அனைத்து நாடுகளும் காலநிலை குறித்த அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமா?

38

உலகிலுள்ள அனைத்து நாடுகளும் பருவ நிலை தொடர்பில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று ஐ.நா. செயலாளர் என்டோனியா உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸினால் உலகம் குலைநடுங்கிப் போயிருக்கும் இந்நிலையில் முழு உலகையும் அச்சுறுத்தக் கூடிய மிகப் பெரிய சவாலாக காலநிலை மாற்றம் இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்தப் பின்னணியிலேயே ஐ.நா. விடுத்துள்ள அறைகூவலைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் ஐந்தாண்டு நிறைவையொட்டி நடந்த உச்சிமாநாட்டிலேயே என்டோனியா இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல ஆசிய நாட்டுத் தலைவர்களும் இவ் உச்சிமாநாட்டில் பங்கேற்றிருந்தனர். 38 நாடுகள் ஏற்கனவே காலநிலை குறித்த அவசரகால நிலையைப் பிரகடனம் செய்துள்ளன. இதேபோன்ற அவசரகால நிலையை உலகிலுள்ள ஏனைய அனைத்து நாடுகளும் பிரகடனம் செய்ய வேண்டும் என்று உச்சிமாநாட்டில் தெரிவித்த ஐ.நா. செயலாளர், நியுற்றலிட்டி என்ற நிலையை எட்டும்வரை அவசர நிலை தொடர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, செல்வந்த நாடுகள் மீது சடுதியான காலநிலை மாற்றம் குறித்து கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. செல்வந்த நாடுகள் தமது கொரோனா மீட்பு நிதியிலிருந்து செலவுசெய்யும்போது காபன் குறைவாக வெளியிடும் ஆற்றல் முறைமைக்கு செலவிடுவதைப் போன்று பெற்றோலியம், நிலக்கரி போன்ற புதைவடிவ ஆற்றல் முறைக்கு 50 சதவீதம் அதிகம் செலவிடுவதாக என்டோனியோ அங்கு குற்றம் சாட்டினார். இவ்வாறு செலவு செய்யும்முறை எதிர்காலத் தலைமுறையிடமிருந்து கடன் வாங்கிச் செலவுசெய்வது போன்றதாகும் என அவர் தெரிவித்தார். பூமியை நாசமாக்கி எதிர்காலத் தலைமுறையை சுமையில் தள்ளும் கொள்கை முடிவுகளில் செல்வந்த நாடுகள் சிக்கியுள்ளன. பிரிட்டன், பிரான்ஸ், ஐ.நா. ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்தக் காலநிலை உச்சிமாநாட்டில் 70 உலகத் தலைவர்கள் உரையாற்றினர்.

இக்கூட்டத்தில் காபன் உமிழ்தலைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய இலக்குகள், திட்டங்களோடு ஒரு சில நாடுகளே வந்திருந்தன. இதிலுள்ள மிக எதிரிடையான விடயம் யாதெனில், அதிகளவில் வளிமண்டலத்தில் காபனைக் கலக்கும் நாடுகளின் பட்டியலில் இடம்பெறும் அவுஸ்திரேலியா, சவூதி அறேபியா, ரஷ்யா, மெக்சிகோ ஆகியவை இவ்வுச்சிமாநாட்டில் பங்கேற்கவில்லை. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் குறிப்பிட்ட இந்நாடுகளிடம் போதியளவில் இல்லை என்று கூறப்படுகின்றது.

வெளிநாடுகளில் புதை படிவ எரிபொருள் திட்டங்களுக்குச் செலவிடுவதை நிறுத்தப் போவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. அத்தோடு காலநிலை மாற்றம் தொடர்பான புதிய செயல்திட்டமொன்றையும் அந்நாடு ஐ.நா.விடம் கையளித்தது. பிரிட்டன் இவ்வாறு செய்வது இதுவே முதன் முறையாகும். ஏனெனில், அதன் காலநிலை மாற்றம் தொடர்பான பொறுப்புக்களை ஐரோப்பிய ஒன்றியமே வரையறுத்து வந்தது.

இணைய வழியாக நடைபெற்ற இம்மாநாடு ஒரு திருப்பம் என்ற போதிலும் முக்கிய நாடுகள் கலந்துகொள்ளாமையினால் இம்மாநாட்டின் எதிர்கால நடவடிக்கைகளின் நிச்சயத் தன்மை கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

கோவிட் 19 தொற்று தொடங்கி 12 மாதங்களில் இதற்குரிய தடுப்பூசி முதியோர்களின் கைகளில் போடப்படுவதாக அறிவிக்கப்படுகின்றது. அதனால் அறிவியல் ரீதியில் ஒரு நம்பிக்கையளிக்கும் ஆண்டாக 2020ஐக் கருதலாம் என பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசியபோது கொரோனாவை விட மோசமான, அதை விட அதிகம் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ஒரு சவாலுக்கு எதிராக நமது புவிக் கோளினை, உயிர்ச் சூழலைக் காப்பாற்றுவதற்கு அறிவியல் முன்னேற்றத்தை நாம் இணைந்து பயன்படுத்தலாம். எமது கண்டுபிடிப்பு ஆற்றலை புவி வெப்பமடைதல் என்ற பேரிடருக்கு எதிராக புவியைக் காப்பதற்கு நாம் பயன்படுத்தலாம்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு அடுத்த நாள் பரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை பதவி விலகிச் செல்லவுள்ள ட்ரம்ப் வெளியேற்றினார். இது காலநிலை மாற்றத்தை விட ஆபத்தானக் குறிகாட்டியாகக் கருதப்படுகின்றது. அமெரிக்காவின் தேசிய நிலைப்பாடு முற்போக்கானதாக இல்லை. எனினும், சில மாநிலத் தலைவர்கள் இம்மாநாட்டிற்கு தமது செயற் திட்டங்களை அனுப்பி வைத்துள்ளனர்.

மனிதர்களின் செயற்பாடுகள் காரணமாக காபனீரொட்சைட் வெளியேற்றம் அதிகரித்து அதனால் புவியின் வெப்பமும் அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து அசாதாரண வானிலை மாற்றம், துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பாறைகள் உருகுதல் உள்ளிட்ட மோசமான மாற்றங்கள் நிலவி வருகின்றன.

பூமியின் சராசரி வெப்பநிலை 150இ ஆனால் அது கடந்த காலங்களில் வேகமாக அதிகரித்து வருகின்றது. பருவ நிலையில் இயற்கையாகவே மாற்றங்கள் இருந்து வந்தாலும் சமீபத்திய ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமாக உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். சூரியனின் ஆற்றலில் குறிப்பிட்ட பங்கை பூமியின் வளிமண்டலம் எவ்வாறு உட்கிரகித்துக் கொள்கிறது என்பதை விளக்கும் பசுமை வீட்டு விளையத்துடன் இது இணைத்துப் பார்க்கப்படுகின்றது.