ஜனாஸாக்கள் பலவந்தமாக தகனம் செய்யப்படுவது தொடர்பாக தேசிய ஷுரா சபையின் வேண்டுகோள்

180

கோவிட்-19 காரணமாக, வரலாற்றிலேயே மிகவும் சோதனைக் குரிய காலகட்டத்தை உலகம் கடந்துகொண்டிருக்கின்றது. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல.

போதாக்குறைக்கு, இந்த வைரஸ் தொற்று காரணமாக இறந்த இந்நாட்டு முஸ்லிம்களை இஸ்லாமிய போதனைகளுக்கு அமைய அடக்கம் செய்யும் உரிமை மறுக்கப்படும் சவாலை இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்குகிறார்கள்.

கோவிட்-19 தொற்றால் இறந்தவர்களை தமது நெருங்கிய உறவினர்களின் விருப்பத்திற்கமைய அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) வழிகாட்டல்கள் அனுமதியளித்துள்ளன.

சுமார் 180 க்கும் அதிகமான உலக நாடுகள் இந்த வழிகாட்டல்களைப் பின்பற்றி, நல்லடக்கம் அல்லது தகனம் ஆகிய இரு தெரிவு களையும் நடைமுறைப்படுத்த அனுமதித்திருக்கின்றன.

கோவிட்-19 தொற்றால்  உயிரிழக்கும் முஸ்லிம்களை உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல்களுக்கு அமைய அடக்கம் செய்வதற்கான உரிமை மறுக்கப்படுவதனை நியாயப்படுத்தும் எந்தவொரு உத்தியோகபூர்வ ஆவணமும் அரசினால் வெளியிடப் படவில்லை. நிலைமையை சீர்செய்வதற்காக முஸ்லிம்கள் அரசாங் கத்தை அணுகி, சட்டத் தீர்விற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

ஒரு முஸ்லிம் மரணித்தால் பின்வரும் நான்கு சடங்குகளை அவரது ஜனாஸாவுக்கு சகோதர முஸ்லிம்கள் நிறைவேற்ற வேண்டும் என இஸ்லாம் கடமையாக்கியுள்ளது:-

  1. குளிப்பாட்டுதல்
  2. கபனிடுதல்
  3. கூட்டான தொழுகையை அவருக்காக நிறைவேற்றுதல்
  4. நல்லடக்கம் செய்தல்

கோவிட்-19 தொற்றால் மரணித்த ஒருவருக்கு நிறைவேற்றப் பட வேண்டிய முதல் மூன்று சடங்குகளையும் விட்டுக் கொடுக்க இணக்கம் தெரிவித்துள்ள இலங்கை முஸ்லிம்கள், உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல்களுக்கு அமைய அடக்கம் செய்வதற் கான உரிமையை மாத்திரம் கேட்கின்றனர்.

துரதிஷ்டவசமாக, கோவிட்-19 காரணமகாக இறந்தவர்களை நல்லடக்கம் செய்யும் விடயத்தில் அரசு தளர்வாக இருந்து அனுமதிப் பதற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை.

இவ்வாறான நிலையில் முஸ்லிம்கள் ஆன்மீக ரீதியில் தங்களைத் திடப்படுத்துவதே ஒரே வழியாகும்.

அதேவேளை, தங்களது உரிமையை பாதுகாக்க சட்ட ரீதியான சகல நடவடிக்கைகளையும் அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

கோவிட்-19 ஆல் இறந்தவர்களை வலிந்து தகனம் செய்வதானது அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட தத்தமது மதத்தைப் பின்பற்று வதற்கான அடிப்படை உரிமை மீதான மீறலாக இலங்கை முஸ்லிம் களினால் பார்க்கப்படுகிறது.

மேலும், பல்வேறு கோணங்களிலும் நமது நாடு சவால்களை எதிர் நோக்குகின்ற இந்தக் காலகட்டத்தில், முஸ்லிம்கள் மீதான இந்த பார பட்சமானது, மிக அத்தியவசியமான தேவையாகிய சமூகங்களுக் கிடையிலான ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு என்பவற்றிற்குப் பாதகம் விளைவிக்கும் செயற்பாடாகும்.

எனவே, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரை களை அமுல்படுத்துவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தினருடன் நீதமாக நடந்துகொள்ளுமாறும், அதற்கமைய இதனுடன் தொடர்புபட்ட வர்த்த மானி அறிவித்தலைத் திருத்தி கோவிட்-19 மூலம் இறந்தவர்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறும் நாங்கள் அரசாங்கத்தை மிக அழுத்தமாகக் கேட்டுக்கொள்கிறோம்.

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் தொடர்ந்தும் தமது உரி மையை வென்றெடுப்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு முயற்சிகளைச் செய்வதோடு, மார்க்கத்தின் வழிகாட்டல்கள் மூலமான ஆன்மீக பலத்தினை மேம்படுத்துவது பிரதானமானது என வலியுறுத்துறோம்.

“நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றில் குறைவை உண்டு பண்ணுவதன் மூலமாகவும் சோதிப்போம். பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!” (அல்குர்ஆன்:2:155)

மேற்குறித்த அல்குர்ஆன் வசனத்தின் நிழலில் பார்க்கையில், நம்பிக்கை கொண்டவர்கள் என்றவகையில் நாம் எதிர்கொள்ளும் சோத னைகள் மற்றும் கவலைகள் அனைத்தும் முஸ்லிம்களின் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கங்களாகும். ஒவ்வொரு சோதனையும் கவலை யும் நம்பிக்கைகொண்டோருக்கு அருளாகவும் அவர்களை செம்மைப் படுத்தும் நோக்கம் கொண்டவையாகவும் இந்த உலக வாழ்க்கை மற்றும் மறுமைக்காக எம்மைத் தயார்படுத்துபவையாகவும் கருதப் படுகிறன. இந்த சோதனைகளை பொறுமையுடனும் விடா முயற்சி யுடனும் எதிர்கொள்ளவும் நிர்வகிக்கவும் இஸ்லாமிய போதனைகள் நம்மைத் தயார்செய்வதுடன் அத்தகைய பொறுமை மற்றும் விடா முயற்சியின் வெகுமதியை உறுதிசெய்கின்றன.

ஆகவே, கோவிட்19 மூலம் பாதிக்கப்பட்டு இறக்கும் ஒருவர் பலவந்தமாக தகனம் செய்யப்படுவதைக் கேள்விப்படும் ஒவ்வொரு முறையும், அவருக்காக துஆச் செய்து, ஜனாஸா தொழுகையை தனித் தனியாகதத் தமது வீடுகளில் நிறைவேற்றுமாறு முஸ்லிம்களை நாம் வேண்டிக்கொள்கிறோம்.

நாடெங்கிலும் உள்ள முஸ்லிம் சமூகத்தின் இத்தகைய துஆக்கள் மற்றும் ஜனாஸா தொழுகைகள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங் களுக்கு ஆறுதல் அளிப்பதோடு, இந்த கடினமான காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு ஆன்மீக பலத்தையும் அளிக்கும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே! எமது பாவங்களை மன்னித்துக் கிருபை செய்வாயாக! கொரோனா போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வபாத்தாகுபவர்களைப் பொருந்திக்கொள்வாயாக! அவர்களுக்கு ஷஹீதுகளுடைய பாக்கியத்தை வழங்குவாயாக! உயிருடன் உள்ளவர்களை இந்த நோயை விட்டும் பாதுகாப்பாயாக! எமது இறுதி முடிவை உனது பொருத்தத்துடன் அமைத்துத் தருவாயாக! ஆமீன்!

இவ்வண்ணம்,

தாரிக் மஹ்முத்,

தலைவர், தேசிய ஷூறா சபை

05.12.2020