கல்முனைப் பிரிப்பிற்கு உடன்பட்டது கல்முனைப் பிரதிநித்துவம்

16
  • வை.எல்.எஸ். ஹமீட்

கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்த்தல் விடயம் மீண்டும் இன்று தமிழ் உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில் பேசப்பட்டதாகவும் கல்முனைப் பிரதிநிதி பேசவில்லை எனவும் அவரது தலைவர் பேசியதாகவும் பலரும் முகநூலில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவருடைய தலைவருடைய பேச்சில் கல்முனையின் எல்லைப் பிரச்சினையை இரு சமூக மக்களும் இணைந்து தீர்த்துக்கொள்வது தொடர்பாக கருத்துக் கூறியிருந்தார்.

தமிழருக்கு தனியான பிரதேச செயலகம் வழங்குவதற்கு முஸ்லிம்களுக்கு எதுவித ஆட்சேபனையுமில்லை. தனியான பிரதேச செயலகம் இல்லாத தமிழ் ஊர்களான பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு,மணற்சேனை, துரவந்தியமடு போன்ற பிரதேசங்களை இணைத்து ஒரு செயலகம் நாளை வேண்டுமானாலும் அரசு உடன்பட்டால் வழங்கலாம். முஸ்லிம்களிடம் எதுவித ஆட்சேபனையுமில்லை.

எங்கே பிரச்சினை?

பிரச்சினையெல்லாம் கல்முனை வர்த்தக நகரத்தைக் கூறுபோட்டு பாதியை தமிழர்கள் கேட்பதுதான். இலங்கையில் எந்தவொரு நகரத்தையும் கூறுபோட்டு இரண்டு சமூகங்களுக்குக் கொடுத்த வரலாறே இல்லை. கல்முனையில் மட்டும் தமிழர்கள் ஏன் கேட்கிறார்கள்? காரணம், இலங்கை முஸ்லிம்களின் மானசீகத் தலைநகரமாக கல்முனை கருதப்படுகிறது. முஸ்லிம்களின் அரசியல் பலத்தின் மையப்புள்ளி கல்முனையாகக் கருதப்படுகிறது. மட்டுமல்ல, வட கிழக்கிலேயே தினமும் அதிக பணம் புரளுகின்ற மாபெரும் வர்த்தக நகராக கல்முனை இருக்கின்றது. இதனை உடைத்து கல்முனையை தமிழர் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதுதான் இதன் பின்னணியாகும். இது தமிழரின் நீண்டகாலத் திட்டமாகும்.

எனவே, கல்முனைப் பிரச்சினை என்பது, “ உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுகின்ற பிரச்சினையே அல்ல,”. அதுதான் பிரச்சினை என்றால் நாளையே அதனைத் தீர்த்துவைக்க முஸ்லிம்கள் தயார். இது கல்முனையைக் கைப்பற்றும் தமிழரின் நீண்டகாலத்திட்டத்தால் உருவான பிரச்சினை. இது முஸ்லிம்களின் அரசியல் அடையாளத்தின் மையைப் புள்ளியை உடைத்தெறியும் தமிழரின் திட்டமிடப்பட்ட பிரச்சினை. இது முஸ்லிம்களுக்கான ஒரேயொரு பிரதான வர்த்தக மாநகரத்தை பறித்தெடுக்கின்ற பிரச்சினை. துரதிஷ்டவசமாக, இந்த உண்மைகளைப் பேசுவதற்கு நமக்குப் பிரதிநிதித்துவமுமில்லை, தலைமைத்துவமுமில்லை.

ஒரு சிறிய தொகைத் தமிழர்கள் வாழுகிறார்கள் என்பதற்காக ஒரு பாரம்பரிய நகரத்தையே கூறுபோடவேண்டுமென்றால், முஸ்லிம் பெரும்பான்மை நிர்வாக அலகொன்றில் தமிழர்கள் வாழவே கூடாது என்பது த தே கூ அமைப்பின் மற்றும் தமிழ்க்கட்சிகளின் நிலைப்பாடா என்று பாராளுமன்றில் அத்தமிழ் உறுப்பினர்களைப் பார்த்து கேள்வி கேட்க நம்மிடம் பிரதிநிதித்துவம் இல்லை. அவ்வாறாயின் வட கிழக்கில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் அனைத்து நிர்வாக அலகுகளையும் கூறுபோட்டு முஸ்லிம்களுக்கு தனியான அலகுகள் வழங்க தமிழ்த் தரப்பு ஆயத்தமா என்று பாரளுமன்றில் கேட்க நம்மிடம் பிரதிநிதித்துவம் இல்லை. ஒரு பிரதேச செயலக எல்லைக்குள்ளேயே முஸ்லிம்கள் பெரும்பான்மை என்பதனால் தமிழர்கள் வாழ உடன்பாடு இல்லாதபோது, தமிழரைப் பெரும்பான்மையாகக்கொண்ட இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்கள் வாழவேண்டும் என்று தமிழ்த்தரப்பு நினைப்பது என்ன நியாயம் என்று கேட்க நம்மிடம் பிரதிநிதித்துவம் இல்லை. ஏனெனில், கல்முனை மக்களுக்கு வாக்குரிமை இல்லை. அதனால் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை.

இழுபறி ஏன்?

கல்முனைப் பிரச்சினை இழுபறியாக மாறக் காரணம் நமது பிரதிதிநிதித்துமே! சாய்ந்தமருதுப் போராட்டம் நடைபெறும்வரை அது ஒரு பாரிய பிரச்சினையாக இருக்கவில்லை. ஓர் உப பிரதேச செயலகம் இயங்கியது. அது முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கவுமில்லை. புலிகளின் காலத்தில் அது தொடர்பாக முஸ்லிம்களால் எதுவும் செய்யக்கூடிய நிலையும் இருக்கவில்லை. சாய்ந்தமருதுப் போராட்டம் மொத்த வட கிழக்குத் தமிழ் அரசியலையும் கல்முனைப் பிரச்சினையை நோக்கித் தட்டியெழுப்பிவிட்டது. கல்முனையில் இருந்து முஸ்லிம் சமூகத்தின் ஓர் அங்கமே பிரிந்துசெல்லப் போராடும்போது தமிழர்கள் ஏன் பிரிந்து செல்லமுடியாது என்ற கேள்வி வட கிழக்கு தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டது.

இரவும் பகலும் வட கிழக்கு இணைப்புக்காக, அதற்கான முஸ்லிம்களின் ஆதரவுக்காக குரல்கொடுத்த விக்னேஸ்வரனே கல்முனைக்கு பாதயாத்திரைக்கு முயற்சிக்குமளவு கல்முனைப் பிரச்சினை பூதாகரமாக மாறியது. குறிப்பாக, எதிர்க்கட்சியில் இருந்து நல்லாட்சிக்கு ஆதரவுகொடுத்த தமிழ் அரசியலின் பலமும் நேரடி ஆதரவு வழங்கிய முஸ்லிம் அரசியலின் பலவீனமும் தமிழர் போராட்டம் இன்னும் கூர்மையடையக் காரணமாகியது. அப்பொழுது நமது தலைமைத்துவங்களும் பிரதிநிதித்துவங்களும்- சாய்ந்தமருது தனியான எல்லைகளைக்கொண்ட ஊர், தனியான சபை கேட்கிறார்கள்; அதேபோல் பாண்டிருப்புடன் ஏனைய தனியான ( மேற்சொன்ன) ஊர்களை இணைத்து தமிழர்கள் ஒரு செயலகத்தை, வேண்டுமானால் ஒரு சபையையும் சேர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள்; கல்முனை நகரத்தைக் கூறுபோட அனுமதிக்கமுடியாது என்று மேற்சொன்ன நியாயங்களைக்கூறி அரசுக்கும் தெளிவுபடுத்தி பிரச்சினையைத் தீர்க்க முற்பட்டிருக்கலாம். கல்முனை, சாய்ந்தமருது இரண்டினதும் பிரச்சினைகளைத் தீர்த்துவைத்திருக்கலாம். ஆனால் நமது கல்முனைப் பிரதிநிதித்துவம் செய்ததென்ன?

விடயத்தைத் தெளிவுபடுத்தவும் தெரியவில்லை. அதேநேரம் தமிழரின் கல்முனையைக் கூறுபோடும் கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. எனவே, பிரச்சினையை இழுத்தடிக்கச் சொன்னபதில்தான் “தமிழரின் கோரிக்கை நியாயமானதுதான்; ஆனால் கல்முனையில் எல்லைப் பிரச்சினை இருக்கின்றது. எல்லை நிர்ணயக்குழு அமைத்து எல்லைப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும்” என்பதாகும். நல்லாட்சிக் காலம் முழுவதும் இதையேசொல்லி காலம் கடத்தப்பட்டது.

பகுத்தறிவுள்ளவர்கள் சிந்தியுங்கள்

கல்முனையில் எல்லைப் பிரச்சினை இருக்கின்றது. எல்லை நிர்ணயக்குழு வேண்டும் என்றால் அதன்பொருளென்ன? “கல்முனையைக் கூறுபோடுவது பிரச்சினை இல்லை. கூறுபோடத்தான் வேண்டும். ஆனால் எந்த இடத்தால் கூறுபோடுவது என்பதுதான் பிரச்சினை. எனவே, எல்லை நிர்ணயக்குழுவை அமைத்து எந்த இடத்தால் பிரிப்பது என்ற அந்த எல்லையை நிர்ணயிக்கவேண்டும்;” என்பதுதானே அதன்பொருள். அவ்வாறாயின் கல்முனையைப் பிரிப்பதற்கு உடன்பட்டது யார்? கல்முனை மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் வாக்களித்து தெரிவுசெய்கின்ற அந்த பிரதிநிதித்துவம் இல்லையா?

கல்முனையைப் பிரிப்பதற்கு கல்முனை எம் பி எப்போதோ உடன்பட்டுவிட்டார். இப்பொழுது பிரிக்கும் எல்லையை அடையாளம் காண்பதில்தான் இத்தனை இழுபறி. எனவே, இலங்கையில் எந்த ஒரு நகரமும் கூறுபோடப்படாத நிலையில், வட கிழக்குப் பூராகவும் எத்தனையோ தமிழர் பெரும்பான்மை அலகில் முஸ்லிம்கள் அமைதியாக வாழுகின்ற நிலையில், முஸ்லிம்களின் மானசீகத் தலைகரைப்பறிக்க, முஸ்லிம்களின் வர்த்தக மையத்தை உடைக்க, முஸ்லிம்களின் அரசியல் அடிநாதத்தை கூறுபோட கல்முனைப் பிரதிநிதி எப்போதோ சம்மதம் கொடுத்துவிட்டார்.

கல்முனையை விடுத்து ஏனைய ஊர்களை இணைத்து செயலகம் தொடர்பாக பேசினால் பிரச்சினை கல்முனைக்கு வெளியில் இருந்திருந்திருக்கும். கல்முனைக்குள் பிரிப்புக்கு எல்லைபோட ஒத்துக்கொண்ட கணமே கல்முனைக்குள் பிரச்சினையை நாமும் சேர்ந்து கொண்டு வந்துவிட்டோம். கல்முனைக்கு இந்தக் கைங்கரியத்தை செய்தது கல்முனை மக்கள் தெரிவுசெய்த பிரதிநிதித்துவம். அந்தப் பிரதிநிதித்துவத்தை மீண்டும் மீண்டும் தெரிவு செய்ததன் மூலம் கல்முனையைப் பிரிப்பதற்கு கல்முனை மக்களும் மறைமுகமாக சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். சிலவேளை, கல்முனை துண்டாடப்பட்டால் கல்முனையின் அந்தப் பிரதிநிதித்துவமே ஆர்ப்பாட்டத்திற்கு, போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பார்கள், மக்களும் போவார்கள், உணர்ச்சி வசனங்கள் பேசப்படும். கல்முனையைப் பறிகொடுத்து அவர்களே ‘ஹீரோ’ பட்டமும் பெற்றுக்கொள்வார்கள்.

முஸ்லிம்களின் தலைநகரம் கல்முனை என்கின்றோம். படித்தவர்கள் நிரம்பி வழியுமிடம் கல்முனை என்கின்றோம். ஒரு காகம் குந்தியிருந்த இடத்தில்கூட அந்த காகம் குந்தியதற்கு அடையாளமாக ஏதாவது இருக்கும்; இந்த பிரதிநிதித்துவம் இத்தனை ஆண்டுகள் இருந்தும் எந்த அடையாளமுமில்லை; என்று அந்த மக்களே கூறுகிறார்கள்.தாம் தோற்கப்போகிறோம் என்ற நிலையை அறிந்து தேர்தல் நேரத்தில் மேடையில் பகிரங்கமாக அழுகிறார்கள். ஞானசார வரப்போகிறார், கருணா வரப்போகிறார் என்றதும் ஒரு பகுதி மீண்டும் அவர்களை நோக்கித் திரும்புகிறது. தேர்தல் இரவும் அதற்கு முதல்நாள் இரவும் பணம் வாரி இறைக்கப்படுகிறது. மிகுதிக்கூட்டமும் திரும்புகிறது.

இது முஸ்லிம்களின் தலைநகரமாம் கல்முனையின் நிலை!!!

கல்முனையில் பிறந்தவன் என்றவகையில் கல்முனையின் நிலையை எண்ணி மனம் கவலை கொள்கிறது. ஆனாலும் அம்மக்களின் தலைவிதியை மாற்றும் சக்தி நம்மிடமில்லை. உங்கள் தலைவிதியை நீங்களாக மாற்றிக்கொள்ளாதவரை நாம் மாற்றமாட்டோம் என இறைவனே கூறிய நிலையில் மற்றவர்கள் என்ன செய்யமுடியும்?