வாஸ்கொடகாமா கள்ளிக்கோட்டையில் தரையிறங்கல்

147

போர்த்துக்கேய மன்னர் ஹென்றியின் கப்பல் பாசறையில் பயின்ற பிரபல நாடுகாண் பயணி வாஸ்கொடகாமா மூன்று கப்பல்களோடும் 160 படைவீரர்களோடும் மத்திய கிழக்குப் பகுதிக்கு சென்றுகொண்டிருந்த கப்பலொன்றை வழிமறிக்கும் நோக்கில் 1498 ஆம் ஆண்டு தன் பயணத்தை ஆரம்பித்தான். அவன் கள்ளிக் கோட்டைக்கு வடக்காக 6 மைல் தொலைவில் இருந்த கப்பாத் என்ற கிராமத்தை 1498 மே 17 இல் வந்தடைந்தான். வேறு சில வரலாற்றாசிரியர்கள் அவன் வந்தடைந்த திகதி மே 20, 1498 என்று குறித்துள்ளனர். (இந்தியன் எக்ஸ்பிரஸ்)

முதன் முறை அவன் இந்தியா வந்தபோது ஏராளமான செல்வங்களைச் சுருட்டிக் கொண்டு போர்த்துக்கல் திரும்பிய வேளை, மன்னன் ஹென்றி மட்டில்லா மகிழ்ச்சியடைந்தான். போர்த்துக்கேயர் வருகை அரசியல் ஆதிக்க விரிவாக்கம், பொருளாதார வளங்களை சூறையாடுதல் என்பவற்றைத் தாண்டி தமது மதத்தைப் பரப்புவதையும் நோக்காகக் கொண்டிருந்தது. இதனால் ஆசியா மீதான போர்த்துக்கேயரின் சுரண்டும் தாகம் மேலும் கிளர்ந்தது. இந்தியாவின் கரையோரப் பகுதியில் போர்த்துக்கேயர்கள் தம்மை வர்த்தக ரீதியில் நிலைப்படுத்திக் கொள்ள வாஸ்கொடகாமாவின் தொடக்கப் பயணம் வழியமைத்தது.

1502 ஆம் ஆண்டு வாஸ்கொடகாமா இந்தியக் கடற்பரப்பில் முஸ்லிம்களின் கப்பல்களை வழிமறிப்பதற்கு மீளவும் வருகை தந்தான். முஸ்லிம்கள் மக்காவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு கப்பல்களில் வருகை தருவதைக் கேள்விப்பட்ட அவன் 300 பயணிகளுடன் வந்த முஸ்லிம் கப்பலை இடைமறித்தான். அங்கிருந்த அனைவரும் கொல்லப்பட்டதோடு, அதிலிருந்த அனைத்து பெறுமதியான பொருட்களும் அவனது கப்பலுக்கு மாற்றப்பட்டதற்குப் பின்னர் முஸ்லிம்களின் கப்பல் தீ வைக்கப்பட்டது. (எக்னோலொஜிகல் சேவை)

1505 இல் போர்த்துக்கேயர் 9 போர்க் கப்பல்களோடு தென்னிந்தாயிவின் கொச்சின் பகுதிக்கு வந்தடைந்தனர். அங்கு இந்தோனேசியாவிலிருந்து ஹஜ் யாத்திரை மேற்கொண்ட முஸ்லிம்களின் கப்பல்களைத் தாக்கியழித்த பின்னர் மாலைதீவின் கரையை அடைந்தனர். ஆசியாவின் வர்த்தக நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதிலுள்ள கடினத்தை உணர்ந்த அவர்கள், கோவாவை கீழைத்தேய மத்திய நிலையமாக மாற்றியமைத்தனர்.

இதற்கிடையில் தென்கிழக்கு ஆசியாவில் வாசனைத்திரவியங்கள் விளையும் தீவுகள் சிலதையும் கைப்பற்றிக் கொண்டனர். வாஸ்கொடகாமா கிழக்காபிரிக்காவிலிருந்து தென்னிந்தியாவின் கள்ளிக்கோட்டையை அடைவதற்கு முஸ்லிம் புவியியலாளர் ஒருவரே வழிகாட்டியாய் இருந்தமை இன்னொரு வியப்புக்குரிய விடயமாகும். முஸ்லிம் புவியியலாளர் இப்னு மாஜித் அவர்கள் எழுதிய நூலொன்றே போர்த்துக்கேயரின் வழிகாட்டியாக இருந்துள்ளது.

இப்னு மாஜித் 16 ஆம் நூற்றாண்டில் புகழ்பூத்த முஸ்லிம் புவியியலாளராகவும் மாலுமியாகவும் விளங்கியவர். கடற்பாதைகள் பற்றிய விரிவான அறிவு அவரிடம் இருந்ததனால் அக்கால ஐரோப்பிய சிலர் அவரை கடற் சிங்கம் என்றே அழைத்தனர்;. இவர் கடற் பாதைகள் பற்றிய அறிவை மாத்திரமின்றி ஒவ்வொரு பருவத்திலும் காற்று வீசும் திசைகள் பற்றியும் அறிந்து வைத்திருந்தார். அவரது உலகப் புகழ்பெற்ற கிதாபுல் பfவாஇத் எனும் நூல் செங்கடலிலும் இந்து சமுத்திரத்திலும் பயணம் செய்வதற்கான கடற் பாதைகள் பற்றிய விரிவான விளக்கங்களைக் கொண்டுள்ளது. போர்த்துக்கேயருக்கு இந்து சமுத்திர கடற்பாதை குறித்து வழிகாட்டியமைக்காக பிற்காலத்தில் அவர் மனம் வருந்தியதாக வரலாற்றாசிரியர்கள் சிலர் எழுதியுள்ளனர்.

இந்திய கடற்பரப்பில் போர்த்துக்கேய கடற்கொள்ளையர்கள் என்ற நூலில் நம்பியார் எனும் ஆசிரியர் தெரிவிக்கும் ஒரு கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது. போர்த்துக்கேயர் தென்னிந்திய கரையோரங்களை அடைந்தவுடன் கொலைகளிலும் கொள்ளைகளிலும் ஈடுபட்டனர். அவ்வாறெனில், கோவாவில் அவர்கள் நிலைபெற்று தமது அதிகாரத்தை வலுப்படுத்திய பின்னர் என்ன செய்திருப்பார்கள் என்பதை நாம் ஊகிப்பது எளிதானது என்கிறார்.