டது.