போர்த்துக்கேயர் காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் – 2

92

13 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டின் நடுக்கூறுகள் வரை முஸ்லிம்கள் ஒரு பெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பியிருந்த காலம் எனலாம். துருக்கிய உஸ்மானியர்களின் ஆட்சி உலகின் சுமார் கால்வாசி நிலப்பகுதியை தழுவியிருந்தது. சமகாலத்தில் இந்தியாவில் மொகலாயர்களின் ஆட்சியும் பாரசீகத்தில் சபவீக்களின் ஆட்சியும் நிலைபெற்றிருந்தது. பக்தாத் மைய அப்பாஸிய ஆட்சி வீழ்ச்சியடைந்தபோதும் துருக்கிய உஸ்மானியப் பேரரசு படிப்படியாக வீறுகொண்டெழுந்தது. 15 ஆம் நூற்றாண்டில் உலகை வெல்லும் மாபெரும் வல்லரசாக அது வளர்ச்சி கண்டது.

தொடக்கத்தில் சின்னாசியா எனப்படும் பிராந்தியத்தை உள்ளடக்கியதாக விளங்கிய இப்பேரரசு, காலவோட்டத்தில் கிழக்கு ஐரோப்பா வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு வரை விரிவடைந்தது. கிழக்கைரோப்பா நோக்கிய அதன் விரிவாக்கத்தில் கொன்ஸ்தாந்துநோபில் மீதான வெற்றி முக்கிய திருப்பமாகும். 1453 இல் கொன்ஸ்தாந்துநோபில் இந்நகரை முஹம்மத் எனும் முஸ்லிம் படைத்தளபதி வெற்றி கொண்டார். இவர் உஸ்மானிய பேரரசர் ஒருவரின் மகன் என்பதோடு, இந்த மகத்தான வெற்றி ஏலவே இஸ்லாமிய மூலாதாரங்களில் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளமை கவனிப்புக்குரியது. இதனால் இவ்வெற்றி வீரர் பாதிஹ் (வெற்றியாளர்) என்றே பிற்காலத்தில் பிரபல்யமானார்.

முஸ்லிம்களின் இவ்வெற்றியைத் தொடர்ந்து கிறிஸ்தவ ஐரோப்பியர்களால் நாம் முன்னர் குறிப்பிட்ட வர்த்தகப் பாதைகளைப் பயன்படுத்த முடியாமல் போனது. இதனால் வாசனைத் திரவியங்களைப் பெறவும் ஏனைய மூலப்பொருட்களைத் தேடவும் ஐரோப்பியர்கள் ஆசியாவுக்கு நேரடியாகப் பயணிக்க வேண்டிய நிலை உருவானது என சில காலனித்துவ ஆதரவு வரலாற்றுணர்வாளர்கள் நியாயப்படுத்துவர். யதார்த்தம் என்னவெனில், ஆசியாவின் வர்த்தகம் முழுவதும் அக்காலத்தில் முஸ்லிம்கள் வசம் இருந்ததனால் பொறாமையும் ஆத்திரமும் அடைந்திருந்த கிறிஸ்தவ ஐரோப்பியர் செல்வச் செழிப்பு மிக்க ஆசியாவின் பொருளாதார வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முனைந்தனர்.

முஸ்லிம்கள் வசம் இருந்த வர்த்தகத்தை தம் வசம் கொண்டு வரவும் தமது ரோமன் கத்தோலிக்க மதத்தை கீழைத்தேய மக்கள் மீது பலாத்காரமாகப் பரப்பவும் நாடுகாண் பயணம் என்ற பெயரில் ஆசியாவுக்கான கடல் வழிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இதன் மூலம் ஆசிய நாடுகளில் செறிவாக விரவிக் கிடக்கும் கச்சாப் பொருட்களையும் (Raw Materials) பெறுமதியான வாசனைத் திரவியங்களையும் சுருட்டிக் கொள்ளலாம் என்று மனப்பால் குடித்தனர்.

இந்தப் பின்னணியிலேயே அப்போது ஐரோப்பாவில் உருவாகியிருந்த சில தேசிய அரசுகள் இத்தகைய நாடுகாண் பயணங்களுக்கு (கடல் மார்க்கங்களைக் கண்டுபிடிப்பதற்கு) அனுசரணை வழங்கின. அவற்றுள் போர்த்துக்கல், ஸ்பெய்ன், நெதர்லாந்து, பிரித்தானியா ஆகிய நாடுகள் முக்கியமானவை.

போர்த்துக்கல் என அறியப்படும் நாடு ஐபீரிய குடாநாட்டில் அமைந்துள்ளது. இதன் காரணமாக போர்த்துக்கேயர்கள் கடல்வழியாகவே பிற நாடுகளுடன் தொடர்புகொள்ள வேண்டியிருந்தது. இதன் பக்க விளைவாக ஏற்கனவே அந்நாடு சிறந்த மாலுமிகளைக் கொண்டிருந்தது. போர்த்துக்கேய மன்னன் கடலோடி ஹென்றி என்பவன் 15 ஆம் நூற்றாண்டில் அந்நாட்டில் கப்பல் பழுதுபார்த்தல் மற்றும் கப்பலோட்டும் பயிற்சிப் பாசறையொன்றை நிறுவி அக்கலையை கற்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டான். இது போர்த்துக்கல் நாட்டவர்களின் நாடுகாண் பயண அனுபவத்தில் ஒரு புதிய திருப்பமாக அமைந்தது. இக்கல்லூரியில் பயிற்சி பெற்ற பலர் உலகின் பல்வேறு நாடுகளை நோக்கி தமது கடல் மார்க்க கண்டுபிடிப்புப் பயணத்தைத் தொடர்ந்தனர்.

பர்த்தலோமியன் டயஸ் என்பவனின் தலைமையிலான குழுவொன்று 1488 இல் ஆபிரிக்காவின் கிழக்குக் கரை வழியாகப் பயணித்து அதன் தென் முனையை அடைந்தது.  புயலில் சிக்குண்ட அவர்கள் அவ்விடத்திற்கு (ஆபிரிக்கத் தென் முனை) புயல் முனை எனப் பெயரிட்டனர். நம்பிக்கையிழந்த அவர்கள் மீளவும் தமது நாடான போர்த்துக்கலை அடைந்தனர். ஆனால் மன்னன் ஹென்றி இதனைத் தோல்வியென்றோ ஏமாற்றம் என்றோ கொள்ளாது ஒரு திருப்பமும் வெற்றிக்கான ஆரம்பமும் எனக் கருதி ஆபிரிக்கத் தென்முனையை நன்னம்பிக்கை முனை எனப் பெயரிட்டான்.

ஐரோப்பியர் இவ்வழியாகவே முதலில் ஆசியாவுக்கு வந்தனர். 1498 ஆம் ஆண்டு வாஸ்கொடகாமா குழுவினர் இந்தியாவில் கள்ளிக்கோட்டையில் தரையிறங்கினர். இது ஆசியாவுக்கு புதிய கடல்பாதையைக் காண்பதன் ஐரோப்பிய நோக்கத்தை நிறைவேற்ற வழிவகுத்தது.