தற்போதைய முஸ்லிம்களுக்கு எது முதன்மையானது? தேர்தல் அரசியலா? உரிமைசார் அரசியலா?

213

எம்.ஏ.எம். பௌசர்

சிரேஷ்ட விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையில் சிறப்புக் கலைமாணிப் பட்டப் படிப்பினை முதல் வகுப்புச் சித்தியுடன் பூர்த்தி செய்த எம்.ஏ.எம்.பௌசர், அதே பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையில் சிரேஸ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையில் முதுகலைமாணிப் பட்டப்படிப்பினைப் பூர்த்தி செய்துள்ள இவர், முரண்பாடு மற்றும் சமாதானக் கற்கையில் டிப்ளோமாப் பட்டத்தினையும், மனித உரிமைகள் மற்றும் சமதானக் கற்கையில் டிப்ளோமாப் பட்டத்தினையும் பூர்த்தி செய்துள்ளார். இவர் தேசிய மற்றும் சர்வதேச ஆய்வரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து வருவதுடன் பல்வேறு ஆய்வுச் சஞ்சிகைகளிலும் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார்.

நேர்காணல் – P.M. முஜீபுர் ரஹ்மான்

 

  • ஒரு யாப்பு ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது?

18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜோபஸ் ஸ்டைன் என்ற அறிஞர் கூறுகிறார். “அரசியல் யாப்பு இல்லாத அரசாங்கம் என்பது உரிமை இல்லாத அதிகாரத்தைப் போன்றதாகும்.’ அதாவது, ஒரு நாட்டை மற்றும் சமூகத்தை சிறந்த முறையில் வழிநடத்த வேண்டும் என்றால், அங்கு  சிறந்த அரசியல் யாப்பு என்ற ஒன்று கட்டாயமாக இருக்க வேண்டும்.

வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டங் களிலும் சர்வதிகார ஆட்சியைத் தடுப்பதற்கான ஜனநாயகத்தின் மிகச் சிறந்த தந்திரோபாயமாக இந்த அரசியல் யாப்பு இருந்து வந்துள்ளது. அதனால்தான் புதிய ஆட்சிகள் ஒழுங்கமைக்கின்றபோது, அந்த அரசாங்கங்களுக்கான வழிகாட்டுகின்ற தத்துவமாக, அந்த அரசாங்கங்களுக்கு அதிகாரங்களை வரையறுத்து வழங்கு கின்ற முக்கிய ஆவணமாக இந்த அரசியல் அமைப்பு இருப்பதை நாம் காணலாம்.

இந்த அரசியல் அமைப்பு பொதுவாகவே எல்லா அரசுகளிலும் வாழ் கின்ற குடிமக்களுக்கு தெரிந்திருக்கக் கூடிய மிக முக்கிய அடிப்படை ஆவணமாக அது பார்க்கப்படுகின்றது. ஏனெ னில், ஆட்சியாளர்கள் குடிமக்கள் மீது அதிகாரங்களைப் பிரயோகிக்கின்றபோது அந்த அதிகாரங்கள் எல்லை மீறக்கூடிய அல்லது அந்த அதிகாரங்கள் ஏனைய மக்களின் உரிமைகளை மறுக்கின்ற, அவர்களின் சுதந்திரத்தை மழுங்கடிக்கின்ற ஆபத்தான நிலைமைகள் ஏற்படக் கூடியதாகவும் இருக்கும்.

இதனை அரசியலின் தந்தை அரிஸ்டோடில் “அறிவுடைய மக்களின் ஆட்சியை விட சட்டத்தின் ஆட்சிதான் மேலானது” என்றார். அதாவது, எப்படிப்பட்ட ஆட்சியாளர்களாக இருந்தாலும் அவர் கள் தவறிழைக்கலாம், ஆனால் சட்டம் தவறிழைக்காது. இதன் மூலம் யாப்பின் (சட்டத்தின் மூலக்கூறு) முக்கியத்து வத்தை எடுத்துக் கூறினார். அதன் அடிப்படையில்தான் இந்த நவீன அரசாங்கங்களில் அரசியல் யாப்பு என்பது மிக முக்கிய ஒன்றாகக் காணப்படுகின்றது.

அதன் அடிப்படையில்தான் ஜனநாயக அரசாங்கமாக இருந்தால் என்ன, கம்யூ னிஸ அரசாங்கமாக இருந்தால் என்ன, பாசிச அரசாங்கமாக இருந்தால் என்ன எல்லோரும் ஒரு அரசியல் யாப்பை அடிப்படையாக வைத்துத்தான் அரசாங் கங்களை முன்னெடுத்துச் செல்கிறார்கள். ஆனால், ஒரு ஆட்சியாளர் சர்வதிகாரியாக மாறுவதாக இருந்தால் அவர் அரசியல் யாப்பின் ஊடாகவே அதனை முன்னெடுக்க முயற்சிப்பதை நவீன உலகில் நாம் பார்க்கிறோம். எது எப்படியோ, அரசியல் யாப்பு என்பது அதிமுக்கிய ஆவணமாகக் காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

இப்பின்னணியில், அரசியல் யாப்பு என்பது ஒரு நாட்டை ஆள்வதற்கான அடிப்படை சட்ட விதியாகவே நோக்க வேண்டியுள்ளது. ஆனால், அரசியல் யாப்பு என்பது அந்நாட்டின் எல்லா விடயங்களையும் உள்வாங்குவதில்லை, அது அந்நாட்டின் அடிப்படையான விட யங்களை மாத்திரம்தான் உள்ளடக்கு கிறது. இதனை உருவாக்குகின்றபோது அது அந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை உள்ளடக்குவது கட்டாயமாகும். ஏனெனில், அந்நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்குமான நம்பிக்கையான கேடயமே இந்த அரசியல் அமைப்புத்தான்.

எனவேதான் அது அடிப்படை உரிமைகள் மற்றும் மக்களின் சுதந்திரத்தை அடிப்படையாக வைத்து முழு யாப்பும் தயாரிக்கப்பட வேண்டும். ஆட்சியாளர் கள் தவறிழைக்கின்றபோது, உரிமை களை மறுக்கின்றபோது அதனை தட்டிக் கேட்பதற்கும், உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் நீதிமன்றத்தை நாடு வதற்குமான பாதுகாப்பு அரணாக இந்த யாப்பு அமைகிறது. எனவே, அந்நாட்டு மக்கள் யாராக இருந்தாலும் யாப்பு விடயத்தில் கரிசனை காட்டுவது கட்டாயக் கடமையாகும்.

இந்த யாப்புதான் அந்நாட்டு மக்களின் வாழ்வியலையும் உரிமையையும் அடிப் படையாகக் கொண்டுள்ளது. அதனால் தான், ஜேர்மனியின் அரசியல் யாப்பை ‘அடிப்படைச் சட்டம்’என்று அழைக்கிறார்கள். அது மாத்திரமல்ல அதற்கான தனியான அந்தஸ்து உண்டு. அதேபோல், அதுதான் ஆட்சியாளர்களுக்கு அதிகாரத்தை வழங்குகின்றது. அதேபோல் குடிமக்களுக்கு அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை வழங்குகின்றது. ஆகவேதான், யாப்பு முக்கியம் பெறுகின்றது.

  • அரசியல் யாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறினீர்கள், தற்போது நாட்டில் உருவாக்கப்படுகின்ற புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் சிறுபான்மையினர் எவ்வாறான கரிசனைகளை மேற்கொள்ள வேண்டும்?.

இலங்கையில் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்க ளின் குறைபாடுகளே இந்நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஏற்படுவதற்கு வழிவிட் டது. அத்தகைய சந்தர்ப்பங்கள் மீண்டும் உருவாகுவதனைத் தவிர்த்து நாட்டில் நீண்டகால அமைதியினை ஏற்படுத்து வதற்கு புதிய அரசியலமைப்பில் சிறு பான்மையினர் குறித்த கரிசனைகள் உள்ளீர்க்கப்பட வேண்டும்.

அரசின் தன்மை:

நீண்டகால இன முரண்பாட்டின் விளைவாக அரசின் தன்மையினை மறு சீரமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. எனினும் அரச மறுசீரமைப்பின் போது ஒற்றையாட்சி யிலிருந்து சமஷ்டிக்கு நகருதல் அல்லது ஒற்றையாட்சிக்குள் மட்டும் நின்று தீர்வினைத் தேடுதல் போதுமானதன்று.

சிலவேளைகளில் சமஷ்டி தென்னிலங்கையில் வேண்டப்படாத ஒரு சொல்லாடலாகவும் ஒற்றையாட்சி வடக்கு கிழக்கு சமூகங்களைப் புறமொதுக்கும் குறியீட்டுச் சொல்லாகவும் பார்க்கப்படுகின்றது. எனவேதான் புதிய யாப்பில் இடம்பெறும் அரச மறுசீரமைப்பு மேற்குறிப்பிட்ட சொற்பதங்களின் நேரடிப் பிரயோகத்தினைத் தவிர்த்து பிராந்தியங்களுக்கு அதிகளவு சுயாட்சியினை வழங்கத்தக்க ஒன்றாக அமைதல் வேண்டும்.

பிராந்தியங்களை நிறுவுகின்றபோது தற்போது காணப்படும் மாகாண அரசுகள் ஒவ்வொன்றினையும் பிராந்தியங்களாக அமைத்துக்கொள்ள முடியும். அப்பிராந் தியங்கள் ஒவ்வொன்றும் பிராந்திய மட்டத்திலான அரசாங்கக் கட்டமைப்பின் கீழ் செயற்பட வழிசெய்யப்படுதல் வேண்டும்.

பிராந்திய அரசுகளுக்கான தலைவர்கள் அந்தந்த பிராந்தியங்களிலிருந்து தெரிவு செய்யப்படுதல் வேண்டும் என்பதுடன் குறித்த பிராந்திய மக்களே பிராந்திய அரசுகளின் தலைவர்களையும் அரசாங்கத்தின் இதர உறுப்பினர்களையும் தெரிவு செய்வதற்கான உரிமை யினைப் பெற்றிருத்தல் வேண்டும்.

அரசாங்கத்தின் வடிவம்:

பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித்துவ அரசாங்க முறையின் நடைமுறை தொடர் பில் கசப்பான அனுபவங்களையே இலங்கை பெற்றுள்ளது. இந்நாட்டின் சுதந்திரத்திலிருந்து சுமார் 30 ஆண்டுகள் பாராளுமன்ற அரசாங்க முறைநடைமுறைப்படுத்தப்பட்டு இறுதியில் அம்முறை தோல்வி கண்டது.

1978 இலிருந்து நிறைவேற்று ஜனாதிபதி முறை அறிமுகமான போதிலும் அம்முறையின் கீழ் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அதிகரித்த அதிகாரங்கள் நாட்டில் சிக்கலான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளதனையும் அவதானிக்க முடிகின்றது.

எனவேதான் அரசாங்க முறையின் வடிவமைப்பில் புதிய மாற்றங்களைச் செய்வது பொருத்தமானதாக அமையும். இதற்கமைய சுவிட்சர்லாந்தில் பின்பற்றப்படுகின்ற பன்மைத்துவ அடிப்படை யிலான 7 பேர் கொண்ட கூட்டு நிறைவேற்று முறைமை இலங்கைக்கு மிகவும் சாதகமாக அமையத்தக்கது.

எனினும் பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித்துவ முறை என்ற சட்டகத்திற்குள் நின்று அரசாங்க வடிவத்தினை தேடுகின்ற போது ஜனாதிபதித்துவ முறையினை தொடர்ந்தும் இருக்கச் செய்வது  சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில் மிகவும் உசிதமானதாகும். ஆயினும் அது விடயத்தில் ஜனாதிபதியின் சர்வாதிகாரம் எழுச்சியடைவதனை தடுப்பதற்கு அரசியல் யாப்பில் ஏற்பாடுகள் செய்யப்படுதல் வேண்டும் என்பதுடன் சிறுபான்மை சமூகங்களைப் பிரதிநிதித் துவப்படுத்தத்தக்க உபஜனாதிபதிகள் முறையினையும் உள்ளீர்ப்புச் செய்ய முடியும்.

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் அரசியலமைப் புக்கான 19வது திருத்தத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆணைக்குழுக்கள் மூலமாக தடைகள் சமன்பாட்டு முறையொன்றினை புதிய யாப்பில் பரிந்துரை செய்ய முடியும். அதன் மூலம் ஜனாதிபதி ஆட்சி முறையின் மூலம் எழுச்சியடையும் எதேச்சதிகாரப் போக்கினை பெருமளவுக்குக் கட்டுப்படுத்தலாம்.

இதன்படி பிரதான இரு சிறுபான்மைக் இனங்களையும் (தமிழ், முஸ்லிம்) பிரதிநிதித்துவம் செய்யத்தக்க இரு உப ஜனாதிபதிகளை நியமிப்பதுடன் அவ் உபஜனாதிபதிகள் அரச நிர்வாக விடயத்தில் இரத்து அதிகாரத்துடன் செயற்படக்கூடிய நிலையினையும் உருவாக்குதல் வேண் டும். அதேபோன்று பிராந்திய நிர்வாகம், நாட்டின் உள்ளகப் பாதுகாப்பு மற்றும் முப்படைகள் விடயத்திலும் உப ஜனாதிபதிகளுக்கு அதிகாரங்களை வழங்குதல் வேண்டும்.

பிரஜாவுரிமை:

பிரஜாவுரிமை தொடர்பில் தெளிவான பார்வையினை யாப்பு உள்ளடக்கியிருக்க வேண்டும். இதற்கமைய இலங்கையில் வாழ்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய தேசிய இனங்கள் எத்தகைய பாரபட்சமுமின்றி சுதந்திரமாகச் செயற்படத்தக்க வகையில் பிரஜா வுரிமை அந்தஸ்து வரிவுபடுத்தப்பட வேண்டும்.

இனம் அல்லது மதம் என்ற காரணிகளின் அடிப்படையில் இலங்கைப் பிரஜைகள் பாகுபாடு செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட காரணிகளின் ஊடாக நாட்டின் ஐக்கியம் மற்றும் அரசியல் ஒருமைப்பாடு சிதைக்கப்படுவதற்கு இடமளிக்கக் கூடாது.

எனினும் பிராந்தியங்களுக்கு அதிகாரத்தினை பகிர்ந்தளித்து பிராந்தியங்களை சுயாதீனமான அலகுகளாகச் செயற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகுகின்ற போது இரட்டைக் குடியுரிமை பற்றி பரிசீலிப்பதும் சாதகமானதாக அமையும். அத்தகைய குடியுரிமையானது தேசிய மற்றும் பிராந்திய ரீதியிலானது என அமைந்திருக்க முடியும்.

சமயம்:

இலங்கை பல்லின மற்றும் பன்மைக் கலாசாரத்தினைக் கொண்ட ஒரு நாடு என்றவகையில் அரசு மதசார்பற்றதாகவும் பல்லின, கலாசாரத் தன்மைகளைப் பிரதிபலிக்கத்தக்கதாகவும் இருக்க வேண் டும். அதேவேளை அனைத்து மத மற்றும் கலாசாரக் குழுக்கள் தமது நம்பிக்கை யினை சுதந்திரமாகப் பின்பற்றுவதற்கும் யாப்பில் இடமளிக்கப்படல் வேண்டும்.

அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும்:

தனிமனித உரிமைகளையும் சுதந்திரங்களையும் முழுமையாகப் பாதுகாக்கக் கூடியவகையில் பரந்தளவிலான சிவில், பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகள் யாப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டும். அதேபோன்று சிறுவர்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மையோர் போன்ற விசேட குழுக்களையும் கருத்திற் கொள்ளத்தக்கதான உரிமைகள் ஏற்பாடு அவசியமான தாகும்.

இது விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பன்டார்நாயக்க குமாரதுங்கவின் அரசாங்கம் அறிமுகம் செய்த அரசியல் யாப்பு நகல் திட்டம் மிகவும் சாதகமான உரிமைகள் பட்டியலை உள்ளடக்கியிருந்தது. அத்தகைய உரிமைகள் பட்டியலில் மீளக் கவனம் செலுத்துவதன் மூலம் பரந்தளவிலான உரிமைகளை புதிய யாப்பில் உள்வாங்கிக் கொள்ள முடியும்.

அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு விடயத்தில் தெளிவானதும் உறுதியானதுமான ஏற்பாடுகள் செய்யப்படுதல் வேண் டும். இதற்கமைய பிரஜைகள் தமது அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளைச் செய்வதற்கான கால அளவினைக் கூட்டுதல், நிறுவன மற்றும் அமைப்பு ரீதியாக அடிப்படை உரிமை மீறல் வழக்கு களைப் பதிவு செய்ய இடமளித்தல் போன்ற ஏற்பாடுகளையும் யாப்பில் உட்சேர்த்தல் வேண்டும்.

மேலும் பிரஜைகளின் அடிப்படை மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான ஆரம்ப நிலை அதிகாரங்கள் மாவட்ட மேல் நீதிமன்றங்களுக்கு வழங்கப்படுதல் வேண்டும். அது விடயத்தில் இறுதி நியாயாதிக்கத்தினைக் கொண்ட நீதிமன்றமாக உச்ச நீதிமன்றத்தினை மாற்றியமைத்தல்.

மொழியுரிமை:

மொழியுரிமை விடயத்தில் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளை நாட்டின் அரச கரும மொழியாக (தேசிய மொழி) அறிவிப்புச் செய்யும் தற்போதய யாப்பு ஏற்பாட்டினை தொடர்ந்தும் இருக்கச் செய்தல்.

அதேபோன்று, குறித்த இரு அரச கரும மொழிகளினதும் நாடுதழுவிய அமுலாக்கத்தினை உறுதி செய்வதற்கான யாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுதல் பேண்டும். ஆங்கில மொழியின் முக்கியத்துவம் கருதி அதனை ஒரு இணைப்பு மொழியாக கருதுதல் பொருத்தமானது.

அரச கொள்கை வழிகாட்டிக் கோட்பாடுகள்:

புதிய யாப்பின் கீழ் இலங்கை மதசார் பற்ற பிராந்தியங்களின் ஒன்றியக் குடியரசாக அமைதல் வேண்டும். அவ்வரசு ஜனநாயகத் தார்ப்பரியங்களைத் தழுவிய அரச கொள்கை வழிகாட்டிக் கோட்பாடுகளை கொண்டிருக்க வேண்டும் என்பதுடன் அக்கோட்பாடுகள் ஒவ்வொன்றினதும் அமுலாக்கத்திற்கு சட்டரீதியான பாதுகாப்பினைப் பெற்றுக் கொடுத்தல் வேண்டும்.

சட்டவாக்க சபை:

அரசு பிராந்தியங்களின் ஒன்றியக் குடியரசாக அமைகின்ற போது சட்டவாக்க        சபையினை இரு சபை கொண்டதாக மாற்றியமைத்தல் வேண்டும். இவற்றுள் முதலாவது சபை நாட்டின் தேசிய சபையாகவும் இரண்டாவது சபை பிராந்தியங் களின் சபையாகவும் அமைதல் வேண்டும். இவ்விரு சபைகளினதும் உறுப்பமைவினை நாட்டின் சனத்தொகை மற்றும் உருவாக்கப்படும் பிராந்தியங்களினது எண்ணிக்கை என்பவற்றினைக் கொண்டு தீர்மானித்தல்.

சட்டவாக்க சபையில் இரண்டாவது சபையாக விளங்கும் பிராந்தியங்களின்         சபைக்கு பிராந்தியங்கள் தொடர்பான பரந்தளவு அதிகாரங்கள் வழங்கப்படுதல் வேண்டும். இப்பிராந்திய சபைகளுக்கு உபஜனாதிபதி தலைவராகச் செயற்படுதல் வேண்டும்.

இரண்டு உப ஜனாதிபதி என்று வருகின்ற போது பிராந்தியங்களின் சபையின் பதவிக்காலத்தினை நான்கு ஆண்டு களாக வரையறுத்து இரண்டு ஆண்டு களுக்கொருமுறை சிறுபான்மையினரிலிருந்து தெரிவு செய்யப்படும் இரண்டு உப ஜனாதிபதிகளையும் சுழற்சி முறை அடிப்படையில் பிராந்தியங்களின் சபைக்குத் தலைவராக நியமித்தல்.

அரசியல் யாப்பின் மேலாதிக்கம்:

அரசு பிராந்தியங்களுடன் இணைந்து ஐக்கிய அரசாக அமைய வருவதனால் அரசியல் யாப்பு மேலான்மை செய்யக் கூடிய நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கமைய அரசியல் யாப்பினைப் பாதுகாக்கும் பொறுப்பு உச்ச நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டு பிராந்தியங்களினது சுயாதீனமான செயற்பாடு யாப்பு ரீதியாக உறுதிசெய்யப்படுதல் வேண்டும். இது விடயத்தில் அரசியல் யாப்பின் பாதுகாப்பினை உறுதி செய்யத்தக்க அரசியலமைப்புப் பேரவை ஒன்றினை அமைப்பதும் வரவேற்கத்தக்கது.

அதிகாரப் பகிர்வு:

அதிகாரமானது மத்திய – பிராந்திய அரசுகளுக்கிடையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதற்கமைய தற்போதய மாகாண சபைகளுக்கு வழங்கப்பட் டுள்ள அதிகாரங்களிலும் பார்க்க பரந்தள விலான அதிகாரங்களை வழங்குவது அவ சியமாகும். அதிலும் குறிப்பாக காணி மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு, பொருளாதார முகாமைத்துவம் போன்ற விடயங்களில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

மத்திய அரசு தாம் பகிர்ந்தளிக்கின்ற அதிகாரங்களின் ஊடாக பிராந்தியங்களை தமது கட்பாட்டினுள் வைத்திருக்கும் நிலை தவிர்க்கப்பட வேண்டும். அதற்காக பிராந்தியங்களின் சுயாதீனத் தன்மையில் மத்தியரசு தலையீடு செய்வதற்கான அதிகாரங்களை அகற்றுதல் வேண்டும். விசேடமாக அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் போது ஆள்புல ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிவிவகாரம் மற்றும் நிதி உள்ளிட்ட விடயங்களில் மத்தியரசு கடப்பாட்டினைக் கொண்டிருக்க முடியும்.

அதேவேளை, ஐக்கிய அமெரிக்க போன்ற நாடுகளில் உள்ளது போன்று மத்திய அரசின் அதிகாரங்களை வரை யறுத்து எஞ்சிய அதிகாரங்களை பிராந்தி யங்களுக்கு வழங்கும் நடைமுறையினைப் பின்பற்றுவதும் நாட்டில் பிராந்திய ரீதியான சுயாட்சி உருவாகுவதற்கு வழிவிடும்.

நீதித்துறைச் சுதந்திரம்:

நீதித்துறையின் சுயாதீனத்தினைப் பாதிக்கத்தக்க வகையில் நடைமுறை யாப்பில் உள்ள ஏற்பாடுகளைத் தவிர்த்தல். இது விடயத்தில் அரசாங்கத்தின் ஏனைய துறைகளின் தலையீடு நீதித் துறையின் மீது செலுத்தப்படுவதனை தவிர்ப்பதற்கான புதிய ஏற்பாடுகளை உட்புகுத்துதல் வேண்டும். விசேடமாக  நீதிபதிகளின் நியமனம், பதவி நீக்கம் போன்ற விடயங்களில் ஜனாதிபதியின் செல்வாக்கினைக் குறைக்கக் கூடிய விடயத்தில் சுயாதீன நீதி ஆணைக்குழுக்களின் செயற்பாட்டினை ஊக்குவித்தல் வேண்டும்.

தேர்தல் முறை:

தேர்தல் முறையினைப் பொறுத்தவரையில் தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை சிறுபான்மையினருக்கு மிகவும் சாதகமான முறையாகக் காணப்படுகின்றது. எனினும் விருப்பு வாக்கு நடைமுறை, தேர்தல் தொகுதி விரிவடைந்துள்ளமை போன்ற சில குறைபாட்டு அம்சங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

குறித்த தேர்தல் முறையில் மாற்றங்கள் ஏற்படுகின்ற போது சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தில் பாதிப்பு ஏற்படாதவகையில் தேர் தல் முறை அமைந்திருத்தல் வேண்டும். இதற்காக சிறுபான்மை மற்றும் சிறு குழுக்களுக்கான கோட்டா முறையில் கவனம் செலுத்துதல் சிறப்பானதாக அமையும்.

ஏனையவை:

கடந்தகால அனுபவங்களிலிருந் சிறு பான்மை சமூகங்களின் மனக்குமுறல் களை கவனத்திற் கொண்டு செயற்படத்தக்க Minority Grievances Commission ஒன்றினை நிறுவுதல். அதேபோன்று நாட்டின் நிருவாக மற்றும் பொலிஸ் பிரிவுகளை அமைக்கும் போதும் அதற்கான அதிகாரிகளை நியமனம் செய்யும் போதும் (DS, DIG) குறித்த பிரதேசத்தின் சனத்தொகை விகிதாசாரத்தினைக் கருத்திற்கொண்டு பெரும்பான்மை சமூகத்தினைச் சார்ந்தவர்களை குறித்த பதவிக ளுக்கு நியமிக்க ஏற்பாடுகளைச் செய்தல்.

மேற்குறிப்பிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு திறந்ததும் காத்திரமானது மான கலந்துரையாடல்களின் அடிப்படையில் புதிய அரசியல் திட்டத்தினை வகுத்தளிப்பது இனங்களுக்கிடையில் நல்லுறவினைக் கட்டியெழுப்புவதற்கும் நாட்டினை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லுவதற்கும் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

  • புதிய அரசியல் யாப்பு உருவாக்கத் தில் முஸ்லிம் சமூகத்தின் வகிபாகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பொதுவாக முஸ்லிம் மக்கள் தேர்தல் அரசியலில் அதிக அக்கறை காட்டுகின்றார்கள். ஆனால், உரிமைசார் விடயங்களாக இருந்தாலுமோ, நாட்டின் ஏனைய விடயங்களாக இருந்தாலுமோ அதிக அக்கறை காட்டுவதில்லை. இவ்வாறு ஒரு சமூகம் இருக்குமாக இருந்தால் அந்த சமூகம் எவ்விதமான உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பெற்றுக் கொள்ளாது. அது அந்த சமூகத்தை மேலும் பின்தள்ளும் என்றே நான் நோக்குகிறேன்.

மேலும், இலங்கை முஸ்லிம் சமூகம் தேர்தல் அரசியலிலும் நியாயமான, நேர் மையான, சமூக அக்கறை கொண்டவர்களை தங்கள் பிரதிநிதிகளாக அனுப்புவதிலும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. எமது பாராளுமன் றப் பிரதிநிதிகளை நோக்குகின்றபோது தற்போது நடைபெற்ற 20 ஆம் திருத்தச் சட்ட வாக்களிப்பின்போது அழகாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

எது எப்படியோ, தற்போது அரசாங் கத்தினால் கோரப்பட்டுள்ள புதிய அரசியல் யாப்பு மாற்றத்திற்கான முன்யோசனைகளை முஸ்லிம் சமூக அரசியல் பிரதி நிதிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் தங்களது அபிப்பிராயங்களை எழுத்து மூலமாக சமர்ப்பிப்பது காலத்தின் கட்டாயத் தேவை என்றுதான் நான் நோக்குகிறேன். இதுவே இன்றைய முஸ்லிம்களின் முதன்மையான விடயம் என்றுகூட கூறலாம்.

அவ்வாறு சமர்ப்பிக்காமல் இருப்பது நாளைய எமது சமூகத்திற்கு நாம் செய்யும் மிகப் பெரிய வரலாற்றுத் துரோகமாகவே நோக்க வேண்டியுள்ளது.