எதியோப்பியாவின் திக்ரே பிராந்தியப் போர் சிவில் யுத்தமாக மாறுமா?

50

கலாநிதி றவூப் ஸெய்ன்

கடந்த சில வாரங்களாக எதியோப்பியாவின் வடக்குப் புறமாகவுள்ள திக்ரே மாநிலத்தில் பிரிவினைவாதிகளுக்கும் எதியோப்பியாவின் மத்திய அரசாங்கப் படையினருக்கும் இடையில் நடைபெற்று வரும் போர் முழு அளவிலான சிவில் யுத்தமாக மாறலாம் என்று எச்சரிக்கப்படுகின்றது.

எரிட்ரியாவின் தலைநகர் அஸ்மராவின் விமான நிலையத்தின் மீது திக்ரே மக்கள் விடுதலை முன்னணி சனியன்று நடத்திய தாக்குதல் முழு ஆபிரிக்கப் பிராந்தியத்தையும் திக்ரேயை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கடந்த சனி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் எரிட்ரியாவுக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியிடப்படவில்லை. திக்ரேயிலிருந்து எதியோப்பிய-சூடான் எல்லைப் புறத்திற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.

இதேவேளை, திக்ரே இனத்தவர் அல்லாத மக்களை திக்ரே மக்கள் விடுதலை முன்னணி இனப்படுகொலை செய்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது போர்க் குற்றங்களுக்குச் சமமானவை என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீண்டகாலமாக வறுமை, பட்டினி, நோய், உள்நாட்டுப் போர் என்பவற்றால் பாதிக்கப்பட்டிருந்த எதியோப்பியா, தற்போது ஒரு புதிய நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது. திக்ரே நெருக்கடி எதியோப்பியாவை மட்டுமன்றி எரிட்ரியா, சூடான் முதலிய அயல்நாடுகளையும் பாதிக்கக் கூடும் என்று எச்சரிக்கப்படுகின்றது.

வரலாற்றுப் பின்னணி

ஆபிரிக்காவின் கிழக்குப் பகுதியில், மத்திய காலப் பிரிவில் அபீசீனியா என அழைக்கப்பட்ட எதியோப்பியா அமைந்துள்ளது. இதன் மொத்தப் பரப்பு 1127,127 சதுர கீ.மீ. அதில் 7444 சதுர கி.மீ. நீர்ப்பரப்பும் அடங்கும். வடக்கில் எரிட்ரியாவும் வடகிழக்கில் ஜிபூத்தியும் கிழக்கில் சோமாலியாவும் தெற்கில் கென்யாவும் மேற்கில் சூடானும் எல்லை நாடுகளாக உள்ளன.

எதியோப்பியாவில் இஸ்லாத்தின் வரலாற்றுக்கு நீண்ட பூர்வீகம் உள்ளது. நபிகளாரின் காலத்திலேயே இஸ்லாம் அங்கு அறிமுகமானது. கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இறைத்தூதரின் ஆலோசனையின் படி நஜ்ஜாஷியின் கிறிஸ்தவ இராஜ்யத்திற்கு வந்து சேர்ந்த முதற் குழுவினரின் வருகையோடு எதியோப்பியாவில் இஸ்லாம் அறிமுகமானது.

இன்று எதியோப்பியாவின் 109.22 மில்லியன் சனத்தொகையில் 65 வீதமானோர் முஸ்லிம்களாக உள்ளனர். ஆனால், கிறிஸ்தவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான சர்வதேச ஊடகங்கள் இவ்வுண்மையை மறைத்து வருகின்றன. ஷாபிஈ, ஹனபி, மாலிகி மத்ஹபுகளைப் பின்பற்றும் எதியோப்பிய முஸ்லிம்கள் பல்வேறு புவியியல் பிரதேசங்களிலும் பல்வேறு இனப் பிரிவுகளாக பரவி வாழ்கின்றனர். முஸ்லிம்கள் சனத்தொகையில் பெரும்பான்மையாக உள்ளபோதும் நீண்டகாலமாக தேசிய வாழ்வில் அவர்களின் பங்கு குறைவாகவே இருந்து வந்தது.

எதியோப்பியா ஆபிரிக்கக் கண்டத்தின் மிகப் பழமையான நாடாகும். நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருந்தபோதும் தற்போது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். 1855 இல் பேரரசர் டெவட் ரொஸ் நவீன எதியோப்பியாவுக்கான அடித்தளத்தை இட்டார். 1896 இல் இத்தாலியின் ஆக்கிரமிப்பு முறியடிக்கப்பட்டது. 1935 இல் மீண்டும் இத்தாலி எதியோப்பியாவை ஆக்கிரமித்தது. 1974 இல் நடைபெற்ற இராணுவப் புரட்சியில் ஹெய்லி ஸலசி பதவி கவிழ்க்கப்பட்டார். 1977 இல் சர்வதிகாரி ஹெய்லி மர்யத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். 1984 இல் கடும் வரட்சி நாட்டை பெருமளவு பாதித்தது. 1991 இல் ஹெய்லி மர்யத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

1999 இல் எதியோப்பிய எரிட்ரிய யுத்தம் நடந்தது. 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வரட்சி எதியோப்பியாவின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்து வந்ததோடு அரசியல் ஸ்திரமின்மையும் நாட்டை சீர்குலைத்தது. 2018 இல் மிக நீண்டகாலத்திற்குப் பின்னர் அபி அஹ்மத் என்ற ஒரோமோ இனக் குழுமத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் நாட்டின் பிரதமர் ஆனார். பல்வேறு அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அபி அஹ்மத் வாக்குறுதியளித்தார். அவரது வருகையோடு எரிட்ரியாவுடனான போரும் முடிவுக்கு வந்தது. கிறிஸ்தவர் ஒருவரே நாட்டின் ஜனாதிபதியாக உள்ள நிலையில், பிரதமர் அதிகூடிய அரசியல் அதிகாரம் கொண்டவராக விளங்குகின்றார்.

எதியோப்பியாவின் அரசாங்க முறை சமஷ்டி ஆட்சியாகும். இதன்படி வடக்குப் புறத்தில் அமைந்துள்ள திக்ரே மாநிலத்திலேயே தற்போது ஆயுத மோதல் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

திக்ரே மக்கள் விடுதலை முன்னணி

எதியோப்பியாவில் பல்வேறு இனக் குழுமங்கள் வாழ்கின்றன. சுமார் 10 கோடி மக்களைக் கொண்ட இந்நாட்டில் 15 இற்கும் மேற்பட்ட இனக் குழுமங்கள் உள்ளன. அவற்றில் ஒரோமோ (34.4%), ஹம்ஹாரா (27%), சோமாலி (6.2%) ஆகிய இனக் குழுமங்களின் வரிசையில் நான்காவது இடத்திலுள்ள திக்ரே இனத்தவர்கள் வடக்கின் திக்ரே மாநிலத்தில் செறிவாக உள்ளனர். மொத்த சனத்தொகையில் அவர்கள் 6.1% எனக் கருதப்படுகின்றனர்.

கடந்த 100 ஆண்டுகளாக இவர்கள் நாட்டின் மைய நீரோட்ட அரசியலிலிருந்து விளிப்பு நிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, 1889 இல் 2 ஆம் மெனலிக் ஆட்சியின் பொழுது திக்ரே இனத்தவர்கள் நாட்டின் தீர்மானகரமான விடயங்களிலும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களிலும் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக திக்ரே இன மக்கள் நம்புகின்றனர்.

இந்த மனக்குறையின் வெளிப்பாடு 1970 களில் காட்டமாக புலப்படத் தொடங்கியது. 1975 பெப்ரவரி 18 இல் இனத் தேசியவாத சிந்தனையோடு திக்ரே மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் ஆயுத இயக்கமொன்று நிறுவப்பட்டது. அருகிலுள்ள எரிட்ரியாவில் வாழும் திக்ரே இனத்தவர்களோடு கூட்டுச் சேர்ந்து பல்வேறு அரசியல், இராணுவ செயற்பாடுகளில் ஈடுபட்ட இவ்வியக்கம், 1990 களுக்குப் பின்னர் இராணுவ ரீதியில் மேலும் வளர்ச்சி கண்டது.

ஏற்கனவே, சமஷ்டி அரசாங்கம் நிலவும் திக்ரே மாநிலத்திலும் இவ்வினத்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் திக்ரேயை சுயாட்சிப் பிராந்தியமாக அல்லது தனிச் சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு கடந்த சில வாரங்களாக திக்ரே சமஷ்டிப் படையினரோடு மோதலை ஆரம்பித்தனர். இதன் தலைவர் டெப்ரிடிசியன். எதியோப்பியாவின் மத்திய அரசாங்கத்திற்கு சவால் விடுத்த நிலையில் பிரதமர் அபி அஹ்மத் மத்திய அரச படையினரை திக்ரேயின் எல்லைப் புறத்திற்கு அனுப்பியதோடு மோதல் கூர்மையடைந்தது.

தற்போது திக்ரே கூட்டாட்சி அரச படை மோதலிலிருந்து ஒதுங்கியுள்ளது.  மத்திய அரச படையினருக்கும் திக்ரே பிரிவினைவாத TPLF படையினருக்கும் இடையிலேயே தற்போதைய மோதல் இடம்பெறுகின்றன. பிரிவினைவாதிகளுக்கு சரணடையுமாறு பிரதமர் அபி அஹ்மத் விதித்த காலக்கெடு கடந்த சனிக்கிழமை நிறைவுற்றுள்ளது. தற்போது திக்ரேயின் மாநிலத் தலைநகரம் மெக்லேயை நோக்கி எதியோப்பிய தேசியப் படை முன்னேறியுள்ளது. எதிர்வரும் ஓரிரு தினங்களில் மெக்கலேயை TPLF பிரிவினைவாதிகளிடமிருந்து முழுமையாக மீட்க முடியும் என்று அபி அஹ்மத் கடந்த வெள்ளியன்று அறிவித்திருந்தார்.

இதற்கிடையில் TPLF அருகிலுள்ள எரிட்ரியாவின் தலைநகர் அஸ்மராவின் தேசிய விமான நிலையத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது. திக்ரேயின் பிரச்சினையை சர்வதேசப் பிரச்சினையாகக் காட்டும் நோக்கிலும் தமது கோரிக்கை குறித்த சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையிலுமே டெப்ரிடிசியன் இத்தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளதாக எதியோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் TPLF தலைவர் எரிட்ரியா மீதான தாக்குதல் குறித்து ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். “எத்தனை ஏவுகணைகள் அஸ்மராவை நோக்கி ஏவப்பட்டன என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், எங்களது படை அஸ்மரா விமான நிலையத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளமை உறுதி. எதியோப்பியாவின் தேசிய இராணுவத்தோடு எரிட்ரிய இராணுவமும் இணைந்தே எங்களோடு மோதலில் ஈடுபட்டுள்ளதால் நாம் அஸ்மராவைத் தாக்க வேண்டி ஏற்பட்டுள்ளது” என TPLF தலைவர் தெரிவித்துள்ளார்.

இப்பிரிவினைவாத இயக்கத்தில்  இரண்டரை இலட்சம் அங்கத்தவர்கள் உள்ளதாகக் கூறப்பட்டாலும் சுமார் 40,000 நேரடி இராணுவ வீரர்களே களத்தில் உள்ளனர் என்று சர்வதேச இராணுவத் துறை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், எதியோப்பியாவின் தேசியப் பாதுகாப்புப் படையில் 140,000 தரைப்படை மாத்திரம் உள்ளது. விமானப் படையினரின் அளவு சரியாகத் தெரியவில்லை.

TPLF விமானங்களை சுட்டுவீழ்த்தும் ஆயுதங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆனால், அடிஸ்அபாபா படையினர் திக்ரேயை நோக்கி குறிப்பாக தலைநகர் மெக்லேயை நோக்கி முன்னேறி வருவதாக எதியோப்பிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆயுத மோதலுக்கான மனித விலை

திக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் அடிஸ்அபாபா அரச படையினருக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதலால் திக்ரேயில் வாழும் மக்கள் பல்லாயிரக்கணக்கில் எல்லைப்புற நாடான சூடானுக்குள் அகதிகளாகப் புலம்பெயர்ந்து வருகின்றனர். இதற்கிடையில் குறுக்குச் சமரில் சிக்குண்ட நூற்றுக்கணக்கான சிவிலியன்களைக் காப்பாற்றுவது சிக்கலாக மாறியுள்ளது என ஐசிசி எனப்படும் சர்வதேச நெருக்கடிக்குழு தெரிவித்துள்ளது.

நவம்பர் 21 இல் TPLF திக்ரே அல்லாத நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை இனப்படுகொலை செய்ததான குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன. அஸ்மரா தாக்குதலை அடுத்து திக்ரே நெருக்கடி குறிப்பிட்டளவு சர்வதேச கவனத்தை எட்டியுள்ளது. பேச்சுவார்த்தைக்கு தமது அரசாங்கம் தயார் என்று அபி அஹ்மத் கூறியுள்ளார்.

பிரதமர் நாட்டில் அமைதியான சூழலை உருவாக்கி, பொருளாதார அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாரியளவிலான அரசியல் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு அனைத்து இனத்தவர்களதும் மனக் குறைகள் தீர்மாக்கப்படும் என்று வாக்குறுதியளித்த நிலையிலேயே ஒரு புதிய உள்நாட்டு மோதலை எதிர்கொண்டுள்ளார். இராணுவ ரீதியான மோதலை தொடர்ந்தும் முன்னெடுத்து பிரிவினை வாதப் போரை அவரால் முடிவுக்குக் கொண்டு வர முடியுமான என அரசியல் ஆய்வாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

எதியோப்பியாவின் தற்போதைய பொருளாதார நிலைகளை வைத்துப் பார்க்கும்போது சிவில் யுத்தம் மேலும் அந்நாட்டை சீரழிக்கலாம் என்றே எச்சரிக்கப்படுகின்றது.

பிரதமர் அபி அஹ்மத்

எதியோப்பியாவின் புதிய பிரதமர் அபி அஹ்மத் 2018 ஏப்ரலில் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னைய பிரதமர்களை விட ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் அஹ்மத் சர்வதேச இராஜதந்திர துறையில் மிகுந்த அனுபவம் கொண்டவர். எதியோப்பியாவின் மிகப் பெரும் இனக்குழுமமான ஒரோமா சமூகத்தைச் சேர்ந்தவர். 1995 இல் ஐ.நா.வினால் ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்ட அமைதி காக்கும் இராஜதந்திரிகளின் அணியில் இடம்பெற்ற முக்கிய அதிகாரி. இதேவேளை, அமைதி மற்றும் நல்லிணக்கம் ஆகிய துறைகளில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். இவற்றை வைத்து நோக்கும்போது எதியோப்பியாவில் ஒரு நல்லாட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு அதிகபட்ச தகுதியுடையவர். ஆனால், வடக்கின் கிறிஸ்தவப் பிரிவினைவாத மோதலை அவர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார் என்பதே அவருக்கு முன்னால் தற்போது எழுந்துள்ள பெரும் சவாலாகும்.

எதியோப்பியாவின் முழு அளவிலான சிவில் யுத்தமாக இது மாறிவிடுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. ஆயினும், அயல்நாடுகளான சூடான், எரிட்ரியா என்பனவும் இதற்கு விலைகொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. கென்யா, ஜிபூத்தி மற்றும் சோமாலியாவும் இந்த நெருக்கடிக்குள் இழுக்கப்படும் ஆபத்து உள்ளது. இதனால், திக்ரே நெருக்கடியை ஐ.நா.வும் பிற சர்வதேச சமூகமும் நேர்மையாக அணுகி, தீர்த்து வைக்க வேண்டிய தேவை உள்ளது. தவறும்பட்சத்தில் ஆபிரிக்காவில் இன்னொரு நிரந்தரமான போர் முனை Hotspot) உருவாவதை தவிர்க்க முடியாமல் போய்விடும்

எதியோப்பியாவின் இனக் குழுமங்கள்

இனக் குழுமம்   வீதம்

ஒரோமோ 34.4

ஹம்ஹாரா     27

சோமாலி  6.2

திக்ரே     6.1

சிதாமா    4

குராகே    2.5

வெலஐடா 2.3

ஹதிய்யா  1.7

அபார் 1.7

காமோ    1.5

கெடியோ  1.3

சில்தி     1.3

கெபிச்சோ  1.2

ஏனையோர் 8.8