நீதி நியாயத்துக்கு மதிப்பளித்தலும் பலஸ்தீனுக்கான ஒருமைப்பாடும்

74

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பலஸ்தீன ஒருமைப்பாட்டுத் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. பலஸ்தீன மக்களுக்கு நீதி வேண்டும் என்ற தமது கருத்தொருமைப்பாட்டை உலகமெங்கும் நீதியையும் சமாதானத்தையும் விரும்பும் எவரும் இன்றைய தினம் வெளிப்படுத்தி வருகின்றனர். பலஸ்தீன மக்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் இருந்து இலங்கையிலும் இது தொடர்பான நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இலங்கைக்கும் பலஸ்தீனுக்குமிடையிலான அரை நூற்றாண்டுக்கும் மேலான உறவு இன்று வரை நீடித்திருக்கின்றது. இலங்கையில் பலஸ்தீன ஒருமைப்பாட்டு இயக்கம் உருவாக்கப்பட்ட அடுத்த வருடமே 1975 ஆம் ஆண்டு இடதுசாரி ஸ்ரீமாவோ அம்மையாரின் காலத்தில் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அலுவலகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டது. 1988 நவம்பர் 15 இல் பலஸ்தீன் தன்னை சுதந்திர நாடாக அறிவித்தபோது அதனை முதலில் அங்கீகரித்த நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்தது. ஜனாதிபதி ஜேஆர் ஜயவர்தன காலத்தில் இஸ்ரேல் நலன் காக்கும் பிரிவு இலங்கையில் நிறுவப்படும் வரை இலங்கை பலஸ்தீனை ஆக்கிரமித்த இஸ்ரேலுடனான உறவுகளைத் தவிர்த்து வந்திருந்தது. ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியானதன் பின்னர் அவர் பலஸ்தீனுக்கான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக இலங்கையிலிருந்த இஸ்ரேலிய அலுவலகத்தை மூடச் செய்தார். ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க காலத்தில் இலங்கையின் உள்நாட்டு யுத்த்தில் மத்தியஸ்தராகச் செயற்படுவதற்கும் பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யஸீர் அரபாத் தனது அக்கறையை வெளியிட்டிருந்தார். ஜனாதிபதியாக இருந்த வேளையில் இலங்கை பலஸ்தீன ஒருமைப்பாட்டு இயக்கத்தின் தலைவராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ 2014 ஆம் ஆண்டில் பலஸ்தீனுக்காக 13 கோடி ரூபாவை வழங்கி உதவி செய்தார். ஆனால் அதேவேளை அவர் ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கு விஜயம் செய்த முதல் இலங்கைத் தலைவராகவும் வரலாற்றில் இடம் பிடித்தார்.

அதனைத் தொடர்ந்து வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஜேஆர் ஜயவர்தன ஆட்சியைப் போலவே பலஸ்தீன விவகாரத்தில் ஆதரவளிக்காத போக்கைக் கையாண்டது. ஜெரூஸலம் தலைநகரமாக்கப்பட்ட போதும், இணைப்புத் திட்டத்தை இஸ்ரேல் முன்னெடுத்த போதும் ஐக்கி நாடுகள் பேரவையில் அதற்கு எதிராக வாக்களிக்காமல் நழுவும் போக்கை ரணில் அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. ஆனால் அண்மையி்ல் ஆட்சிக்கு வந்த கோதாபய ராஜபக்ஷ அரசாங்கம் இஸ்ரேலின் இணைப்புத் திட்டத்துக்கு எதிராக் குரல் எழுப்பியிருந்தது.

பலஸ்தீன விவகாரம் என்பது ஒரு நாட்டுடைய விவகாரமாகவன்றி உலகில் நீதி நிலைநாட்டப்படுவதற்கான விவகாரமாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பலஸ்தீன விவகாரத்துக்கு நீதி நியாயத்துக்கு மதிப்பளிக்கின்ற நாடுகள் ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கின்றன. பலஸ்தீனர்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்களுக்கு மத்தியிலும் அந்த மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டாதவர்கள் அநீதிக்ம் அநியாயத்துக்கும் துணை போகின்றவரை்களாகவே கருதப்படுகின்றனர்.

அந்த வகையில் இலங்கை தான் அநியாயத்துக்குத் துணை போவதா, நீதி நியாயங்களின் பக்கம் சார்வதா என்ற நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டியிருக்கிறது. இந்த விடயத்தில் பாசாங்குத்தனம் இல்லாமல் துணிச்சலுடன் நீதி நியாயத்துக்காக ஆதரவளிப்பது அகிம்சை வழி பௌத்த தர்மத்தைப் பின்பற்றும் இலங்கைத் தேசத்துக்கு முக்கியமானது. நீதி நியாயங்களை விரும்புவர்கயே அதற்காக ஆதரவளிக்கவும் முன்வருவார்கள். அந்த வகையில் தாம் சர்வதேச சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் மதிப்பளிப்பவர்கள் என்பதை வெளிக்காட்டுவதற்கு பலஸ்தீன விவகாரத்தில் எடுக்கப்படும் ஒருதலைப்பட்சமான நிலைப்பாடு எடுத்துக் காட்டாக அமையும்.

புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்துத் தெரிவிக்கையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இலங்கை மனித உரிமைகளுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.  புதிய அரசாங்கத்தின் ஒரு வருட காலத்தில் பல்வேறு விவகாரங்களில் பல சர்வதேச அமைப்புக்களும் இலங்கையில் மனித உரிமைகளுக்கான மதிப்பு தொடர்பில் சுட்டிக் காட்டியுள்ளன. காரணமின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில் ஏறத்தாழ அனைத்து சர்வதேச அமைப்புக்களும் குரல் கொடுத்துள்ளன. இலங்கையில் சுகாதார விதிமுறைகளை மீறி கொரோனாவால் மரணித்தவர்களின் உடல்கள் பலவந்தமாக எரிக்கப்படுவது தொடர்பிலும் பல சர்வதேச அமைப்புக்கள் சுட்டிக் காட்டியுள்ளன. அந்த வகையில் நீதிக்காகப் போராடும் ஒரு நாட்டுக்கு ஆதரவு அளிப்பதற்கு இலங்கையும் தன்னளவில் இதயசுத்தியுடன் செயற்படுவது அவசியமாகின்றது.