நாமல்கமவிலும் மரங்களை மீள நடுமாறு உத்தரவிடப்படுமா ? கேட்கிறார் ரிஷாத்

0
24

மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டைப் பிரதேசங்களைச் சேர்ந்த 5000 சிங்களவர்களை கலபோகஸ்வெவ நாமல்கம பிரதேசத்தில் மீளக்குடியமர்த்துவதற்கு அங்கிருந்த நூறு வருடங்கள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டன. ஆனால் அதற்கு எதிராக யாரும் முறைப்பாடு செய்வதில்லை. வில்பத்து கல்லாறு காடழிப்பு பற்றி மட்டுமே பேசுகிறார்கள். ஆனால் அங்கு காடழிப்பு நடைபெறவில்லை. எனவே வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வேன் என முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கேள்வி எழுப்பினார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் கல்லாறு தீர்ப்பை வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு நீதிபதிகளும் ஆணைக்குழுவில் இருந்துள்ளனர்.

ஸ்கைப் காணொளி மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இரண்டாவது நாளாகவும் சாட்சியம் வழங்கிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நீங்கள் மீள்குடியேற்றத்திற்கு பொறுப்பான அமைச்சராக இருந்தபோது போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் எத்தனை சிங்கள மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டார்கள் என ஆணைக்குழு அவரிடம் வினவியது.

இதற்கு பதிலளித்த அவர் ´வடமாகாணத்தில் 2 வீதம் மக்கள் சிங்களவர்களும் 5 வீதம் முஸ்லிம்களும் உள்ளனர். யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம்களை அவர்களது கிராமங்களிலிருந்து வெளியேற்றினர். 2009 ஆம் ஆண்டில் நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருக்கவில்லை. அப்போது பசில் ராஜபக்ஸவே மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தார் ஆனால் நான் அவரின் இந்த மீள்குடியேற்றத் திட்டத்தை ஆதரித்தேன் எனத் தெரிவித்தார்.