விழுமியக் கல்வியும் இன நல்லிணக்கமும்

50

கலாநிதி றவூப் ஸெய்ன்

இன்றைய சர்வதேச கல்விச் செல்நெறிகளை நோக்கும்போது கல்வி தொழில்சந்தையை அடிப்படையாக வைத்தே வடிவமைக்கப்படுகின்றது என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். கல்விக் கொள்கையின் உள்ளடக்கமும் பொருளாதார நலன்களைக் கொண்டு வர வேண்டும். இல்லையேல் அதற்கேற்ப கல்விக் கொள்கையும் கலைத் திட்டமும் மீள வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் அபிவிருத்திக் கொள்கையாளர்களால் வலியுறுத்தப்படுகின்றது. இதன் விளைவாக, அறிவுப் பொருளாதாரம் எனும் புதிய சிந்தனை கல்வித் துறையில் இழையோடுவதைக் காணலாம். படித்தால் ஒரு தொழில். அதிக ஊதியத்தைப் பெற்றுத் தரும் தொழில். அதனையொட்டிய வாழ்க்கைத் தர மேம்பாடு. வீடு, வாகனம், உயர்ந்த வகை உல்லாசம் என பணம் பண்ணுவதே கல்வியின் கடைசிக்குறிக்கோளாக மாறியுள்ளது.

எவ்வாறு வாழ வேண்டும், சமூக முன்னேற்றத்திற்குப் பயங்களிக்க வேண்டும், சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும், நல்லிணக்கத்தோடு வாழ வேண்டும் என்ற சிந்தனைகளை மாணவர் மத்தியில் பதிப்பதற்கு இந்தக் கல்விமுறை தவறி விட்டது. இதனால்தான் பல்கலைக்கழகக் கல்வியை முடித்த கையோடு லண்டனுக்கு அல்லது டொரண்டோவுக்கு போவது எப்படி என்று எமது மாணவர்கள் சிந்திக்கின்றார்கள்.

வேறு வகையில் சொல்வதானால் கல்வி ஒரு கடைச் சரக்காக மாறிவிட்டதனால் சந்தையும் அமைதியின்மையுமே விஞ்சியுள்ளது. கல்வி பொருள் உடமையாகப் பார்க்கப்படுகின்றது. அதன் காரணமாக கல்வி ஞானத்தை உடமையாக்குவதைத் தூண்டுகின்றது. இவ்வாறு அதனை தனியுரிமைக் கோருவோரிடம் கல்வி தம்மிடம் உள்ளது என்ற செருக்கை ஏற்படுத்துகின்றது.

தனிநபர்களின் நிலைமை இதுவென்றால் நாடுகளுக்கிடையிலான நிலைமையும் இதுவாகவே உள்ளது. தற்போது சர்வதேச அரங்கில் நடக்கும் அறிவுச் சொத்துரிமை குறித்த (Intellectual Property) விவாதத்தை எடுத்துக் கொண்டால் இதுவே உண்மையாகும். சில நாடுகள் தம்மிடமுள்ள நவீன அறிவியல் தொழில்நுட்பத்தை உடைமையாக வைத்துள்ளன. அந்த அறிவியல் சொத்தை விற்பனைச் சரக்காப் பயன்படுத்தி செல்வமீட்ட முனைகின்றன. இதேபோல்தான் தனிநபரும் அறிவை செல்வமாகக் கருதி செயல்படுகின்றனர்.

தனது அறிவினால் தான் உயர்ந்தவன் பறைசாற்ற முயல்கின்றனர். இதனையும் தாண்டி அறிவை பிழையாகப் பிரயோகித்து ஆயுதங்களைக் கண்டுபிடிக்கின்றனர். சுற்றுச் சூழலை மாசுபடுகின்றனர். மிகப் பெரிய பொருளாதா ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கின்றனர். விளைவ என்ன?

இன்று 75 நாடுகளில் சிவில் யுத்தங்கள் நடக்கின்றன. ஓசோன் படையில் துளை விழுந்துள்ளது. புவி வெப்பமடைகின்றது. இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்துள்ளன. 748 கோடி மக்களிடம் இருக்கின்ற சொத்துக்களின் அளவு வெறும் எட்டுப் பேரிடமுள்ளது.

அறிவுச் சமூகம் என்று போற்றப்படுகின்ற இந்த யுகத்தில் மனிதர்களின் கண்ணியம் மனித சகோதரத்துவம் என்பன கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. மனிதன் அறிவுச் செழிப்பினால் அறிவின் அற்புதமான வளர்ச்சிகளை எட்டியுள்ளதாக கொக்கரிக்கின்றான். ஆனால், விஞ்ஞான, தொழில்நுட்ப ஆய்வுகள் மனித குலத்திற்கு வெளிப்படையான சில நன்மைகளை வழங்குகின்றபோதும், மனிதனின் உள்ளார்ந்த அமைதியை அது குலைந்து விட்டது. மனித உள்ளங்களில் தொலைந்த அமைதி சமூக வாழ்க்கையிலும் தொலைந்துபோயுள்ளது.

போட்டி, பூசல், இனங்களுக்கிடையிலான குரோதம், சமூகப் பகைமை என்பன வளர்ந்து இன்று போர்களாகவும் யுத்தங்களாகவும் வெடித்துள்ளதைப் பார்க்கலாம். அறிவின் பிழையான பிரயோகம் ஒரு புறம் அறிவை தனியுரிமை கொண்டாடுதல் இன்னொரு புறம் அறிவை பொருளாதாரக் கருவியாக மட்டும் கையாள்வது இன்னொரு புறம் என கல்வியின் ஒட்டுமொத்த இலக்கும் வேறு திசையில் சென்றுகொண்டிருக்கின்றது.

இதனால் இன்று அறிவின் நெருக்கடி (Crisis of Knowledge) பற்றிய விவாதம் மேற்கிளம்பியுள்ளது. இதற்கான மூல காரணம் விழுமிய அடிப்படையிலான கல்வி (Value Based Education) கவனத்திற் கொள்ளப்படாமையே.

எனவே, கல்வி என்பது மனித விழுமியங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதோடு, அனைத்து அறிவும் ஞானமும் ஒட்டுமொத்த மனித குலத்தின் உழைப்பின் வெளிப்பாடு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தனிநபரோ நாடுகளோடு தமக்கு உயர்வு கிடைக்கச் செய்ய, செல்வமீட்டப் பயன்படும் கருவியல்ல. மாறாக, அறிவு பொதுச் சொத்துரிமையாக அமைவதே உலக அமைதிக்கும் சமாதானத்திற்கும் வழிவகுக்கும்.

இன்னொரு புறம் உள்ளார்ந்த அமைதி மனித கண்ணியம், மனித சகோதரத்துவம், வேற்றுமையில் ஒற்றுமை, பல கருத்துக்களை ஏற்றுக்கொள்ளல், கலாச்சாரங்களுக்கிடையிலான தனித்துவங்களை ஏற்றல், பன்மைத்துவத்தை அங்கீகரித்தல், ஆன்மீக மேம்பாடு, வேறுபாடுகளை ஏற்றல், சமூக அபிவிருத்தி, பிறரை மதித்தல் போன்ற விழுமியங்களையும் எமது கலைத் திட்டம் உள்ளடக்க வேண்டும். அது மட்டுமன்றி சமூக சமத்துவம், சமூக நீதி ஆகிய பெறுமானங்களையும் கல்வியினூடாக வளர்த்தெடுக்க வேண்டும். அதன் மூலமே சமாதானத்திற்கான ஒரு கருவியாக கல்வியைப் பயன்படுத்த முடியும்.