யாப்பு உருவாக்கத்தில் மக்களின் கவனம்

72

நடப்பு அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்து சொல்லி வருகின்ற நாட்டுக்கான புதிய யாப்பு உருவாக்கத்துக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்திருக்கின்றன. புதிய யாப்பில் உள்ளடங்க வேண்டிய பதினொரு விவகாரங்கள் தொடர்பில் மக்களின் கருத்து கோரப்பட்டிருக்கிறது. அதற்கான திகதி அடுத்த வாரம் (30) நிறைவடைகிறது.

ஏற்கனவே இரண்டு குடியரசு யாப்புக்கள் வரையப்பட்டு தற்போது மூன்றாவது அரசியல் யாப்புக்காக நாடு தயாராகிவருகிறது. 1972 இல் இயற்றப்பட்ட முதலாவது குடியரசு யாப்பு வெறும் ஆறு வருடங்களே நடைமுறையில் இருந்தது. பின்னர் 1978 இல் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பு தான் 42 வருடங்களாக இன்று வரை நடைமுறையில் இருக்கிறது. இந்த 42 வருடங்களிலும் அது 20 முறை திருத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறது. 20 ஆவது திருத்தத்தின் ஊடாக மீண்டும் 1948 சுதந்திரத்துக்கு முன்னர் இருந்த கால நிலைக்கு நாடு இட்டுச் செல்லப்பட்டுள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இந்த வகையில் உருவாகவிருக்கும் புதிய யாப்பு குடியரசுக்குப் பின்னர் உருவான இரண்டு யாப்புக்களினதும் திருத்திய வடிவமாகவன்றி புதியதொரு போக்கிலான யாப்பாகவே இருக்கப் போகிறது என்பது தெளிவாகிறது. முதலாவது குடியரசு யாப்பு உலகில் சமவுடைமைப் பொருளாதாரம் பேசுபொருளாக இருந்த வேளையில் வரையப்பட்டது. இரண்டாவது யாப்பு உலகில் திறந்த பொருளாதாரத்தின் செல்வாக்கு ஓங்கியிருந்த வேளையில் வரையப்பட்டது. எந்தக் குறைவுமின்றி யாப்பு வரைந்த காலப் பிரிவிலான உலகப் போக்குகள் எமது யாப்பில் பிரதிபலித்திருக்கின்றன என்பதுவே யதார்த்தமாகும்.

நடப்பு உலகில் தற்போது ஜனரஞ்சகவாதம், தேசியவாதம், மேலாதிக்கவாதம் என்பன செல்வாக்குச் செலுத்தும் விடயங்களாக இருக்கின்றன. இவை உலகின் பொதுவான அங்கீகாரத்தைப் பெற்றிராவிட்டாலும் இலங்கை சார்ந்திருக்கும் நாடுகள் இந்த விடயங்களின் செல்வாக்குக்கு உட்பட்டு இயங்குபவையாகவே இருக்கின்றன. இந்த வகையில் உருவாகப் போகும் மூன்றாவது குடியரசு யாப்பில் இந்த விவகாரங்களின் வாடை அதிகமாகவே வீசும் என எதிர்பார்க்க முடிகிறது.

எனவே புதிய யாப்பு உருவாக்க விடயத்தில் மக்கள் கூடுதல் அக்கறை காட்ட வேண்டியிருக்கிறது. ஜனரஞ்சகவாதமும் தேசியவாதமும் மேலாதிக்கவாதமும் அவற்றைக் கடைப்பிடிக்கின்ற நாடுகளை எவ்வளவு தூரம் முன்னேற்றியிருக்கிறது, அது மக்களுக்கு நன்மையானதா அல்லது ஆட்சியாளர்களுக்கு இலாபமானதா என்பவை தொடர்பில் மக்கள் அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது.

இலங்கையிலும் இவற்றை சாதித்துக் கொள்ளும் வகையிலான அரசியல் சூழல் உருவாக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. இனமேலாதிக்கவாதிகளின் சிம்ம சொப்பனமாகக் காட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். தேவைக்கேற்றாற் போல அவர் மீது குற்றச்சாட்டுக்களும் பழிகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எண்ணெய் வார்த்து வைக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் மீதான இனவாதத் தீ அந்தச் சமூகத்தின் இறந்த உடல்களை பதம் பார்த்து வருகிறது. அந்த இனத்தைக் கடித்துக் குதற வேண்டும் என வெறி பிடித்திருந்தவர்களுக்கு நல்ல தீனி கிடைத்திருக்கிறது.  இனமேலாதிக்கவாதிகள் திருப்திப்படும் வகையிலான விடயங்கள் அறிவியலையும் மீறி நடத்திக் காட்டப்பட்டு அவர்களுக்கு கிளுகிளுப்பூட்டப்பட்டிருக்கிறது.

இந்த நிலை தொடருமானால் அடுத்த வருடம் மக்கள் முன்வைக்கப்படவிருக்கும் அரசியல் யாப்பு இவர்களின் உணர்வுகளுக்குத் தீனி போடும் வகையில் வடிவமைக்கப்பட்டு அதனூடாக மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது. இதனால் அடுத்து வரும் காட்சிகள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியம்.

அரசியல் யாப்பு என்பது மக்கள் தம்மை நிர்வகித்துக் கொள்வதற்காக அமைத்துக் கொள்ளும் ஆவணமேயன்றி ஆட்சியாளர்களின் இஷ்டப்படி வரைந்து மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் விடயமல்ல. ஆகவே அடுத்து வரும் எதிர்காலத்தில் தமது தலைவிதி எப்படி அமையப் போகிறது என்பதை ஆட்சியாளர்களுக்குத் தீர்மானிக்க விடுவதை விட்டு விட்டு மக்கள் தமக்கான அரசியல் யாப்பை வரைந்தெடுப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

அதற்குரிய அவகாசம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. கொரோனா பீதியால் மக்கள் உறைந்து போயிருக்கும் சந்தர்ப்பத்தை மக்களின் கருத்தெடுப்பதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்த முனைவது ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. ஆகவே மக்களின் யாப்பை மக்களே உருவாக்கிக் கொள்வதற்கு இன்னும் போதுமான அவகாசத்தை மக்கள் தான் பெற்றெடுக்க வேண்டும்.