ட்ரம்புக்குப் பிந்திய மத்திய கிழக்கு

37

முஷாஹித் அஹ்மத்

– இறுதிப் பகுதி

பல்வேறு நாடுகளுடைய வியாபார கேந்திர நிலையமாக, போக்குவரத்திற்கு வந்து போகும் ஒரு தரிப்பிடமாக வணிகத்தின் ஏற்றுமதி, இறக்குமதியினுடைய கேந்திர நிலையமாக இருப்பது போன்று வெளிநாட்டவர்களது ஆதிக்கத்தில் இருக்கின்ற நாடுகளின் பட்டியலிலே இன்று அமீரகம் முன்னணியில் இருக்கின்றது. அது, ஏற்கனவே அந்நாட்டில் அரபு மொழி அருகி வருகின்றது. வெளிநாட்டு கலாச்சாரங்களின் குப்பை கூடமாக மாற்றப்பட்டுள்ள இந்நாட்டிலே மேற்கத்தேய கலாச்சாரங்களின் ஊடுருவல் இங்கு அதிகமாக இருக்கிறது.

ஆடை முறை, சினிமா, இசை, இரவு நேர களியாட்ட விடுதிகள், மதுபான விடுதிகள் என்பன தாராளமாக இருக்கின்ற இந்நாட்டிலே இன்று ஒரு புதிய மாற்றத்தை நாங்கள் காண்கின்றோம். பிற மத்திய கிழக்கு நாடுகளிலும் இந்த மாற்றம் மெது மெதுவாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. மதுபான சட்டம் நீக்கப்படுகின்றது. சுற்றுலாத்துறை வருகையாளர்களை ஊக்குவிக்க வேண்டும். உல்லாச பயணிகளை ஊக்குவிக்க வேண்டும். நாட்டுக்கு அனைத்து மக்களும் வர வேண்டும். குறிப்பாக இஸ்ரேலியர்கள், யூதர்கள், சியோனிஸ்டுகள் வர வேண்டும். அதே போன்று வெளிநாட்டவர்கள் வர வேண்டும். அவர்களுக்கு மது பானம் அருந்துவதற்கு தடை வந்தால் அவர்கள் இங்கு வர மாட்டார்கள். எனவே மதுபான தடைச்சட்டம் நீக்கப்படுகின்றது.

தனியார் சட்டத்தில் இருக்கின்ற விவாகம், விவாகரத்து, சொத்துரிமை தொடர்பான சட்டங்களிலும் பெரிய மாற்றங்கள், சீர்த்திருத்தங்கள் என்ற பெயரில் பெரும் சீரழிவுகள் அந்த நாட்டிலே ஏற்படுத்தப்படப்போகின்றன. உதாரணமாக, ஒரு ஆணும் பெண்ணும் சட்டபூர்வமாக இணைந்து குடும்ப வாழ்க்கையில் இணைய வேண்டும் என்ற சட்டம் தளர்த்தப்பட்டு விரும்புகின்றவர் திருமணத்தின் மூலம் இணையாமலேயே சேர்ந்து வாழ முடியும். மேற்கு நாடுகளில் இருப்பது போன்ற இந்த கலாச்சார சீரழிவை சட்டபூர்வமாக ஆக்குகின்ற அளவுக்கு இந்த ஆட்சியாளர்கள் வந்திருப்பது உண்மையிலே மிகுந்த வெட்கக்கேடான விடயமாகும்.

நாங்கள் எந்தவொரு தனிப்பட்ட நாட்டினையும் விமர்சனத்திற்கு உள்ளாக்குகின்றோம் என்பதற்கு அப்பால், பாரம்பரியமாக இஸ்லாமிய அடையாளம், தனித்துவம் கூடிய நாடுகள் இஸ்லாமிய விழுமியங்களை, பாரம்பரியங்களை, சட்டங்களை, தனித்துவங்களை, அடையாளங்களை ஒதுக்குகின்ற ஒரு உத்தியோகபூர்வ நிலைக்கு வந்திருக்கின்றது என்பது உண்மையில் மத்திய கிழக்கு அரசியலின் சமீபத்திய மிக மோசமான அருவருக்கத்தக்க ஒரு மாற்றமாகும். இது சகிக்க முடியாத மாற்றம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு புறம் வளைகுடா ஆட்சியாளர்கள் தங்களுடைய நாட்டின் பொருளாதாரத்தை சரியாக முகாமை செய்யாததன் காரணமாக கடந்த காலங்களிலே அதில் விட்ட கோட்டை, அதிலே விட்ட தவறுகள் அவர்ளுடைய பொருளதாரத்தை பெருமளவு பாதித்திருப்பதன் காரணமாக உல்லாசத்துறையை, சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் ஆளாகி இருக்கிறார்கள். அந்த நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருப்பவர்கள் அதை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்றால், எதிர்பார்க்கின்ற உல்லாசப்பயணிகளை உள்ளீர்க்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி நாட்டிலுள்ள இஸ்லாமிய சட்டங்கள் அனைத்தையும் தளர்த்த வேண்டும் என்ற முடிவை அவர்கள் எடுத்திருக்கிறார்கள்.

அதனுடைய ஒரு வெளிப்பாடே மதுபான தடை சட்டம் உத்தியோகபூர்வமாக நீக்கப்படுகின்றது. பாலியல் உறவுகள் சட்டபூர்வமாக்கப்படுகின்றன. இப்படியான மோசமான மாற்றங்களை நாங்கள் இன்று மத்திய கிழக்கிலே பார்க்கின்றோம். ஆகவே இந்த மாற்றங்கள் நிச்சயமாக இந்த அமீரகத்தினுடைய எல்லையினை தாண்டி பஹ்ரைனிலும், ஏற்கனவே சவூதி அரேபியாவிலும் வந்து விட்டது.

ஏற்கனவே, காதலர் தினம் ஹராம் என்று சொன்ன ஒரு நாட்டிலே அதை சட்டபூர்வமாக கடந்த ஆண்டிலே கொண்டாடியிருக்கிறார்கள். அதற்கு நாட்டிலிருக்கின்ற சில மார்க்க அறிஞர்கள் கூட அனுமதி வழங்கியிருந்ததை நாங்கள் பார்க்கின்றோம். உண்மையில் மத்திய கிழக்கின் இன்றை அரசியல் போக்குகளில் கலாச்சார பரிவர்த்தனைகளை, மாற்றங்களை நாங்கள் நுணுக்கமாக பார்க்கின்ற போது OTTOMAN EMPIRE என்று சொல்லப்படுகின்ற உஸ்மானிய பேரரசினுடைய கடைசிக்காலத்தில் வந்திருந்த ஆட்சியாளர்கள் என்ன செய்து கடைசியில் மொத்தமாக வீழ்ச்சியடைந்தார்களோ, அது போன்ற ஒரு சூழ்நிலைதான் உண்மையில் மத்திய கிழக்கில் இன்று ஏற்பட்டு வருகின்றது.

ஆகவே இவற்றை மிக நுணுக்கமாக பரிசீலிக்கின்ற பொழுது, இஸ்லாத்திற்கு சாதகமற்ற அல்லது பாதகமான நம்பிக்கை இழக்கக்கூடிய ஒரு மாற்றமே இன்று நிகழ்கின்றதாக நாம் பொருள் கொள்ள வேண்டியதில்லை. காரணம், ஆட்சியாளர்களில் பல்வேறு வகைப்பட்டவர்கள் இருக்கின்றார்கள். நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களும் இஸ்லாமிய உலகில் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதே போன்று இப்படியான எதிரிகளினுடைய முகாம்களில் சதிவலைகளில் சிக்கி தமது அடையாளங்களை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டு பின்னர் கைசேதப்படக்கூடிய ஆட்சியாளர்களும் இன்று அரபு, இஸ்லாமிய உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எது எப்படியோ, இன்று மத்திய கிழக்கினுடைய அரசியலிலே இஸ்ரேல் போடுகின்ற ஆட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வரக்கூடிய சாதகமான, திருப்திகரமான, ஆறுதல் அளிக்கக்கூடிய நிலையையும் தெட்டத்தெளிவாக நாங்கள் பார்க்கின்றோம். காரணம், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலிலே கடந்தவொரு 40 ஆண்டு கால இடைவெளியிலே ஒரே ஒரு முறை ஜனாதிபதியாக இருந்து இரண்டாவது முறை தோற்கடிக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் என்பதை நாங்கள் கவனமாக புரிந்து கொள்ள வேண்டும். அவரை எதிர்த்து நின்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் Electoral College வாக்குகளை அதிகமாகப் பெற்று, 290 வாக்குகளைப் பெற்று (270 பெற்றாலே வெற்றி பெறுவார்), 1980களில் டொனால் ரேகன் பெற்ற வாக்குகளை  விட சற்று அதிகமாகப் பெற்று இன்று அமெரிக்காவினுடைய ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்த வெற்றியை தாங்கிக் கொள்ள முடியாத கர்வமும், அகம்பாவமும் கொண்ட, சித்த சுயாதீனத்தில் சற்று குறைபாடுள்ள அவருடைய நெருங்கிய தோழர் ஒருவரே அவரைப்பற்றி எழுதிய புத்தகத்திலே, “ட்ரம்ப் அமெரிக்காவை நிருவாகம் செய்வதற்கான எந்த உள ஆரோக்கியத்தோடும் இல்லை” என்று எழுதுகின்ற அளவுக்கு உள ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருந்த ட்ரம்ப் இன்று தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலையிலே சட்ட ரீதியாக இந்த தேர்தல் முடிவுகளை சவாலுக்கு உட்படுத்தப்போகின்றேன் என்று சவால் விடுத்திருக்கிறார்.

டிசம்பர் 14 இல் அமெரிக்காவினுடைய ஜனாதிபதி யார் என்பதனை மிகத் தெட்டத் தெளிவாக நாம் அறியலாம். தேர்தலுக்கு முன்பாகவே அமெரிக்காவில் ஊடகங்கள் நடாத்திய கருத்துக்கணிப்பிலே ஜோ பைடன் முன்னணியில் இருக்கின்றார் என்பது உறுதி செய்யப்பட்டது. ஒப்பீட்டு ரீதியிலே ஜோ பைடனுடைய கொள்கைகள் ட்ரம்பினுடைய கொள்கைகளில் இருந்து நேர்ப்பாங்கான பல பக்கங்கள் இருக்கின்றன. அந்தப் பக்கங்கள் மத்திய கிழக்கு அரசியலில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் ஓரளவு நம்பிக்கை கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

காரணம், ட்ரம்பினுடைய கொள்கை பலஸ்தீன மக்களுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இதற்குப் பின் இல்லை. இடையீட்டாளராக அமெரிக்காவும் இல்லை. ஜெரூஸலம் இனி பலஸ்தீனர்களுக்கு இல்லை. பலஸ்தீனர்களுக்கு என்று இனி தனி நாடு ஒன்று இல்லை. அவர் ஜெரூஸலத்தினை இஸ்ரேலிடம் கொடுத்து விட்டு, இஸ்ரேல் தான் தங்களுடைய தாயகம், நாடு என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை என்ற ஒன்றும் இல்லை என்று ட்ரம்ப் அறிவித்தார்.

ஜோ பைடன் இதனுடன் மாற்றமான கொள்கை கொண்டிருக்கிறார். பலஸ்தீன மக்களோடு நாங்கள் பேச்சுவார்த்தை நடாத்தினோம். ஜெரூசலம் பற்றி நாங்கள் மீள் பரிசீலனை செய்வோம். மத்திய கிழக்கில் பலஸ்தீன் – இஸ்ரேல் நெருக்கடி குறித்து புதிய அணுகுமுறை ஒன்றை பின்பற்றுவோம் என்று ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார். இது ஓரளவு எங்களுக்கு ஆறுதல் அளிக்கின்றது. ஜோர்ஜ் வொஷிங்டன் முதல் டொனால்ட் ட்ரம்ப் வரைக்கும் வந்த அமெரிக்க ஜனாதிபதிகளிலே பெரும்பான்மையானவர்கள் ஒரே வெளிநாட்டு கொள்கைகளைப் பின்பற்றியவர்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் மீது நாங்கள் நம்பிக்கை கொள்ள முடியாது. ஆனால் நம்பிக்கை கொள்ளத்தக்க சிலர் அந்த ஜனாதிபதிகளிலே இடம்பெற்றிருக்கிறார்.

ஆகவே நாங்கள் ஜோ பைடனின் வருகை மத்திய கிழக்கு அரசியலிலே ஓரளவு சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று ஓரளவுக்கு நாங்கள் நம்பிக்கை கொள்ளலாம். காரணம் ட்ரம்பினுடைய கொள்கைகளில் இருந்து ஜோ பைடனுடைய கொள்கை பல விடயங் களில் வேறுபடுகிறது. உதாரணமாக சீனாவைப் பகைத் துக் கொள்கின்ற, சீனாவுடன் முரண்படுகின்ற, மோதிக் கொள்கின்ற கொள்கையை ட்ரம்ப் பின்பற்றினார்.

ஜோ பைடனைப் பொறுத்த வரையிலே சீனாவுடன் நாம் ஒத்துழைத்து செல்கின்ற பல பகுதிகள் இருக்கின்றன என்று அவர் கருதுகின்றார். ஆகவே இப்படி ஆக்ரோசமான, மூர்க்கத்தனமான பல பக்கங்களையும் பார்க்காத, ஒற்றைப் பக்கம் சார்ந்த, ஒற்றை நலன் சார்ந்த, ஒரு பக்க நலன் சார்ந்த ட்ரம்பினுடைய அணுகுமுறையிலிருந்து ஜோ பைடனுடைய அணுகுமுறை வேறுபடுகிறது என்பதனால், மத்திய கிழக்கு தொடர்பான பைடனின் அணுகுமுறை பலஸ்தீனர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் இரு நாட்டு தீர்வு (Two Country Solution, Two States Solution) என்ற தீர்வுத்திட்டத்தை பைடன் ஏற்றுக்கொள்ளக்கூடும். அதன் மூலம் பேச்சுவார்த்தைகளை நடாத்தி பலஸ்தீன பிரச்சினைக்கு நேர்மையான தீர்வை அடைந்து கொள்வதற்கான ஒரு பிறக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

ஆனால் ஜோ பைடன் வெளிப்படையாகவே இவற்றை சொல்கின்றார். உள்முகமாக அவர் வேறொரு கொள்கையுடன் இருக்கின்றாரா என்பது எமக்கு புரியவில்லை. ஜோ பைடனின் பூர்வீகம் இந்தியாவை சேர்ந்தது என்ற ஒரு கருத்தும் இருக்கின்றது. அந்தப்பின்னணியிலே ஒரு மத்திய கிழக்கினுடைய இந்த நெருக்கடியிலே ட்ரம்பை விட திருப்திப்படக்கூடிய ஒரு நிலைப்பாட்டை பைடன் எடுக்கக்கூடும் என்று நாங்கள் நம்பலாம். ஆனாலும் காலம் தான் இதனை எங்களுக்கு சொல்ல வேண்டும். பொறுத்திருந்துதான் இதனை பார்க்க வேண்டும்.

ஆனால் இன்று மத்திய கிழக்கினுடைய அரசியல் போக்கினை நாங்கள் அவதானிக்கின்ற போது அரபு நாட்டு தலைவர்கள் உலகத்திலே தங்கள் ஆட்சி செய்கின்ற மன்னராட்சி கொண்டு செல்கின்ற இவர்கள் பிற நாடுகளிலும் முஸ்லிம் நாடுகளிலும் ஜனநாயக மாற்றங்கள் ஏற்படுவதற்கு எதிராக இருக்கிறார்கள் என்பது மிகவும் அவதானமாக பார்க்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

சூழ இருக்கின்ற ஏனைய மத்திய கிழக்கு நாடுகளிலோ, சமீபமாக இருக்கின்ற, ஆசிய – ஆபிரிக்க எல்லைப்புறத்தில் இருக்கின்ற நாடுகளிலோ ஜனநாயக முறைமை தோன்றுவது என்பதனை வளைகுடா மன்னர்கள் ஒரு போதும் சகித்துக்கொள்வதில்லை. மன்னராட்சியே உலகத்தில் இருக்க வேண்டும் என்று 21 ஆம் நூற்றாண்டிலே முனைப்புடன் செயற்படுகின்றவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அதன் விளைவாகவே இன்று லிபியாவிலே நடைபெறுகின்ற உள்நாட்டுப் போர், கலீபா ஹப்தருடைய படைக்கு நிதி, இராணுவ ஆதரவினை வழங்குகின்ற வளைகுடா நாடுகள் அங்கு பெரும் மோதலை தேசிய அரச நல்லிணக்க படைக்கும் ஹப்தருடைய படைக்குமான மோதலை உக்கிரப்படுத்துவதிலே வளைகுடா நாடுகள் முன்னணியில் இருக்கின்றன.

இதற்குப் பின்னணியிலும், ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலினுடைய ஆதரவும் அழுத்தமும், கொள்கைகளும், சதித்திட்டங்களும் நிச்சயமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே அந்த லிபியாவில் இன்று நடக்கின்ற சிவில் யுத்தத்தை மூட்டுவதில், முனைப்பாக்குவதில், உக்கிரப்படுத்துவதில், ஊக்கப்படுத்துவதில் இந்த அரபு நாட்டு மன்னர்கள் வழங்குகின்ற நிதி ஆதரவு முக்கிய பங்கினை வகிக்கின்றது.

இவர்கள் எந்தளவு யோசிக்கின்றார்கள் என்று நாங்கள் பார்த்தால், தமது நாடுகளில் மன்னராட்சி இருப்பது போன்று அவர்களது நாடுகளிலும் ஜனநாயகம் வரக்கூடாது. மன்னராட்சி அல்லது இராணுவ சர்வாதிகார ஆட்சி குறைந்தபட்சம் இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆகவே 20 ஆம் நூற்றாண்டிலே 21 ஆம் நூற்றாண்டின் நுழைவாயில், 2020 என்பது மத்திய கிழக்கு அரசியலிலே மிகப்பெரிய மாறுதல்கள், மாற்றங்கள், மனோநிலை மாற்றங்கள், கொள்கை நிலைப்பாட்டு மாற்றங்கள் ஏற்பட்ட ஒரு ஆண்டாக நாம் இந்த ஆண்டினை பார்க்கின்றோம்.

இங்கு அரபு நாடுகளினுடைய நிலைப்பாடுகள் அனைத்தும் மேற்கத்தேய, ஏகாதிபத்திய, காலனித்துவ சக்திகளுக்கு ஆதரவானதாக நெருக்கமானதாக இருக்கின்றது. ஆனாலும் அநியாயத்தின் உச்சத்திற்கு செல்கின்ற இந்த அரபு நாட்டு தலைவர்களினுடைய நிர்வாகமும் ஆட்சி முறையும் நிச்சயமாக ஒரு கட்டத்திலே வீழ்ச்சியடையும். அரபு வசந்தம் தோல்வியடைந்து விட்டது. எனவே மக்கள் இதற்குப் பிறகு வீதிகளில் இறங்க மாட்டார்கள் என்ற நப்பாசையோடுதான் அரபு நாட்டு தலைவர்கள் செயற்படுகிறார்கள் என்று சமீபத்திலே அல் ஜஸீராவினுடைய ஒரு மூத்த ஊடகவியலாளர் சொன்னார்.

அதுதான் இன்று உண்மையில் நடந்து கொண்டிருக்கிறது. மக்களுடைய எதிர்ப்பு போராட்டம், அவர்களுடைய புரிதல், அவர்கள் அவர்களுடைய விடுதலை உணர்வை எந்தவொரு சக்தியினாலும் வரலாற்றிலே மழுங்கடிக்க முடியவில்ல என்பதுதான் கடந்த கால வரலாற்றிலிருந்து பெறுகின்ற மிகப்பெரிய பாடமாக இருக்கின்றது. இந்தப்பின்னணியிலும் இவற்றுக்குப் பின்னால் அல்லாஹ்வுடைய நோக்கம், அவனுடைய ஹிக்மத் – ஞானம் எப்படி செயற்படப்போகின்றது என்பதையும் நாங்கள் நிச்சயமாக அறிய மாட்டோம்.

ஆனால் ஒன்றை நாம் தெளிவாகப் புரிகின்றோம். அநியாயம், அக்கிரமம், ஆக்கிரமிப்பு, அட்டூழியம், அழிவு, அடாவடித்தனம் மத்திய கிழக்கிலே இன்று உச்ச அளவிலே எரிந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கின்றோம். உச்ச அளவில் எரிகின்ற ஒன்று நீண்ட காலத்திற்குப் பின்னர் அழிந்து போய்விடும் என்பது இன்னொரு வரலாற்று உண்மை. ஆக, இந்த அநியாயங்களுக்கு துணை போகின்ற அரபு நாட்டு ஆட்சியாளர்களுடைய அக்கிரமங்கள் அனைத்தும் உச்சகட்டத்திலே எரிந்து கொண்டிருக்கின்றதா? அது எப்போது அணையும்? என்பதை இன்சா அல்லாஹ் நாம் எதிர்பார்த்து, காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். அல்லாஹ்வுடைய அருளும் அவனுடைய ஆதரவும் நிச்சயமாக பலஸ்தீன மக்களுக்கு இருக்கும். அரபு நாட்டு சிவில் சமூகத்திற்கு இருக்கும்.

அநீதி என்பது நீடிப்பதில்லை என்ற அடிப்படையான விதியை குர்ஆன் எங்களுக்கு சொல்கின்றது. அந்தப் பின்னணியிலே நாம் எதிர்காலத்திலே நல்ல பல ஆரோக்கியமான மாற்றங்களும் மத்திய கிழக்கில் நிகழும். அதற்கு சிறியவொரு காலம் எடுத்தாலும் கூட இந்த ஆழ்ந்த நம்பிக்கையை எங்களது உள்ளங்களில் நாங்கள் பதிக்க வேண்டும். இந்த மாற்றங்கள், அநியாயங்களைப் பார்த்து நம்பிக்கையிழக்கின்றவர்களாக நாங்கள் இருக்கக்கூடாது. முஸ்லிம் சமூகத்திற்காக, உம்மத்திற்காக, பலஸ்தீன மக்களுக்காக, சிரியா, யெமன், லிபியா போன்ற நாடுகளில் வாழ்கின்ற மக்களுக்காகவும் எமக்கு சமீபத்திலே காஷ்மீரிலும், மியன்மாரிலும் வாழும் மக்களுக்காகவும் நாங்கள் முஸ்லிம்கள் என்ற வகையிலே, ஒரு கொள்கைவாத சமூகம் என்ற வகையிலே தொடர்ச்சியாக பிரார்த்தனை செய்கின்றவர்களாகவும் நாங்கள் இருக்க வேண்டும்.

அதுதான் எங்களுடைய மிகப்பெரிய பலம். நாங்கள் கொண்டிருக்கின்ற அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையும், எதிர்பார்ப்பும், அது ஒட்டிய பிரார்த்தனையும் தான் எங்களுடைய ஆயுதங்கள் என்ற உண்மையை நாங்கள் புரிந்து கொண்டு, இந்த விடயத்தினை தெட்டத்தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு குறைந்தபட்சம் முயல வேண்டும். அதுதான் நாம் செய்ய வேண்டிய உடனடிப்பணியாக உள்ளது. எனவே இந்த பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கு அல்லாஹு தஆலாவினுடைய கருணையும் அவனுடைய அருளும் என்றென்றும் கிட்டுவதாக. ஆட்சியாளர்களுடைய மனங்களில் நல்ல பல மாற்றங்களை இறைவன் கொண்டு வருவானாக! வரலாறு சரியாக தீர்ப்பளிக்கும் அந்நாளை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.

நன்றி