தமிழகத்தின் இளம் விஞ்ஞானி மாஷா நஸீம்

144

நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வாகவே ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் உருவாகின்றது. என்னைப் பொறுத்தவரை விஞ்ஞானிகள் மட்டுமே புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்க வேண்டும் என்றல்ல. அறிவியல் அனைவருக்குமானது. இவ்வாறு கூறுகிறார் மாஷா நஸீம்.

தென்னிந்தியாவின் கன்னியாக்குமரி மாவட்டம் நாகர் கோவிலைச் சேர்ந்த மாஷா நஸீம், ஓர் இளம் விஞ்ஞானி எனக் கருதப்படுகிறார். பள்ளிப் பருவத்திலிருந்து இவர் கண்டுபிடித்த பல கருவிகளுக்காக பல்வேறு விருதுகளை வென்று குவித்துள்ளார். தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்று கூறும் மாஷா, தனது முதல் கருவியை உருவாக்கும்போது அவருக்கு 9 வயது. குடும்பத்துடன் உணவு விடுதிக்குச் சாப்பிட சென்ற வேளை, கையை நீட்டினால் தண்ணீர் கொட்டும் குழாயைக் கண்ணுற்றார். அதன் மூலம் அவரது உள்ளத்தில் தோன்றிய ஒரு யோசனைதான் திருடர்களைச் சிக்க வைக்கும் வேர்க்ளப் அலாரம்.

எனது முதல் கண்டுபிடிப்பான வேர்க்ளப் அலாரம், எனது பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிக்காக நான் தயாரித்த முதல் கருவியாகும். உணவு விடுதிக்குச் சென்றபோது கையை நீட்டினால் தண்ணீர் கொட்டும் குழாய் போட்டோ இலக்ட்ரிக் இபக்ட் மூலம் செயல்படுகின்றது என என் தந்தை சொன்னார். அச்சமயத்தில் திருடர்கள் குறித்த செய்திகளை நான் அதிகம் கேட்டிருந்தேன். எனவே, இந்த போட்டோ இலக்ட்ரிக் இபெக்ட் மூலம் நாம் ஏன் ஒரு பேர்க்ளப் அலாரம் செய்யக் கூடாது என எனக்குத் தோன்றியது. இவ்வாறு தனது முதல் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் மாஷா நஸீன்.

“அந்தக் கண்டுபிடிப்பிற்காக பள்ளியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. அந்த சமயத்தில் நடனம், பாட்டு, விளையாட்டு  போன்ற துறைகளைத்தான் மாணவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அறிவியல் துறை பலராலும் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு துறையாகவே இருந்தது. எனவே, அதில் முதல் பரிசு கிடைத்தவுடன் அதுவே எனக்கு பெரும் உத்வேகத்தை அளித்தது” என தனது அறிவியல் பயணம் தொடங்கிய கதையை விளக்குகிறார் மாஷா.

அதன் பின்னர் பல போட்டிகளில் கலந்துகொண்ட மாஷா அடுத்தடுத்து தான் வடிவமைத்த கருவிகள் அனைத்தும் அவர் நேரில் கண்ட பிரச்சினைகளுக்குத் தீர்வாகவே கண்டுபிடிக்கப்பட்டது என்கிறார்.

மாவட்ட ரீதியான அறிவியல் கண்டுபிடிப்புப் போட்டியில் பங்குபெற ரயில் கழிப்பறை மாதிரியை உருவாக்கினார். இதன்மூலம் தண்டவாளங்களில் கழிவுகள் விழாமல் சேகரிக்கப்பட்டு சாக்கடையில் விடப்படும். இந்தக் கண்டுபிடிப்பால் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற 46 நாடுகள் கலந்துகொண்ட உலக கழிவறைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு அதில் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்கும் வாய்ப்பை மாஷா பெற்றார்.

இக்கண்டுபிடிப்பின் காரணமாக பல மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் ஆளுனர்களின் பாராட்டுக்களை இவர் பெற்றார். அப்போது இந்திய ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாமை சந்திக்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. இவரது மற்றொரு கண்டுபிடிப்பான நெருப்பின்றி சீல்வைக்கும் கருவியும் இவர் நேரில் பார்த்த ஒரு பிரச்சினைக்கான தீர்வு குறித்து யோசிக்கும்போதுதான்  உதயமாகியுள்ளது.

எனது தந்தையின் அலுவலகத்தில் சேமிப்பு அறைக்கு சீல்வைக்கும்போது அவருக்கு அரக்கு பட்டு தீப் புண் ஏற்பட்டதை நான் ஒருமுறை பார்த்தேன். இந்த அரக்கு முறை எனக்கு மிகவும் பழமையானதாகவும் சற்று கடினமானதாகவும் தோன்றியது. இதற்கு ஒரு நவீன முறை கண்டறியப்பட வேண்டும் என யோசித்தேன். இவர் கண்டுபிடித்த இந்த நெருப்பில்லாமல் மின் சாதனம் மூலம் அரக்கு சீல்வைக்கும் முறை கன்னியாக்குமரியில் நடைபெற்ற இரு தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டது. இதற்காக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கைகளால் தேசிய விருதையும் பெற்றார்.

இத்தனை பரிசுகளைப் பெற்றிருந்தாலும் தனது எந்தவொரு கண்டுபிடிப்புக்கும் முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைத்துவிடவில்லை என்கிறார் மாஷா. ஒரு போட்டியில் கலந்துகொண்டு எனக்கு பரிசு கிடைக்கவில்லை என்றால் நான் விட்டு விட மாட்டேன். அதில் என்ன குறை, அதை எப்படி மாற்றியமைப்பது என்று யோசித்து முயற்சிப்பேன். முயற்சியின் மீது நமக்கு நம்பிக்கை வேண்டும். அப்போதுதான் அடுத்தடுத்த கட்டத்திற்கு நாம் செல்ல முடியும் என்கிறார் அவர்.

தனது ஐந்து கண்டுபிடிப்புக்களுக்கு காப்புரிமை பெற்றுள்ள மாஷா, காப்புரிமை குறித்து தனது முதன் முதலில் விளக்கியவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் என்கிறார். இவ்வாறு பல்வேறு விருகளை வென்று குவித்துள்ள மாஷா, மாணவர்கள் மத்தியில் அறிவியலை ஊக்குவிக்கும் பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

‘மாஷா ஆக்கத்திறன் மையம்’ என்ற ஒன்றைத் தொடங்கி, பாடசாலை மாணவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புக்களில் ஆர்வம் செலுத்துவதற்கு அவர்களை ஊக்குவித்து வருகிறார். நெஷனல் இனோவேஷன் பவுண்டேஷன் என்ற தேசியளவிலான போட்டியில் இரண்டு முறை நான் பரிசு பெற்றேன். அதன் நிறுவனர் இரு முறை பரிசுகள் பெற்றுள்ளாய். நிறைய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியுள்ளாய். நீ ஏன் மாணவர்கள் மத்தியில் அறிவியல் குறித்து உத்வேகமளிக்கும் உரைகளை நிகழ்த்தக் கூடாது எனக் கேட்டார். அதன் பின்னர் பல கல்லூரிகளில் கண்டுபிடிப்புக்கள் என்பது எவ்வளவு எளிதானது என்பது குறித்து உரை நிகழ்த்தினேன் என்கிறார் மாஷா.

இவரது ஆக்கத்திறன் மையத்தில் பயிற்சி பெற்ற 7 மாணவர்கள் தேசிய விருதினை வென்றுள்ளனர். தனது ஆக்கத்திறன் மையத்தை நெஷனல் சென்டர் ஒப் எக்சலண்ட் ஆக மாற்ற வேண்டும் என்கிறார் மாஷா.

இந்த ஆக்கத்திறன் மூலம் அவர் ஆற்றிய சமூக சேவைகளுக்காக 2016 ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் மாநில இளைஞர் விருது மாஷாவுக்குக் கிடைத்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து இவ்விருதினை அவர் பெற்றார்.