ட்ரம்புக்குப் பிந்திய மத்திய கிழக்கு

68
  • முஷாஹித் அஹ்மத்

சமீபகாலமாக மத்திய கிழக்கு அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருவதை எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக மத்திய கிழக்கின் அரசியல் ஸ்திரப்பாடு, இராஜதந்திர உறவுகள், கலாச்சார மற்றும் பண்பாட்டுத்துறை மாற்றங்கள், பொருளாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்து வருவதனை நாங்கள் பார்க்கின்றோம்.

மிகக் குறிப்பாக, கடந்தவொரு 70 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய கிழக்கிலே, சட்டவிரோதமான முறையிலே ஸ்தாபிக்கப்பட்டு அரபு நாடுகளுக்கும் மத்திய கிழக்கின் சமாதானத்திற்கும் பெரும் சவாலாக இருந்து வருகின்ற ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் மீது உருவாக்கப்பட்டிருக்கின்ற இஸ்ரேலுடன், வளைகுடா அரபு நாடுகள் தமது இராஜதந்திர, பொருளாதார, கலை கலாச்சார, சமூக உறவுகளை சுமுகமாக்கிக் கொள்வதற்கு ஒவ்வொரு நாடாக முன்வரு கின்றமை சமீபத்திய மத்திய கிழக்கு அரசியலில் நிகழுகின்ற மிக முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகின்றது.

இதற்கான காரணம், மத்திய கிழக்கு நெருக்கடி என்று ஏழு தசாப்தங்களாக அறியப்பட்ட ஒரு பிரச்சினையின் மையமாக இருந்து வருவது இஸ்ரேலுடன் அரபு நாடுகளுக்கு இருந்த நியாயமான தார்மீக உரிமை கொண்ட பகை முரண்பாடாகும். 1967 யுத்தத் திலே இஸ்ரேல் கைப்பற்றிய பலஸ்தீன நிலங்கள் பலஸ்தீன மக்களிடம் ஒப்படைக்கப்பட்டு இரு நாடு கள் உருவாக்கப்படுகின்ற ஒரு தீர்வுத் திட்டத்தினை தொடக்கத்தில் அனைத்து அரபு நாடுகளும் ஏற்றுக் கொண்டிருந்தன.

1967 இல் கைப்பற்றப்பட்ட நிலங்கள் மீளளிக்கப்பட்டு அது பலஸ்தீன தேசத்தினுடைய நிலபுலங் களாகக் கருதப்பட வேண்டும். இல்லாத பட்சத்தில், இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் தாம் துண்டித்துக் கொள்வோம் என்று அரபு நாடுகள் ஆரம்பத்திலே கூறி வந்தன. இதன் விளைவாக 400 மில்லியன் அரபு மக்கள் வாழ்கின்ற மத்திய கிழக் கிலே சுமார் 12 அரபு முஸ்லிம் நாடுகளும், பாரசீகத்தினை தாய் மொழியாகக் கொண்ட ஈரானும் அவர்களுக்கு மத்தியிலே அவர்களது வாசற்படியிலே இஸ்ரேல் என்ற ஒரு நாடும் இன்று மத்திய கிழக்கு அரசியலிலே மிக முக்கியமான பங்காளர்களாக இருந்து வருகின்றனர்.

கடந்த ஏழு தசாப்தங்களாக அரபு நாடுகள் பலஸ்தீன மக்களுடைய உரிமைகளை மதித்து தங்களுடைய அரபு சகோதரர்களுடைய நில உரிமையை அங்கீ கரித்து இஸ்ரேலுடனான உறவை துண்டித்து அவர்கள் தமது எதிர்ப்பையும் பகிஷ்கரிப்பையும் வெளிப்படுத்தி வந்தனர்.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவினுடைய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதனை தொடர்ந்து மத்திய கிழக்கில் சில அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்தன. அவற்றில் மிக முக்கிய மானது, அவர் மத்திய கிழக்கிற்கு மேற்கொண்ட விஜயம். அவ்விஜயத்தின் போது அவர் இரு முக்கிய பிரச்சினைகளை உருவாக்கினார். முதலாவது, கட்டார் என்ற மத்திய கிழக்கின் மிக வளமான சிறிய நாட் டினை சவூதி அரேபியா, ஓமான், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து ஆகிய நாடுகள் பகிஷ்கரிக்க வேண்டும். அந்த நாட்டை பொருளாதார ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தனி மைப்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு அழுத்தத் தினை ட்ரம்ப் அரபு நாடுகளுக்கு கொடுத்ததன் மூலம் கட்டார் தனிமைப்படுத்தப்பட்டது. இது இன்றைய மத்திய கிழக்கு நெருக்கடியிலே முக்கியமான ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது.

இரண்டாவது, ஜெரூசலத்தினை இஸ்ரேலினு டைய தலைநகரமாக ட்ரம்ப் பிரகடனம் செய்தார். இதன் மூலம் கடந்த 45 ஜனாதிபதிகளில் எவருமே செய்யாத ஒரு முரட்டுத் துணிச்சலான, அசாதாரண மான ஒரு செய்தியை ட்ரம்ப் சர்வதேச சமூகத்திற்கு சொன்னார். பலஸ்தீன மக்களுடைய பண்பாட்டு, பாரம்பரிய, தாயக உரிமைமையை அப்பட்டமாக மீறும் வகையிலும், அவர்களுடைய எதிர்கால தேசத் தினுடைய தலைநகராக கருதப்படுகின்ற அனைத்து சர்வதேச பேச்சுவார்த்தைகளிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட, அவர்களது தலைநகரம் ஜெரூசலம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயத்தினை முற்றாக ஒருதலைப்பட்சமாக ட்ரம்ப் அவருடைய பிரகடனத்தின் மூலம் மறுத்துரைத்தார்.

இதன் பின்னர், ட்ரம்பினுடைய கடந்த நான்கு ஆண்டு கால நிருவாகத்தின் போது மத்திய கிழக்கில் அவர் எதிர்பார்த்த முக்கியமான அரசியல் மாற்றம் நூறு வீதம் முழுக்க முழுக்க இஸ்ரேல் ஆதரவு தன்மை கொண்டது. பலஸ்தீன மக்களை கிஞ்சித்தும் கருத்திற்கொள்ளாத ஒரு பக்க நலனை மட்டும் அடிப்படையாகக் கொண்ட இஸ்ரேலுக்கு மட்டும் ஆதரவான ஒரு நிலைப்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி களின் வரலாற்றிலே மிக மோசமான, விகாரமான, அருவருப்பான வடிவத்தில் எடுத்தவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பின்னர் நிகழ்ந்த விடயங்களை நாம் பார்க்கின்ற போது, குறிப்பாக யெமன் மீது அரபு நாடுகள் தாக்குதல் நடாத்துவதற்கு கூட்டாக இணைந்து ஒரு திட்டத்தினை வகிப்பதற்கு பின்புலமாகவும் வொஷிங்டன் இருந்துள் ளதை நாம் பார்க்கின்றோம். அதாவது மத்திய கிழக்கின் அரசியல் ஸ்திரப்பாட்டினை குழைத்து, ஒரு குழம்பிய குட்டையாக அதனை மாற்றுவதன் மூலம் வழமை போன்று தொடர்ந்தும் மேற்குக்கரை மீது மேற்கொண்டு வரும் நில ஆக்கிரமிப்பு என்ற பிரச்சினையிலிருந்து சர்வதேச சமூகங்களின் கவனத்தினையும் அரபு நாடுகளின் கவனத்தினையும் திசை திருப்புவது ட்ரம்பினுடைய ஒரு முக்கிய நோக்கமாக இருந்தது.

அந்த குழம்பிய குட்டையில், மத்திய கிழக்கிலே சிரியாவில் ஒரு பக்கம் உள்நாட்டுப் போர், யெமனிலே சவூதி தலைமையிலான நாடுகளின் ஆயுதப் போராட்டம், தாக்குதல். இப்படி இருந்து கொண்டிருக்கையில் தான் கட்டார் தனிமைப்படுத்தப்பட்டு பொருளாதார நெருக்கடியினை திட்டமிட்டு உருவாக்கும் சதியை அரபு நாடுகள் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பயந்து மேற்கொண்டிருக்கின்றன.

இன்னொருபுறம் இஸ்ரேலுக்கு சவாலாக இருப்பதாக கூறப்படுகின்ற ஈரான், யெமனிலும் சிரியாவிலும் அநாவசியமாக தலையிட்டு அங்கு அரசியல் ஸ்திரமின்மை யினை ஏற்படுத்துவற்கு முயல்கின்ற ஒரு சூழலையும் நாங்கள் பார்க்கின்றோம். ஆக இவ்வாறு சிரியாவிலும், யெமனிலும், கட்டாரிலும் சிக்கலான நெருக்கடிகள் தோன்றியிருந்த நிலையிலே ஜெரூசலத்தினை பலஸ் தீனத்தின் தலைநகரமாக பிரகடனப்படுத்திய ட்ரம்ப், இன்னொரு புறம் பலஸ்தீன மக்களுடைய சுதந்திர நாட்டு கோரிக்கையினை கிடப்பில் போட்டு, பலஸ்தீன மக்களுக்கு பலஸ்தீனில் உள்ள நில உரிமையை மறுத்து மத்திய கிழக்கில் இருக்கின்ற ஒரேயொரு ஜனநாயக நாடு இஸ்ரேல் தான். அது மனித உரிமைகளைப் பேணு கின்ற நாடு, பலஸ்தீனம் என்று நாடொன்று இல்லை. அதுவொரு கற்பனை. இஸ்ரேல் என்ற ஒரு நாடு மட்டுமே இங்கு இருக்கின்றது என்ற சியோனிச அரசி யல் தத்துவத்தினை நியாயப்படுத்துகின்ற வகையிலே தான் ட்ரம்பினுடைய நகர்வு மத்திய கிழக்கில் இருந்து வருகிறது.

ட்ரம்புக்கு பிந்திய அரசியல் மாற்றங்களுக்குள்ளே, நாம் அவதானிக்கக்கூடிய இன்னொரு முக்கியமான விடயம் தான், இஸ்ரேலை மத்திய கிழக்கிலே அரபு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட, அரபு நாடுகள் தமது உறவுகளை சுமூகப்படுத்திக் கொண்டு, இஸ்ரேலும் தவிர்க்க முடியாத சக்தி என்பதனை ஏற்றுக்கொள்ளச் செய்கின்ற ஒரு புதிய மூலோபாயத்தை ட்ரம்ப் அவரது பதவிக் காலத்திலே உருவாக்கினார்.

Dealing of the Century  என்று அதற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். அதாவது “நூற்றாண்டின் கொடுக்கல் – வாங்கல் திட்டம்”. ஜெரூசலத்தினை, பலஸ்தீன மக்களின் எதிர்கால தாயகத்தின் தலைநகராக ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக வேறு ஒரு இடத்தினை அவர்களுடைய தலைநகரமாக மாற்றுவது. அல்லது அவர்களுக்கு நாடு இல்லை. சுயாதீன, சுயாதிக்க அதிகாரங்கள் சிலவற்றை ஒஸ்லோ மூலம் கொடுப்பது போன்று வழங்கி விட்டு, இஸ்ரேல் என்ற ஒற்றை நாட்டை மாத்திரம் 400 மில்லியன் அரபுகளுக்கு மத்தி யிலே அங்கீகாரம் பெற்ற ஒரு நாடாக மாற்றுவதற்கு ஒரு மூலோபாயத்தினை ட்ரம்ப் நிர்வாகம் தயாரித்தது. அதற்குத்தான் நாங்கள் சொல்கின்றோம் ‘Dealing of the Century – நூற்றாண்டின் கொடுக்கல் வாங்கல் திட்டம்” என்று.

இந்த திட்டத்தினை மத்திய கிழக்கில் இருக்கின்ற, குறிப்பாக வளைகுடா நாடுகள் அனைத்தினதும் ஆதர வோடுதான் ட்ரம்ப் நிருவாகமும் இஸ்ரேலிய ஆட்சி யாளர்களும் இணைந்து வரைந்திருக்கிறார்கள். Dealing of the Century என்ற இத்திட்டத்திலே உள்ளடங்கி யிருக்கின்ற மொத்தமான விடயங்கள் என்ன என்பது பற்றி இதுவரைக்கும் 100 வீதமாக வெளிப்படுத்தப்பட வில்லை. ஊடகவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், மூலோபாய திட்டமிடலாளர்கள், அனைவரும் போல் அதில் இன்ன, இன்ன விடயங்கள் தான் அடங்கியிருக் கின்றன என்ற ஊகத்தினைத்தான் அவர்கள் வெளியிட்டு வருகின்றார்கள்.

ஆனாலும் அந்த ஊகம் பெரும்பாலும் உண்மையைத் தழுவியதாக அமைந்திருக்க வேண்டும் என்று நாங்கள் நம்பலாம். காரணம், பலஸ்தீனர்களது தாயக உரிமைக் கோரிக்கையினை புறக்கணித்து, புறந்தள்ளி இஸ்ரேல் என்ற ஒரேயொரு ஒற்றை நாட்டை அரபு நாடுகள் அனைத்தும் ஆதரித்து விட்டால் பலஸ்தீனர்கள் குரலற்ற வர்களாக, உரிமை கோருவதற்கு அருகதையற்றவர்களாக இஸ்ரேல் என்ற நாட்டை ஏற்றுக்கொள்ளக்கூடியவர் களாக மாறுவார்கள் என்பதுதான் அந்த ஈஞுச்டூடிணஞ் ணிஞூ tடஞு இஞுணtதணூதூ இதனுடைய அடிப்படை மூலோபாயமாக, தந்திரோபாயமாக இருக்கின்றது. இருந்து வருகிறது.

எனவே, இந்தப் பின்னணியில் இருந்து தான் அரபு நாடுகள் இஸ்ரேலுடனான உறவினை சுமுகமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ட்ரம்பின் அழுத்தத்திற்கு வளைகுடா நாட்டு மன்னர்கள் அடிபணிந்து வருகிறார் கள் என்ற உண்மையை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய கிழக்கினுடைய சமீபத்திய அரசியல் மாற் றங்களிடையே மிகவும் அதிர்ச்சியான ஒரு மாற்றம் தான் ஐக்கிய அரபு அமீரகம் விழுந்தடித்துக்கொண்டு இஸ்ரேலுடன் தனது உறவினை சுமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டு ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன் யாஹு அமீரகத்தினுடைய வெளிவிவகார அமைச்சர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து கூட்டாக அந்த உடன்படிக்கையினை கைச்சாத்திட்டு ஊடகங்களுக்கு முன்னால் அவர்கள் அதனை வெளிப்படுத்திய காட்சிகளை நாங்கள் சர்வதேச ஊடகங்களில் பார்த்தோம்.

உண்மையில் 1980களில் இருந்து கடந்த ஒரு 40 ஆண்டு காலமாகவே அரபு நாடுகளினுடைய தலைவர் கள், மன்னர்கள் இஸ்ரேலுடன் இரகசியமான உறவுகளைப் பேணி வந்திருக்கிறார்கள். இதற்கு எந்தவொரு அரபு நாடும் விதிவிலக்கு இல்லை என்கிற அளவுக்கு அவர்கள் கள்ளத்தனமாக இஸ்ரேலுடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறார்கள். பலஸ்தீன மக்கள், தமது அரபு சகோதரர்கள் அறியாத வண்ணம் இரகசியமான பல வேலைத்திட்டங்களோடு அவர்கள் இணைந்து செயற்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் இன்று ட்ரம்ப் ஒரு புதிய அரசியல் யதார்த் தத்தினை உருவாக்குவதன் மூலம் இஸ்ரேல், அரபு நாடுகளாலேயே அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாடு என்ற விம்பத்தை சர்வதேச அளவிலே உருவாக்குவதன் மூலம் இஸ்ரேலுடைய பாதுகாப்பு, இஸ்ரேலுடைய ஸ்திரப் பாடு, அதனுடைய பொருளாதார வளர்ச்சி, சர்வதேச அங்கீகாரம் இவற்றை உறுதிப்படுத்துவதற்கான ஒரு உபாயத்தினை ட்ரம்ப் நகர்த்துகின்றார்.

இதுதான் உண்மையில் மத்திய கிழக்கில் இன்று நடைபெற்று வருகின்ற விநோதமான அரசியல். இந்த அரசியல் பொறியில் அல்லது சதிவலையில் சிக்கிய முதலாவது அரபு நாடு வளைகுடாவிலுள்ள ஐக்கிய அரபு அமீரகமாகும், சந்தேகமில்லை. இரண்டாவது பஹ்ரைன் என்ற நாடும் இந்த வலையில் வீழ்ந்திருக்கின் றது. இப்போது ஒமர் பஷீருக்குப் பிந்திய சூடானிலே ஆட்சியை கைப்பற்றியிருக்கின்ற இராணுவ ஜெனரல்கள், இராணுவ கொடுங்கோலர்கள் ஆட்சியை கைப் பற்றியிருக்கிறார்கள். அந்த இராணுவ கொடுங்கோலர் கள் மதச்சார்பற்றவர்கள். அவர்கள் ட்ரம்போடு தேர்த லுக்கு சற்று முன்னர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, இஸ்ரேலை ஒரு சுமுகமான, ஒரு அமைதியான தனித்த உறவுகளைப் பேணக்கூடிய நாடாக நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்ற ஒப்பந்தத்திலே கைச்சாத்திட்டதாக ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்பாக கூறிவிட்டார்.

ட்ரம்பைப் பொறுத்த வரையில் அமெரிக்க மக்க ளுக்கு மத்தியில், குறிப்பாக அமெரிக்காவில் வாழ்கின்ற ஒரு கோடி யூதர்களின் வாக்குகளை கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக, அவர்களை திருப்திப்படுத்து வதற்கு தன்னுடைய ஜனாதிபதித் தேர்தலுக்கு அனைத்து வகையான செலவுகளையும் கைளிக்கின்ற யூதர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் தான் பெறுகின்ற அந்த கடனுக்கு, செஞ்சோற்றுக்கடனை நிறைவேற்றுவதற்காக இஸ்ரேலை உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாடு என்ற வரிசையில் இடம்பெறச் செய்வதற்கு இந்த மூலோபாயத்தினை அவர் தொடங்கினார்.

ஆக ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சூடான் ஆகிய மூன்று நாடுகளும் இந்த விடயத்தில் இணக்கம் தெரிவித்திருக்கின்றன. உண்மையிலே இப்பட்டியலில் எதிர்காலத்தில் சவூதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளும் சேர்வதற்கு வாய்ப்பிருக்கின்றது. இதன் மூலம் பலஸ்தீன மக்களுக்கு சொல்லப்படுகின்ற செய்தி, கடந்த 70 ஆண்டு காலமாக ஆக்கிரமிக்கப்பட்ட தங்களது நிலத்தினை மீட்பதற்கு போராடுகின்ற, ஜனநாயக வழியிலே பாடுபடுகின்ற சக்திகளுக்கு அந்த அரபு நாட்டுத் தலைவர்களின் துரோகத்தனமான, அருவருக்கத் தக்க, விகாரமான இந்த யூத, சியோனிச சார்பு நகர்வுகள் ஒரு புறம் ஏமாற்றத்தினை அளித்தது மட்டுமல்ல, அவர் களது முதுகிலே குத்துகின்ற மிகப்பெரும் வரலாற்றுத் துரோகத்தினை இந்த அரபு நாடுகள் பலஸ்தீன மக்களுக்கு செய்திருக்கின்றன.

பலஸ்தீன மக்கள் இதனை, குறிப்பாக பலஸ்தீனத்தி லுள்ள சிவில் உரிமை போராளிகள், சமூக செயற்பாட் டாளர்கள், விடுதலைப் போராளிகளை பொறுத்த மட்டில் அவர்கள் இதனை ஆச்சரியத்தோடு பார்க்க வில்லை. காரணம், இவ்வாறான அரசியலலை அரபு நாட்டுகள் நான்கு தசாப்தங்களாக ஒளிவு மறைவாக, திரை மறைவில் மேற்கொண்டு வருகிறார்கள் என்ப தனை அவர்கள் நன்கு அறிவார்கள்.

ஆனால் இன்று பகிரங்கமாக இந்த ஆக்கிரமிப் புக்கு, இந்த அடாவடித்தனங்களுக்கு சோரம் போயிருக்கின்ற அரபு நாட்டு தலைவர்கள் இழைக்கின்ற இந்த வரலாற்று துரோகத்தை, அரசியல் துரோகத்தை அவர்கள் மிகுந்த கவலையோடும்,  விசனத்தோடும் பார்க்கின்றார்கள். காரணம், அரபு நாடுகள் 1970 இற்குப் பிறகு பலஸ்தீன மக்களை தனிமைப்படுத்தி னார்கள். பொருளாதார ரீதியாகவோ, இராணுவ ரீதியாகவோ எந்த அடிப்படையிலும் குறிப்பிட்ட ஒரு சில அரபு நாடுகளின் அரசாங்கங்களைத் தவிர பெரும்பான்மையான அரபு நாட்டு அரசாங்கங்கள் புறக்கணித்தன. அவர்களது கோரிக்கைகளுக்கும் பதிலளிக்கவும் இல்லை.

இப்படியான ஒரு சூழ்நிலையிலே குறிப்பாக சவூதி அரேபியாவுடைய புதிய இளவரசர் பதவிக்கு வந்தவுடன், “அமெரிக்காவும் நாங்களும் சொல்வதை கேளுங்கள். இல்லாவிட்டால் பலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO)  எங்களிடம் எவ்வித உதவியும் கேட்டு வர வேண்டாம்’ என்று அதன் தலைவர் மஹ்மூத் அப்பாஸை பார்த்து பகிரங்கமாக கூறியதனை நாங்கள் வரலாற்றில் அறிகின்றோம்.

ஆகவே, இப்படி அப்பட்டமாக வெளிப்படை யாக பலஸ்தீன மக்களை இஸ்ரேலினுடைய, அமெரிக்காவினுடைய அடிமைகளாக மாற்றுவதற்கு அரபு நாட்டு தலைவர்கள் விழைகின்றார்களே ஒழிய, இஸ்ரேலை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளுங்கள். பலஸ்தீன் என்ற ஒரு நாடு உருவாக்கப்படாவிட்டா லும் பரவாயில்லை. இஸ்ரேலை ஏற்றுக்கொண்டு மேற்குக்கரையில் அது தொடர்ந்தும் இழைத்து வருகின்ற போர்க்குற்றங்களையும் நில ஆக்கிரமிப் பினையும் ஏற்றுக்கொள்ளுங்கள். தாராளமாக நீங்கள் சாகுங்கள். தாராளமாக உங்கள் நிலங்களையும் உங்கள் வீடுகளை இழந்து விடுங்கள். அவற்றை பார்த்துக்கொண்டிருங்கள். உங்களுக்கு அங்கு எந்த உரிமையும் இல்லை. ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகரம் தான். இஸ்ரேல் என்பது தவிர்க்க முடியாத ஒரு சக்திதான். அது மத்திய கிழக்கில் ஒரு நாடு தான் என்று பலஸ்தீன மக்களுக்கு ஒரு அருவருப்பான செய்தியைத்தான் அரபு நாட்டு தலைவர்கள் தொடர்ந்தும் வழங்கி வருகின்றார்கள்.

இந்த சூழ்நிலையிலே மத்திய கிழக்கில் இன்று இஸ்ரேலை ஆதரிக்கின்ற அரபு நாட்டு ஆட்சிபீடம் அதனோடு நின்று விடாமல் ஒவ்வொரு நாட்டிலும், மத்திய கிழக்கிலுள்ள சில நாடுகள். உதாரணமாக சவூதி அரேபியா, குவைத் போன்ற நாடுகள் பாரம்பரியமாக இஸ்லாத்தை மிக நெருக்கமாக பின்பற்று கின்ற நாடுகள் என்று பெயர் பெற்ற நாடுகள். ஆனால் இன்று அவர்கள் யஹுதிகளிடம் அடைக்கல அரசியல் செய்து வருகின்ற அதே சூழ்நிலையிலே தங்களுடைய நாடுகளை தாராளமயமாக்குவதன் மூலமே எதிர்காலத்தில் பொருளாதார, அரசியல் முன்னேற்றங்களை காணலாம் என்ற ஒரு நிலைப்பாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

இதனுடைய பிரத்தியட்சமான வெளிப்பாடுகளில் ஒன்று தான் சமீபத்திலே ஐக்கிய அரபு அமீரகம் சில சட்ட சீர்த்திருத்தங்களை அறிவித்துள்ளது. அதில் மிக முக்கியமானது, மதுபான தடைச்சட்டம் அந்த நாட்டிலே நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தினுடைய 80 வீதமான மக்கள் வெளிநாட்டவர்கள். அமெரிக்கர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், இந்தியர்கள், பங்காளிகள், பிலிப்பைன்ஸ்காரர்கள் என்று பல நாட்டவர்களை அதிகம் கொண்டுள்ள ஒரு நாடு அமீரகம். அங்கே வெறும் 10% அல்லது 15% ஆனவர்கள் தான் அமீரகத்தை சேர்ந்த அரேபியர்கள்.

அங்கு மத்திய கிழக்கின் பிற நாடுகளைப் போன்று தூய அரபு மொழி. இன்று அருகி வருவதை பார்க்கின்றோம். அங்கு ஆர்மியா எனப்படும் குடூச்ணஞ் மொழியே பெரும்பாலான அரபு நாடுகளில் வழக்கில் உள்ளது. அரபு மொழியின் தூய்மை முற்றிலும் இல்லாமல் போய் விடுமோ என்று அஞ்சுகின்ற அறிஞர்கள் அதனை பாதுகாக்க வேண்டும் என்று ஆய்வுரைகள் நிகழ்த்துகின்ற, கட்டுரைகளை எழுதுகின்ற நிலைக்கு வந்திருக்கின்ற அளவுக்கு தூய அறபு மொழியினுடைய செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து ஆர்மியா என்கின்ற Slang Language செல்வாக்கு செலுத்துகின்றது.

இன்னொரு புறம், வெளிநாட்டு மொழிகள் அதிகளவு செல்வாக்கு செலுத்துகின்ற ஒரு நாடாக அமீரகம் இருக்கின்றது. இன்று அந்த நாட்டிலே பெரும்பான்மையான முன்னணி பல்கலைக்கழகங்கள் பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளிலே அமைந்திருக்கின்றன. ஆங்கில மொழி அறிவு இல்லாமல் எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் நுழைய முடியாது எனும் அளவுக்கு ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளின் ஆதிக்கம் அங்கு காணப்படுகின்றது. காரணம் வெளிநாட்டவர்கள் தான் அங்கு பெரும்பான்மையானவர்கள்.

(தொடர்ச்சி புதன்கிழமை இதழில் வரும்)