ஜனாஸா எரிப்பு: சமூக ஊடகங்களின் போலிப் பிரசாரங்களின் பின்னால் அரசியல்வாதிகள்

21

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தற்போது நாட்டில் மிகப் பெரியளவில் பாதிப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இத்தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. பொதுமக்கள் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டல்களுக்கு அமைய செயற்படும் போது மாத்திரமே கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்த முடியும்.

எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்கள் கண்டிப்பாக எரிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட 2170/8ஆம் இலக்கம்  அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://documents.gov.lk/files/egz/2020/4/2170-08_T.pdf

“கொரோனா வைரஸினால் உயிரிழந்த அல்லது உயிரிழந்ததாக  சந்தேகிக்கப்படும் ஆளொருவரின் பூதவுடல் ஏதேனும் சாத்தியமான உயிரியல் அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கத்திற்கென முழுமையாக எரிவதற்கென ஆகக் குறைந்தது 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை 800க்கும் 1200க்குமிடையிலான பாகை செல்சியஸ் வெப்ப நிலையிலும் எரிக்க வேண்டும்” எனவும் குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் வாழும் முஸ்லிம்களும், கத்தோலிக்கர்களும் மிகவும் வேதனையில் இருந்து வருகின்றனர். இவ்வாறு உயிரிழக்கின்றவர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டாம் என்ற கோரிக்கை முஸ்லிம்களினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக  முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, “கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கின்றவர்களின் உடல்களை தகனம் அல்லது அடக்கம் செய்யலாம்” என உலக சுகாதார அமைப்பு விஞ்ஞான ஆய்வுகளின் பின்னர் அறிவித்துள்ளது.

https://www.who.int/publications/i/item/infection-prevention-and-control-for-the-safe-management-of-a-dead-body-in-the-context-of-covid-19-interim-guidance

ஆயினும், இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மரணிக்கின்றவர்களின் சடலங்கள் எரிக்கப்பட்டே வருகின்றன. சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ள  இந்த தீர்மானத்திற்கு இதுவரை விஞ்ஞான ரீதியான விளக்கங்களை கூறவில்லை. எனினும் இந்த தீர்மானத்திற்கு  எதிராக உயர் நீதிமன்றத்தில் பல அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தற்போதைய இரண்டாம் அலையால் கொரோனா வைரஸின் தாக்கத்திற்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுவது போன்று மரணிக்கின்றவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், கொரோனா வைரஸினால் மரணிக்கின்றவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முஸ்லிம் சமூகத்திலிருந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இவ்வாறான நிலையில் கடந்த 2ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் மற்றும் முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் இது பற்றி அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி, “சுகாதார துறையினைச் சேர்ந்த விசேட நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே உடல்களை புதைக்காது தகனம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தினை முன்னெடுத்தோம்” என்றார்.“எனினும், நீதி அமைச்சர் அலி சப்ரி விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு மீண்டும் ஆராய்ந்து வருகின்றது. இதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது” என அவர் கூறினார். இதனை அரசியலாக்க வேண்டாம் என சுகாதார அமைச்சர் எதிர்க்கட்சியினரை கேட்டுக்கொண்டார்.

இவ்வாறான நிலையில், “கொரோனா வைரஸின் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி கிடைத்துவிட்டது. இதனால் இனி சடலங்களை தகனம் செய்யத் தேவையில்லை” என்ற அடிப்படையிலான போலிச் செய்திகள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் கடந்த 03 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் பரப்பப்பட்டன. சடலங்கள் தகனம் செய்யப்படுகின்றமையினால் மிகவும் கவலையடைந்திருந்த மக்களுக்கு எந்தவித மூலங்களுமின்றி (sources)  வெளியான இந்த போலிச் செய்தி மிகப்பெரிய சந்தோசத்தினை ஏற்படுத்தியது. இதனால்,  குறித்த போலிச் செய்தியின் உண்மைத் தன்மையினை அறியாமல் பலர் சமூக ஊடகங்களில் பகிர ஆரம்பித்தமையினால் இது வைரலாக பரவியது. அது மாத்திரமல்லாமல் இந்த தகவலை குரல் பதிவாகவும் சிலர் சமூக ஊடங்களில் பகிர்ந்தனர்.

‘கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்யும் தற்போதைய நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்வது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை’ என மீண்டும் அழுத்தம் திருத்தமாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஊடகம் ஒன்றுக்கு 10.11.2020 அன்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சமூக ஊடகங்களில் மக்களை திசைதிருப்பி அவர்களின் மனநிலைகளை குழப்பும் போலிச்செய்திகள் குறித்து மக்கள் கவனமாக இருக்கவேண்டும்.

இது போன்ற போலிச் செய்திகளை உருவாகுவதற்கு பின்னால் பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார நோக்கங்கள் காணப்படுகின்றன. இந்த போலிச் செய்தியினை பதிவேற்றியவர்களில் பெரும்பாலனாவர்கள் அரசியல்வாதிகளுக்காக பேஸ்புக்கில் தொடர்ச்சியாக எழுதி வருபவர்கள் என்பதை பேஸ்புகில் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் கட்டுரையாளரால் அவதானிக்க முடிந்தது. இலங்கையில் சமூக ஊடகங்களின் கண்காணிப்பினை மேற்கொள்ளும் Hashtag Generation எனும் அமைப்பின் நிறுவுனரான செனால் வன்னியாராச்சியும் இதனை உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமல்லாமல் போலிச் செய்திகளை பரப்புவதன் பின்னணியில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் குரல்கொடுப்பவர்களே அதிகம் காணப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்த கொரோனா காலப் பகுதியில் இது போன்ற பல போலிச் செய்திகள வலம்வர ஆரம்பித்துள்ளன. இதனால் போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்திகளை மாத்திரமே பின்பற்றுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே  மக்களிடம் வேண்டுகோள்விடுக்கின்ற அளவுக்கு இதன் தாக்கம் இப்போது நாட்டில் அதிகம் உணரப்படுகிறது.

இதேவேளை, போலியான செய்திகளை பரப்பிய குற்றத்திற்காக வெள்ளவத்தையில் வசிக்கும் 60 வயதான நபர் ஒருவரும் மிட்டியாகொடையில் வசிக்கும் 18 வயது இளைஞர் ஒருவரும் கடந்த அக்டோபர் மாத முதல் வாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவை, பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் கணினி குற்றங்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனினும், “போலி செய்திகளை உருவாக்குவதையும், பரப்படுவதையும் கட்டுப்படுத்துவதற்கு தேவையான  நேரடி சட்டங்கள் எதுவும் நாட்டில் இல்லை” என சட்டத்தரணியும், ஆய்வாளருமான விரஞ்சன ஹேரத் தெரிவித்தார்.

“இது தொடர்பான சட்டங்களை உருவாக்குவது இன்றியமையாததொன்றாக  உள்ளது. இது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் விரிவாக கலந்துரையாடிய பின்னர் இந்த சட்டம் உருவாக்கப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டார். “பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே குறித்த சட்டம் உருவாக்கப்பட வேண்டும்” என சட்டத்தரணி விரஞ்சன ஹேரத் வலியுறுத்தினார். எவ்வாறாயினும் போலிச் செய்திகளை சட்டத்தால் மட்டும் தீர்க்க முடியுமா என்பது பாரிய கேள்விக்குரியாகும். எனெனில் சமூக ஊடகங்கள் வாயிலாக தமக்கு கிடைக்கப் பெறும் தவறான தகவல்களைப் பரப்புவோரில் பாமர மக்கள் மாத்திரமன்றி நன்கு படித்தவர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதனால் போலிச் செய்திகளை அடையாளம் காண்பது தொடர்பான விழிப்புணர்வினை அனைத்து தரப்பினருக்கும் வழங்க வேண்டியதே இதற்கான நிலையான தீர்வாகும்.

(இலங்கை பத்திரிகை ஸ்தாபனம்)