போர்த்துக்கேயர் இலங்கை வருவதற்கு முன்னர் முஸ்லிம்களின் நிலை

145

இலங்கையின் நீண்ட வரலாற்றில் 16 ஆம் நூற்றாண்டு வரை ஏற்பட்ட வெளிநாட்டுப் படையெடுப்புக்களும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் அண்மைய ஆசிய நாடுகளிலிருந்தே இடம்பெற்றன. 16 ஆம் நூற்றாண்டிலேயே முதன் முதலில் ஐரோப்பியர் இலங்கையில் காலடி வைத்தனர். அன்று முதல் ஒரு புதிய அத்தியாயம் இலங்கை வரலாற்றில் ஆரம்பித்தது.

வாஸ்கொடகாமா இந்தியா வந்து சில ஆண்டுகளிலேயே இலங்கை பற்றி அறிந்துகொண்டான். இதனால் கறுவா, ஏலம், மிளகு மற்றும் பிற வாசனைத்திரவியங்கள் இங்குள்ளதை அறிந்துகொண்ட போது போர்த்துக்கேயரின் ஆர்வம் மேலிட்டது. இந்தோனேசியாவின் மலாக்கா, ஜாவா பிராந்தியங்களை நோக்கி போர்த்துக்கேய கப்பல்கள் படையெடுத்தபோது, இலங்கைத் தீவின் பக்கமும் அவர்களது கவனம் திரும்பியது.

போர்த்துக்கேய மன்னன் பிரான்ஸிஸ்கோ டி அல்மெய்தா ஆசியாவின் அரச பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து அனைத்தும் அசுர வேகத்தில் நடக்கத் தொடங்கியது. 1505 இல் பிரான்சிஸ்கோ டி அல்மெய்தாவின் மகன் லொரன்சோ டி அல்மெய்தா மாலைதீவையும் பின்னர் கொழும்பையும் வந்தடைந்தான். மலாக்காவில் வர்த்தக ஆதிக்கம் கொண்டிருந்த முஸ்லிம் வியாபாரிகளை அங்கிருந்து வெளியேற்றுவதே அவனது நோக்கமாக இருந்தது. இலங்கையின் வாசனைத் திரவியங்கள் முழுவதையும் தனது கைகளுக்குள் சுருட்டிக் கொள்ள அல்மெய்தா தகுந்த தருணத்தை எதிர்பார்த்து நின்றான்.

முன்னர் நாம் குறிப்பிட்டது போன்று போர்த்துக்கேயர் இலங்கை வருவதற்கு முன்னர் முஸ்லிம்கள் பொருளாதாரச் செழுமையும் பண்பாட்டு ஊடாட்டங்களும் கொண்ட ஒரு கௌரவமான சமூகமாக வாழ்ந்து வந்தனர். தலைமன்னார், புத்தளம், சிலாபம், மாந்தோட்டை, நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை, பேருவலை, மக்கொன, காலி, கிந்தோட்டை, வெலிகம, மாத்தறை, ஹம்பாந்தோட்டை போன்ற கரையோர நகரங்களில் முஸ்லிம்கள் மிகச் செறிவான குடியேற்றங்களைக் கொண்டிருந்தனர்.

கிழக்கில் அக்காலத்தில் மட்டக்களப்பு என அறியப்பட்ட சம்மாந்துறையிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்தனர். யாழ்ப்பாணம், உள்ளிட்ட வடக்குப் பகுதியிலும் முஸ்லிம்கள் வாழ்ந்தனர்.

கோட்டை இராஜ்ய காலத்தில் அவிசாவலை, மல்வானை போன்ற பிரதேசங்களிலும் முஸ்லிம் குடியிருப்புகள் இருந்தன. போர்த்துக்கேயர் இலங்கை வருவதற்கு முன்னர் கொழும்பின் பெரும் பாலான பகுதிகளில் முஸ்லிம்களே வாழ்ந்தனர். அப்போது அவர்களிடம் இரண்டு பள்ளிவாயல்களும் ஒரு பிரத்தியேக மையவாடியும் இருந்தது. அப்பள்ளிவாயலில் முஸ்லிம்களின் குடியிருப்புப் பற்றிய சிலாசனம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. அது பத்தாம் நூற்றாண்டுக்குரியது என வாமதேவன் என்பவர் தனது Story of Sri Lankan Muslim என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.

எச்.ஏ.ஜே. ஹுலுகல்ல, கொழும்பு முஸ்லிம்களின் குடியிருப்பு பற்றி பின்வருமாறு கூறுகின்றார். போர்த்துக்கேயர் ஆட்சியின் கீழ் முஸ்லிம் குடியிருப்புக்கள் கொழும்பின் ஒரு கோட்டை போன்று காணப்பட்டது. ஒல்லாந்தரின் ஆட்சியின்போது ஒரு மாநகரமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. முஸ்லிம்கள் கொழும்பில் அப்போது பெரும்பான்மையாக வாழ்ந்தனர். சிங்களவர்கள் கோட்டைப் பகுதிக்குள் மட்டும் சுருங்கியிருந்தனர். கோட்டை சிங்கள மக்களின் தலைநகராக விளங்கியது. களனி அவர்களது புனித நகரமாகக் கருதப்பட்டது. கொழும்பு இன்று அறியப்படுவது போன்றே ஒரு Muslim Quarter என்றே அழைக்கப்பட்டது.