மத்ரஸாக்கள் தொடர்பில் தேடிப் பார்ப்பது எனது பொறுப்பு

48

தற்போதைய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் போதே மத்ரஸாக்களுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை உள்ளீர்ப்பது மற்றும் அவற்றுடைய செயற்பாடுகள் தொடர்பில் முறையான பொறிமுறையொன்றை வகுத்திருந்ததாகவும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அவை அனைத்தும் முழுமையாகச் செயலிழந்தாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜிஎல் பீரிஸ் தெரிவித்தார்.

வெள்ளியன்று (20) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன முன்வைத்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மத்ரஸாக்களில் கற்பிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து விசாவுக்காக விண்ணப்பிப்பவர்கள் தொடர்பில் கடுமையாகக் கண்காணிக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்த அவர், அவர்களின் பின்புலம், கடந்தகாலச் செயற்பாடுகளைத் தேடிப் பார்க்காமல் மத்ரஸாக்களுக்கு  அவர்களை இணைப்பது தவறானது எனவும் இவர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தேடிப் பார்ப்பது அவசியம் எனவும் அவர் தெரிவத்தார்.

ஆசிரியர்கள் மட்டுமன்றி பாடத்திட்டம், ஆட்சேர்ப்பு முறைகள் தொடர்பிலும் பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவித்த அவர் இவை தொடர்பில் தேடிப்பார்ப்பது கல்வி அமைச்சர் என்ற வகையில் தனது பொறுப்பு எனவும் தெரிவித்தார்.