கொரோனாவால் மரணித்த அலிசப்ரியின் உறவினர் அடக்கம் செய்யப்பட்டாரா ?

0
30

நீதிஅமைச்சர் அலிசப்ரியின் தூரத்து உறவான ரத்மலானை பொருபன வலகம்பா வீதியில் வசித்த அஹமட் ஜுனைதீன் பாதிமா நளீபாவின் ஜனாஸா கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையிலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அனித்தா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி தனது இல்லத்தில் காலமான 83 வயது நளீபாவின் ஜனாஸாவை பிசிஆர் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர் பணித்ததற்கிணங்க அவரது ஜனாஸா களுபோவிலை போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அங்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் பின்னர் அவருக்கு கொரோனா தொற்றியிருப்பதாக உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவருடன் தொடர்புடைய மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் பொதுச் சுகாதார பரிசோதகரின் வழிகாட்டலின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் உயர்மட்ட அழுத்தங்களின் காரணமாக மீண்டும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு கொவிட் 19 தொற்று இல்லை என அறிக்கை வழங்கப்பட்டுள்ளது என அந்தப் பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது. அதனைத் தொடர்ந்து 17 ஆம் திகதி இரத்மலானைப் பிரதேசத்திலுள்ள மையவாடியொன்றில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்  பிசிஆர் அறிக்கையில் கொவிட் 19 பொசிடிவ் எனத் தனக்குக் கூறப்பட்டதாகவும் அதன் பின்னர நடந்தவை பற்றித் தனக்குத் தெரியாது எனவும் தெரிவித்தாகவும் அந்தச் செய்தி கூறுகின்றது.

பக்ட்க்ரெஸ்கென்டோ தகவல் உறுதிப்படுத்தும் நிலையம் மேற்கொண்ட உசாவுதலில் மரணித்தவர் தனது உறவினர் என்பது உண்மை என அமைச்சர் அலிசப்ரி தெரிவித்ததாகவும் ஆனால் பரிசோதனைப் பெறுபேற்றை மாற்றுகின்ற அழுத்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்தார்.

இதுவரை வீடுகளில் மரணித்த பலரும் பிசிஆர் அறிக்கைகள் குடும்பத்தாருக்கு வழங்கப்படாமலேயே எரிக்கப்பட்டுள்ளனர்.