போர்த்துக்கேயர் காலத்தில் இலங்கை முஸ்லிம்கள்

169
  • றவூப் ஸெய்ன்

முற்குறிப்பு

ஐரோப்பியர் கால இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, அதாவது 16 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய முஸ்லிம்களின் வரலாறு மிக விரிவாக ஆராயப்படவில்லை. கலாநிதி காமில் ஆஸாத் தனது கலாநிதிப் பட்டத்துக்காக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் எனும் தலைப்பைத் தெரிவுசெய்தார். அவரது ஆய்வு Muslims under the British Rule எனும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.

ஒல்லாந்தர் கால முஸ்லிம்களின் வரலாறும் பல்கலைக்கழக பட்டமேற் கல்வி ஆய்வொன்றுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஓர் ஆய்வுக் கட்டுரையின் அடிக்குறிப்பிலிருந்தும் உசாத்துணை நூற் பட்டியலிலிருந்தும் இதனை அறிந்துகொள்ள முடிந்தது. ஆனால், அந்த ஆய்வு நூலாக வெளிவந்துள்ளதாக என்பது தெரியவில்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம் வரலாற்று ஆய்வு வட்டம் எனும் ஒரு நிறுவனம் போர்த்துக்கேயர் காலத்தில் முஸ்லிம்கள் எனும் தொனிப்பொருளில் ஆய்வொன்றினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அது தொடர்பான தகவல்கள் இருப்பின் அவற்றை தம் நிறுவனத்துடன் பகிர்ந்துகொள்ளுமாறும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்திருந்தது. அதற்குப் பொறுப்பாக மறைந்த முன்னாள் முஸ்லிம் ஆசிரியர் சங்கத் தலைவர் மர்ஹூர் ஏ.எல்.எம். ராஸிக் அவர்கள் செயற்பட்டார். எவ்வாறாயினும், இத்தலைப்பு தொடர்பாக தகவல்கள் அவர்களுக்குப் போதியளவு கிடைக்கவில்லை என்றும் அதனால் இந்த ஆய்வு முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

பல்கலைக்கழக வரலாற்றுத் துறை விசேட கற்கைநெறி மாணவர்கள் தமது கற்கைநெறியைப் பூர்த்தி செய்வதற்கு இவ்வாறான ஒரு தலைப்பை தெரிவுசெய்திருக்கக் கூடும். எனினும், அது பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. பொதுவாக, இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று எழுதியலில் (Historiography) போர்த்துக்கேயர் காலத்தில் முஸ்லிம்கள் எனும் தலைப்பு தொடர்ந்தும் ஓர் இடைவெளியாகவே நீடிக்கின்றது. அந்த வகையில் இவ்வரலாற்று இடைவெளியை நிரப்பும் நோக்கில் இக்கட்டுரை இங்கு பிரசுரமாகின்றது.

அறிமுகம்

15 ஆம் நூற்றாண்டின் பின்அரைப் பகுதி வரை ஐரோப்பியர்களுக்கு உலகம் பற்றிய பரந்துபட்ட அறிவோ அனுபவமோ இருக்கவில்லை. இந்நூற்றாண்டின் பிற்கூறுகளிலேயே உலகைக் கண்டடையும் மோகம் ஐரோப்பியர்களுக்கு ஏற்பட்டது. அதற்கு முன்னர் ஆசியாவில் சீனா மற்றும் இந்தியா குறித்த ஒரு கேள்வி ஞானம் மட்டுமே ஐரோப்பாவுக்கு இருந்தது. ஆபிரிக்காவில் தமக்கு சமீபமாகவுள்ள -அதாவது மத்திய தரைக்கடலை அண்டியுள்ள- வடஆபிரிக்கா குறித்து ஐரோப்பியர்கள் சிறிது அறிந்து வைத்திருந்தனர்.

ஆசியாவையும் அமெரிக்காவையும் ஆபிரிக்காவின் பிற பிராந்தியங்களையும் தமது வேட்டைக் களமாக மாற்றும் ஐரோப்பியரின் எண்ணம் ஒரு திட்டமாகவே (Project) ஆரம்பமாகியது. ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் பலரும் சொல்வது போன்று இது வரலாற்றோட்டத்தில் தன்னியல்பாக நிகழ்ந்த ஒரு செயன்முறை (Process) அல்ல. ‘நாடுகாண் பயணம்’ என்ற ஒரு பொருளாதார கொலனித்துவ வேலைத் திட்டமாக ஆரம்பமாகி, பின்னர் அது அரசியல் ஆதிக்கத் திட்டமாக முடிவடைந்தது. கொலம்பஸ், மகலன், வாஸ்கொடகமா, மார்கோபோல போன்ற கடற்பயண முகவர்கள் இந்த ஐரோப்பிய திட்டத்தின் முன்னோடிகளாக இருந்து செயல்பட்டுள்ளனர்.

ஆசியாவிலும் அமெரிக்காவிலும் தமது உற்பத்திப் பொருட்களுக்கான சந்தைகளை சமாதான வழியில் தேடுவதான விம்பத்தை ஐரோப்பியர் உருவாக்கியபோதும் உலக நாடுகளை அனைத்து வகையிலும் பாதித்த கொலனித்துவத் திட்டத்தின் ஆரம்ப முயற்சியாகவே இதனைப் பார்க்க வேண்டும்.

ஐரோப்பா தவிர்ந்த உலகின் பிற பிராந்தியங்களில் செறிந்து காணப்பட்ட பொருளாதார மூல வளங்களையும் கச்சாப் பொருட்களையும் சூறையாடுவதே ஐரோப்பியர்களின் ஒரே குறியாக இருந்தது. காலப்போக்கில் தாங்கள் ஆயுத முனையில் அபகரித்த பிராந்தியங்களின் அரசியல் அதிகாரத்தையும் அவர்களே கைப்பற்றினர்.

15 ஆம் நூற்றாண்டு ஆசியாவின் தெற்கு, தென்கிழக்குப் பகுதி முழுவதும் அறேபியர்களினதும் முஸ்லிம்களினதும் வர்த்தகக் கோட்டையாக விளங்கியது. ஆசியாவில் மட்டுமன்றி, ஆபிரிக்காவிலும் முஸ்லிம்களே வணிகத்தில் கொடிகட்டிப் பறந்தனர். கப்பல்கள் மூலம் மத்திய தரைக்கடல், செங்கடல், இந்து சமுத்திரம் போன்ற முக்கிய கடற்பாதைகளினூடே ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் முஸ்லிம்கள் பெரும் இலாமீட்டிக் கொண்டிருந்தனர். அவர்களைத் தாங்கிப் பிடிப்பதற்கான அரசியல் இராஜதந்திரப் பலமும் அவர்கள் வசமே இருந்தது. உஸ்மானிய சாம்ராஜ்யம் எனப்படும் இஸ்லாமியப் பேரரசு பொருளாதார முன்னேற்றத்தின் உச்சியில் இருந்தது. அறிவியல், நாகரிக, கலாசார வானிலும் முஸ்லிம்கள் உலகுக்கு ஒளியூட்டிக் கொண்டிருந்த ஓர் உன்ன யுகம் அது.

ஐரோப்பிய கொலனித்துவம் உலகின் பிற நாடுகளுக்குப் பரவுவதற்கு முன்னர் ஐரோப்பிய வர்த்தகத்தின் பெரும் பகுதி மத்திய தரைக்கடலுக்கும் அதனைச் சூழவிருந்த சில பகுதிகளுக்கும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. அப்போது மத்திய தரைக்கடலை அண்மித்திருந்த வர்த்தக நகரங்களான ஜெனோவா, வெனிஸ், அலெக்சாந்திரியா, கருங்கடலுக்கு சமீபமாக விளங்கிய கொன்ஸ்தாந்துநோபில் முதலியன அக்கால வணிகத்தில் ஓரளவு முன்னேற்றமடைந்திருந்தன.

ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான வணிகத்திற்கு மூன்றே மூன்று வழிகள்தான் காணப்பட்டன.

கொன்ஸ்தாந்துநோபில் நகரிலிருந்து பாரசீகம், மத்தியாசியா வழியாக சீனா வரையான பட்டுப்பாதை.

கொன்ஸ்தாந்துநோபில் நகரிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக எகிப்தை ஊடறுத்து செங்கடலின் வழியே இந்து சமுத்திரத்தை அடைதல்

கொன்ஸ்தாந்துநோபில் நகரிலிருந்து பாரசீக வளைகுடா வழியாக இந்தியாவின் மேற்குக்கரையை அடைதல்