கல்வியின் பண்புத் தரமும் ஆசிரியர் தேர்ச்சியும்

33
 • கலாநிதி றவூப் ஸெய்ன்

தேர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்காக அறிவு, திறன் ஆகியவற்றை சரியான முறையில் பாவிக்கும் திறமை எனலாம். சர்வதேச கல்விக் கலைக் கலஞ்சியம், தேர்ச்சி என்பது பின்வரும் மூன்று தரத்திலான மனித செயற்பாடுகளை வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளது.

 1. அறிவு- இது ஈடுபடுதல், தெரிவு செய்தல், குறியிடுதல், பிரதிபலித்தல், மதிப்பிடுதல் போன்ற புலக்காட்சி எண்ணக்கருவாக்க செயற்பாடுகளின் விளைவாகும்.
 2. மனப்பாங்கு – குறிப்பிட்ட நிகழ்வுகள் அல்லது பொருட்கள் சார்ந்த உணர்வு வெளிப்பாடுகளின் தோற்றப்பாடு.
 3. ஆற்றுகைத் திறன்கள் – மற்றவர்களால் அவதானித்து உறுதிப்படுத்தக் கூடிய தெளிவான உணர்வு வெளிப்பாடுகளை பிரதிபலிக்கக் கூடிய தன்மையை தனிமனிதனிடத்தில் ஏற்படுத்தும் உள இயக்கம்.

தேர்ச்சியை சுருக்கமாகக் கூறுவதாயின், தரப்பட்ட ஒரு செயற்பாட்டை ஆற்றுவதற்காகத் தேவைப்படும் அறிவு, திறன், மனப்பாங்கு எனக் கூறலாம். இந்த வகையில், ஆசிரியர் தேர்ச்சி என்பது ஆசிரியர் ஒருவர் பாடசாலையில் போதனைக்குத் தேவைப்படும் எண்ணக்கரு விளக்கம், திறன்கள், மனப்பாங்கு என்பவற்றைக் கொண்டிருத்தல் என வியாக்கியானம் செய்யலாம்.

கலகெர் என்பவர் ஆசிரியர் ஒருவர் அறிவுசார் உணர்வுசார் முதிர்ச்சியுடையவராகவும் தனியாகவும் குழுவாகவும் மாணவர்களைக் கையாளும் திறன், மாணவர்களை முன்னேற்றும் திறன், பொருத்தமான விழுமியங்களைப் பேணும் திறன் போன்றவற்றைக் கொண்டிருப்பதை தேர்ச்சி என்கிறார்.

பொதுநலவாய அமைப்பின் குறிப்பொன்று தேர்ச்சி மிக்க ஆசிரியர் ஒருவர் பிள்ளை விருத்தி பற்றிய அறிவு, பாடப் புலத்திலான அறிவு, தனது மாணவர்களை, அவர்கள் சார்ந்திருக்கும் சமூகத்தை வழிப்படுத்தும் திறன், நேர்ப்பாங்கான மனப்பாங்கு, முன்னுதாரணமான நடத்தைகள் போன்றவற்றைக் கொண்டிருப்பர் என குறிப்பிடுகின்றது.

கல்வி தொடர்பான சர்வதேச ஆணைக்குழு 1996 ஆம் ஆண்டு யுனெஸ்கோவிற்குக் கையளித்த அறிக்கையில், புத்தாயிரம் ஆண்டில் ஆசிரியர் ஒருவரின் வகிபங்கைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இது ஆசிரியர்களுக்கான தேர்ச்சிகள் எவை என்பதையும் அடையாளப்படுத்தியுள்ளது. ஆசிரியர்களுக்கு இளம் தலைமுறையினரை உருவாக்கும் முக்கிய பணியொன்று உள்ளது. எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குபவர்களாக மட்டுமன்றி, எதிர்காலத்தை பொறுப்புணர்வுடனும் அர்த்தமுள்ளதாகவும் உருவாக்கும் வகையில் இளம் தலைமுறையினரை ஆசிரியர்கள் கட்டியெழுப்ப வேண்டும். சர்வதேசத்தின் புதிய சவால்களுக்கு முகம்கொடுத்து, புரிந்துணர்வு மற்றும் நவீன மயமாக்கல் சிந்தனைகளுடன் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்கின்ற வகையில் இளைஞர் சமூகத்தை உருவாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதற்கு பலவகைப்பட்ட தேர்ச்சிகள் ஆசிரியர்கள் மத்தியில் வளர்த்தெடுக்கப்படல் வேண்டும்.

ஆசிரியர் தேர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வெளிவந்த கருத்துக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆசிரியர் ஒருவருக்கு இருக்க வேண்டிய தேர்ச்சிகள் எவை என்பது தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

ஹிக்ஸ் பிளக்கிங்டன் என்போர் ஆசிரியருக்குரிய தேர்ச்சிகளாக பின்வருவனவற்றைச் சுட்டிக்காட்டினர்.

 1. தனியாளுக்கான தகைமைகள்
 2. வாண்மைக்குரிய தகைமைகள்
 3. கற்பித்தல் துணைச் சாதனங்களின் மேலாண்மை
 4. போதனையைத் திட்டமிடல்
 5. போதனை முகாமைத்துவம்
 6. வகுப்பறைக் கல்வி நிலையை விருத்தி செய்தல்
 7. சேர்ந்து தொழிற்படுதல்

மேலும் ஹவுஸ்டன் என்பவர் அறிவும் பல்வேறு ஆற்றல்களையும் உள்ளடக்கிய அறிகைசார் தேர்ச்சி, கோட்பாட்டு ரீதியில் அமையாது தொழிற்படு திறன்களை உள்ளடக்கிய ஆற்றுகைசார் தேர்ச்சி, பொருத்தமான, நேர்ப்பாங்கான, விரும்பத் தகு விழுமியங்கள் மற்றும் பண்புகளைக் கொண்ட மனப்பாங்கு சார் தேர்ச்சி என்பன ஓர் ஆசிரியருக்கு அவசியம் எனக் குறிப்பிடுகின்றார்.

ஆசிரியர்களுக்கு அவசியமான தேர்ச்சிகள் என இவான்ரேஸ், ஸ்டீபன் வோர்கர் என்பவர்கள் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றனர்.

 1. கற்றல் கற்பித்தல் செயன்முறையில் விளைதிறன் மிக்க அணுகுமுறையைப் பயன்படுத்தல்
 2. பாட வடிவமைப்பில் நேர்ப்பாங்கான கோட்பாடுகளைப் பயன்படுத்தல்
 3. கற்பித்தல் நுட்பங்களைப் பொருத்தமாகப் பயன்படுத்தல்
 4. தொடர்பாடல் நுட்பங்களை வினைத்திறனுடன் பயன்படுத்தல்
 5. கற்றலைத் தூண்டுவதற்கான வளங்களை, சந்தர்ப்பங்களை உருவாக்குதல்
 6. கற்றலைத் தூண்டும் வகையிலான மதிப்பீட்டு நுட்பங்களைப் பயன்படுத்தல்