இலங்கையில் சமாதானக் கல்வி தோல்வியடைந்து விட்டதா?

83
  • றவூப் ஸெய்ன்

பன்மைத்துவ நாடொன்றில் பல்வேறு இனங்கள், மொழிகள், கலாசாரங்கள், மதங்கள் நிலவுவது ஓர் அழகான தோற்றப்பாடாகும். பல்வகைமை அழகானது என சமூகவியலாளர்கள் கூறுவர். அதனை முரண்பாடாகவோ மோதலாகவோ நாம் மாற்றிக்கொள்ளாதவரை அது ஒரு நாட்டின் பலமாகவும் சமூகவியல் அழகாகவும் இருக்கும். சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வும் பரஸ்பர கௌரவமுமே இத்தகைய பன்மைத்துவ அழகை தக்கவைப்பதற்கான சிறந்த வழிகளாகும்.

இன்னொரு புறம் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக் கண்ணோட்டத்தில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் (Reconciliation) சகஜீவனமும் (Coexistence) அடிப்படை நிபந்தனைகளாகும். பன்மைப் பாங்கான நாடுகளில் அரசியல் ஸ்திரப்பாட்டை ஆராய்ந்தவர்கள் இவற்றை அபிவிருத்திக்கான சமூகக் கட்டுமானம் (Social Infrastructure) என்பர். மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பன்மைத்துவ இயல்பினைக் கொண்டிருப்பினும் அவற்றின் பொருளாதார சமூக அபிவிருத்திக்கு இக்கீழ்க் கட்டுமானம் பெருமளவு உதவியுள்ளதை ஆய்வுகள் காட்டுகின்றன.

மறுதலையாக பெரும்பான்மை சிறுபான்மை மோதல்கள் அல்லது முரண்பாடுகள் தலைதூக்கியுள்ள வேறு சில நாடுகளில் பொருளாதார அபிவிருத்தியோ சமூக அபிவிருத்தியோ ஏற்பட்ட வரலாறு இல்லை. பல்வேறு இனக் குழுமங்களையும் கோத்திர அமைப்புகளையும் கொண்ட ஆபிரிக்க நாடுகள் இன்று சிவில் யுத்தத்திற்கு முகம்கொடுத்துள்ளமை இதற்குரிய தெட்டத் தெளிவான ஆதாரமாகும்.

எனவே, புரிந்துணர்வு, நல்லிணக்கம், அதனடியாக எழும் அரசியல் ஸ்திரப்பாடு, அதனையொட்டிய பொருளாதார சமூக அபிவிருத்தி இதுவே பன்மைப் பாங்கான நாடுகள் கவனம் செலுத்த வேண்டிய முன்னுரிமைக்குரிய விடயங்களாகும். பன்மைத்துவ நாடொன்றில் கல்வியின் மூலம் மட்டுமே தேசிய நல்லிணக்கத்தையும் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் கட்டியெழுப்பலாம் என்று நாம் வாதிக்க முடியாது. அரசியலமைப்பு சீர்திருத்தம், சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகத்தை வலுப்படுத்தல், ஒழுக்கமான ஊடகம் போன்ற பல்வேறு காரணிகள் மூலமே நிலையான நல்லிணக்கத்தை உருவாக்க முடியும்.

அக்காரணிகளின் வரிசையில் ஒரு நாட்டின் கல்விக் கொள்கையும் கலைத் திட்டமும் கல்விக்கான சமவாய்ப்பும் முக்கிய பங்காற்ற முடியும் என்பதை இன்றைய சமாதானக் கல்வி எனும் எண்ணக்கரு வலியுறுத்தி நிற்கின்றது. குறைந்தபட்சம் நமக்குள்ள பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளவும் அதைத் தீர்த்துக் கொள்வதற்கான ஆற்றலையும் கல்வி மூலம் நாம் கட்டியெழுப்பலாம். ஒரு நாட்டின் கல்விக் கொள்கை, கலைத் திட்ட வடிவமைப்பு என்பவற்றின் மூலம் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினைப் பெற்றுக்கொடுக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு சிறந்த கல்விக் கொள்கையை அமுல்படுத்துவதற்கு முன்னர், நிலவும் கல்விக் கொள்கையிலுள்ள கோளாறுகளையும் இனசவ்ஜன்யத்திற்கு அது பாதகமாக அமைகின்றதா என்பதையும் நாம் ஆராய வேண்டியுள்ளது. பாடத்திட்டத்தில் சக சமூகங்களை வெறுத்தொதுக்கும் உள்ளடக்கம் இடம்பெறுகின்றதா? வரலாற்று உண்மைகள் திரிக்கப்பட்டுள்ளதா? குறிப்பிட்ட சிறுபான்மைச் சமூகங்களின் தேசியப் பங்களிப்பு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதா அல்லது மொத்தமாகவே புறமொதுக்கப்பட்டுள்ளதா? நமது கல்வி முறை சமூகங்களை இன ரீதியாகப் பிரிக்கின்றதா? அரசாங்கத்தின் வளப் பகிர்விலும் கல்விக்கான சமவாய்ப்பை வழங்குவதிலும் பாகுபாடுகள் காட்டப்படுகின்றதா? இவற்றை நாம் ஆராயும்போது நமது தேசிய கல்வி முறை மூலம் நல்லிணக்கத்தையும் சக வாழ்வையும் கட்டியெழுப்புவதில் பல்வேறு நெருக்கடிகள் உள்ளதைப் புரிந்துகொள்ளலாம்.

தொடக்கமாக முரண்பாட்டுத் தீர்வில் கல்வியின் வகிபாகம் என்ன என்பதை கல்வியியலாளர்கள் புரிந்துகொண்டுள்ளனரா? அதேவேளை, நல்லிணக்கத்தை உருவாக்கும் கல்வித் துறைத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதா? இன்று சர்வதேச அளவில் கல்வியின் மூலம் சமாதானத்தை அடையும் நோக்கில் சமாதானக் கல்வி (Peace Education) எனப்படும் கருத்தியல் வேகமாக வளர்ந்து வருகின்றது. சமீபத்தில் இந்தியாவின் கல்வியியலாளர் கிருஷ்ணமூர்த்தி எழுதிய Education and World Peace மற்றும் Education and Significant of life ஆகிய நூல்களும் ஸ்ரீதேவி பிரகாஷ் எழுதிய Peace Education எனும் நூலும் இத்துறையில் மிகவும் முக்கியமானவை.

தொடரும்