அறிவுக் கண்ணைத் திறக்க அறிவுள்ள சமூகங்கள் முன்வர வேண்டும்

42

கொவிட் 19 உருவாக்கியுள்ள சூழல்கள் இலங்கை மண்ணில் அறிவியலின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன. குறிப்பாக கொவிட் 19 இனால் இறந்தவர்களின் அல்லது இறந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் உடல்களை அகற்றுவதில் இலங்கையின் மருத்துவ அறிவியல் சவாலுக்குட்பட்டுள்ளது.

உலகின் அதி உயர் சுகாதார பீடமான உலக சுகாதார அமைப்பு முன்வைத்துள்ள கொவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அப்புறப்படுத்துவது தொடர்பில் முன்வைத்துள்ள விஞ்ஞானரீதியான முடிவை இலங்கை சுகாதாரத் துறை சவாலுக்குட்படுத்தத் துணிந்திருக்கிறது. இந்த விடயத்தில் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்களையும் உலகில் பெரும்பாலும் ஒட்டுமொத்த நாடுகளும் நடைமுறைப்படுத்துகின்ற நடைமுறைகளையும் ஏற்றுக் கொள்ளாமல் தாமாக ஆராய்ந்து முடிவெடுப்பது என்று இலங்கையின் சுகாதாரத் துறையினர் தீர்மானித்திருக்கிறார்கள். அந்த வகையில் உலகத்துக்கான புதிய அறிவியல் கண்டுபிடிப்பொன்றுக்காக இலங்கை மக்களும் உலக மக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

ஆனாலும் இது கொரோனாவுக்கான வக்சீன் கண்டுபிடிக்கப்படுவது போலவே அவசரமாகச் செய்ய வேண்டிய பணியாகவிருக்கிறது. ஏனெனில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உலக சுகாதார அமைப்பு வழங்கிய வழிகாட்டல் பிழையானது என்று இலங்கை சுகாதாரத் துறையினர் நிரூபித்தால் பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை. ஆனால் முடிவு அதனை ஏற்றுக் கொள்வதாக வருமானால் அந்த முடிவை எடுப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால் பிழையான நடைமுறையில் அகற்றப்பட்ட மனித உடல்களை மீளவும் பெற்று தவறைச் சரிசெய்ய முடியாமல் போய்விடும்.

உலக சுகாதார அமைப்பின் உடல்களை அப்புறப்படுத்துவது தொடர்பான வழிகாட்டலை மீளாய்வுக்குட்படுத்துவதற்கான குழுவொன்று ஆறு மாதங்களுக்கு முன்னரே சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டது. ஆனால் இந்த வழிகாட்டல்கள் பிழையானது என்றோ சரியானது என்றோ அறிக்கை சமர்ப்பிக்க அவர்களால் முடியவில்லை. ஆகவே கடந்த மாதம் மீண்டும் பல்வேறு இலங்கை நிபுணர்களையும் உள்ளடக்கிய 11 பேர் கொண்ட நிபுணத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இவர்களும் இன்னும் இதனை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கொவிட் 19 ஐ ஒழிப்பதற்காக சுகாதார அமைச்சர் முட்டியை ஆற்றில் கரைத்தமை எவ்வளவு தூரம் விஞ்ஞானபூர்வமானது என்பது தொடர்பில் நாட்டு மக்கள் சுகாதாரத் துறையின் அறிக்கையை எதிர்பார்க்காத போதிலும் உடல்களை அப்புறப்படுத்துவது தொடர்பிலான இந்த விஞ்ஞான அறிக்கை தங்களது மரணமும் கொரோனாவினாலானது என்று தீர்மானிக்கப்பட்டு விடும் என்ற அச்சத்தினால் வாழ்ந்து கொண்டிருப்பவர்களால் ஒவ்வொரு நாழியும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சுகாதாரத் துறையின் இந்த விஞ்ஞானபூர்வமான அறிக்கை விரைவில் வெளியிடப்படுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள் உலகெங்கிலும் பின்பற்றப்பட்டு வருகின்றன என்ற வகையில் இதற்கான ஆதாரங்களை பல்வேறு படித்த நாடுகளினதும் அறிஞர்களிடமிருந்து இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில் தற்போது அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ, முஸ்லிம் சமூகங்கள் இந்த விடயத்தில் இலங்கை நிபுணத்துவக் குழுவுக்கு உதவ முடியும். அதேபோல நாட்டிலுள்ள மற்றும் வெளிநாடுகளில் உள்ள நேர்மையான மருத்துவ நிபுணர்களும் தமது உள்ளீடுகளை வழங்கி அறிவியலைக் காப்பாற்ற முன்வர வேண்டும். மரணித்தவர்களுக்கு சவப்பெட்டியும் பிசிஆர் பரிசோதனையும் செய்கின்ற நிதியை இந்த ஆய்வை நிறைவு செய்வதற்கு பயன்படுத்த முடியும்.

எவ்வாறாயினும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இலங்கையில் அறிவியல் செயற்படும் என்ற எதிர்பார்ப்புத் தான் அனைவரிடமும் காணப்படுகிறது. அந்த வகையில் வரப்போகின்ற நிபுணத்துவக் குழுவின் அறிக்கை இலங்கையின் அறிவியலின் தரத்தை தீர்மானிக்கப்போகிறது. அதுவரையில் கொவிட்டினால் கண்ணை மூடியவர்கள் நாட்டின் அறிவுக் கண்ணைத் திறக்கச் செய்வதற்காக தமது உயிரை அர்ப்பணித்துள்ளார்கள் என்றே அவர்களை சமூகங்கள் கௌரவப்படுத்த வேண்டும்.