உளப்பிளவு நோய்க் குறிகள்

31

கடந்த பத்தியில் உளப் பிளவு நோய் குறித்தும் அதன் வினோதமான நோய்க் குறிகள் தொடர்பிலும் கலந்துரையாடினோம். இந்தப் பத்தியில் அந்நோய்க் குறிகளை ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் பின்வருமாறு வகைப்படுத்தி நோக்குவோம்.

 1. பிழையான நம்பிக்கைகள் (Delusions)

யதார்த்தத்தை அடிப்படையாகக் கொள்ளாத பல பிழையான நம்பிக்கைகள் மனப்பிளவு நோயாளர்களிடம் நிலவுகின்றன. உதாரணமாக, நான் துன்புறுத்தப்படுகின்றேன், அலைக்கழிக்கப்படுகின்றேன், விமர்சிக்கப்படுகின்றேன் போன்றன. அல்லது உனக்கு பெரும் ஆபத்து நேரப் போகின்றது, உன்னிடம் அசாதாரண திறமை உள்ளது போன்ற ஆதாரமற்ற உண்மைக்குப் புறம்பான பிழையான நம்பிக்கைகள் இவர்களிடம் காணப்படும்.

 1. மாயப் புலன் / இல் பொருள் காட்சி (Hallucination)

இல்லாத பொருளைக் காண்பது என்பது இவர்களிடம் காணப்படும் இன்னொரு நோய்க் குறியாகும். ஐம்புலன்களில் எதிலும் மாயம் ஏற்படலாம். பார்த்தல், கேட்டல், தொடுதல், நுகர்தல், ஆகிய புலன்களில் இல்லாதவற்றை இவர்கள் இருப்பது போன்று உணர்கிறார்கள். உதாரணமாக, யாரோ தம்மைக் கொல்ல வருவதாக தனக்கு முன்னால் தோன்றியுள்ளதாகக் கூறுவர்.

 1. ஒழுங்கீனமான சிந்தனை (Disorganized Thinking)

ஒழுங்கமைப்பற்ற அவர்களது பேச்சுக்களிலிருந்து அவர்களது சிந்தனை சிதைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம். குறிப்பாக, அர்த்தமுள்ள தொடர்பாடல் திறன் அவர்களிடம் இருக்காது. எடுத்துக் காட்டாக, கேட்கப்படும் கேள்விகள் ஒன்றாக இருக்க, அளிக்கப்படும் பதில்கள் வேறொன்றாக இருக்கும். மிக அரிதாகவே உரையாடும் அவர்களது சொற்கள் அர்த்தமற்றவையாக இருக்கும்.

 1. அசாதாரண, ஒழுங்கீனமான அசைவியக்க நடத்தை (Extremely disorganized motor behavior)

இது பல்வேறு வழிகளில் வெளித் தெரியும். குழந்தைத் தனத்திலிருந்து எதிர்பாராத கிளர்ச்சி நிலை வரை இது வெளிப்படும். இத்தகையோரின் நடத்தை ஒரு குறிக்கோளை அடியொட்டியதாக இருக்காது. இதனால், எந்தவொரு பணியையும் இவர்கள் முறையாக நிறைவேற்றி முடிக்க மாட்டார்கள். அறிவுரைகளை ஏற்க மாட்டார்கள். அவற்றுக்கு எதிர்ப்புக் காட்டுவார்கள். பயனற்ற அசைவியக்கத்தை வெளிப்படுத்துவர்.

 1. எதிர்நிலை நோய்க்குறி (Negative syndrome)

சாதாரணமாக செயல்படும் ஆற்றல் அல்லது நியம நடத்தைகளை வெளிப்படுத்தும் திறன் இவர்களிடம் இருக்காது. உதாரணமாக, தனது தனிப்பட்ட சுகாதாரப் பழக்க வழக்கங்களை இவர்கள் புறக்கணிக்கலாம். மனவெழுச்சிகளை ஆக்ரோஷமாகவும் அடாராகவும் வெளிப்படுத்துவர். நடத்தைக்கேற்ற பார்வைத் தொடர்பும் (Eye Contact) அல்லது முகபாவனை இவர்களிடம் இருக்காது. உணர்வு மாறுபாட்டுக்கேற்ப உடல் மற்றும் முகபாவனைகள் மாறாது. பேசும்போது கூட சொற்களுக்கும் அர்த்தங்களுக்கும் ஏற்ப தொனிகளை மாற்ற மாட்டார்கள். உதாரணம், மகிழ்ச்சியையும் கவலையையும் ஒரே தொனியிலேயே பேசுவார்கள்.

மனப்பிளவு நோயின் வகைப்பாட்டிற்கு ஏற்பவும் பாதிப்பின் தன்மைக்கு ஏற்பவும் பாதிப்படைந்த காலத்தின் அளவுக்கு ஏற்பவும் நோய் அறிகுறிகளின் தீவிரம் மற்றும் தீவிரமின்மை வேறுபடலாம். ஆனால், சில நோய்க் குறிகள் எப்போதுமே அவர்களை ஒட்டிக்கொண்டிருக்கும். ஆண்களில் மனப்பிளவு நோய் 20 வயது நடுப்பகுதியில் ஆரம்பமாகும் என உள மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பெண்களில் 20 வயதின் இறுதிப் பகுதியில் மனப் பிளவு நோய் ஏற்படலாம். சிறுவர்களுக்கு இது ஏற்படுவது அரிதிலும் அரிதாகும். அதேவேளை, 45 வயது மேற்பட்டவர்களுக்கு உளபிளவு நோய் ஏற்படுவது மிக அரிது என உளவியலாளர்கள் கருதுகின்றனர். பதின் பருவ வயதினரிடம் உளப் பிளவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால், அவர்களது வயது வளர்ச்சியோடு சேர்ந்து இடம்பெறும் சில உள மனவெழுச்சி மாற்றங்கள் உளப் பிளவு நோய் அறிகுறிகளை ஒத்திருப்பதனால் பிரித்தறிவது சற்றுக் கடினமானது.

பின்வருவன ஒத்த தன்மையுற்ற பிரச்சினைகளாகும்.

 1. குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து ஒதுங்கியிருத்தல்
 2. பாடசாலை அடைவில் ஏற்படும் வீழ்ச்சி
 3. தூக்கப் பிரச்சினை
 4. திடீரென கோபமடையும் தன்மை
 5. சோர்வு மனப்பான்மை
 6. எதிலும் ஊக்கமின்மை.