கல்வித்துறையில் அரசியல் தலையீடும் தேசிய நல்லிணக்கமும்

82

கல்வி என்பது மிகுந்த ஆழமானதும் ஆய்வுபூர்வமானதும் முற்றிலும் வாண்மைசார்ந்ததுமான ஒரு துறையாகும். துரதிஷ்டமாக மூன்றாம் மண்டல நாடுகளில் கல்விக் கொள்கையை உருவாக்குவதிலும் கலைத் திட்டத்தை வடிவமைப்பதிலும் கல்வியைத் திட்டமிடுவதிலும் கல்வித் துறை சாராதோரே ஈடுபடுவதால் பன்மைப் பாங்கான நாடுகளில் கல்வியின் மூலம் தேசிய நல்லிணக்கம் என்ற கனவை நனவாக்க முடியாதுள்ளது.

கல்வி ஞானம் அற்ற வெறும் அரசியல்வாதிகள் தமது கட்சிகளின் நலன்களையும் இனத் தேசியவாதத்தைத் தூண்டி வாக்குகளை இலக்கு வைத்தும் கல்வியை அணுகும் ஒரு போக்கு மூன்றாம் மண்டல பன்மைத்துவ நாடுகளில் ஒரு பொதுப் போக்காக வளர்ந்து செல்வதை அவதானிக்கலாம். அவர்கள் கல்விக் கொள்கையையும் கலைத் திட்டத்தையும் அரசியல், வர்க்க நலன்கள் சார்ந்து வடிவமைக்க முயல்கின்றனர்.

இந்தியாவில் வலதுசாரி இந்துத்துவக் கட்சியான பிஜேபி அதிகாரத்திற்கு வந்தவுடன் செய்த முதல் வேலையே பாடத் திட்டத்தை மாற்றியமைத்ததுதான். குறிப்பாக, வரலாற்றுப் பாடத்தை அவர்களின் வசதிகளுக்கேற்றாற் போல திரித்து எழுதினர். முஸ்லிம்கள் வந்தார்கள், வென்றார்கள், சென்றார்கள் என்று அத்தியாயங்களுக்குத் தலைப்பிட்டனர். அதாவது, கஜ்னி முஹம்மத் படையெடுத்து வந்தார். கோவில்களிலிருந்த தங்கத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு வெளியேறினார் என்பதையே சுருக்கமாக இப்படிச் சொல்கிறார்கள்.

முகலாய ஆட்சியாளர்கள் இந்துக்களை ஏமாற்றியதான குறிப்புக்களையும் முஸ்லிம்களை கொலையாளிகளாகவும் ஆக்கிரமிப்பாளர்களாகவும் சித்தரிக்கும் குறிப்புக்களையும் திட்டமிட்டு பாடப் புத்தகத்தில் சேர்த்தனர். இந்து – முஸ்லிம் பகை முரண்பாட்டை எண்ணெய் ஊற்றி எரியச் செய்தால் அரசியல் ரீதியில் குளிர்காயலாம் என்பதை மனதில் நிறுத்திக் கொண்டே இந்துப் பெரும்பான்மையினரின் வாக்குகளால் அதிகாரத்தைத் தக்க வைப்பதற்கு இவ்வாறு பாடப் புத்தகங்களில் நஞ்சை விதைத்து மாணவர்களின் சிந்தனைகளை மாற்றுகின்றனர்.

இலங்கையின் வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் முஸ்லிம் விரோதத்தை வளர்க்கும் திட்டமிடப்பட்ட குறிப்புக்கள் புகுத்தப்படவில்லை. ஆயினும், ஆங்காங்கே முஸ்லிம்கள் பற்றிய பிழையான புரிதல்களை முஸ்லிம் அல்லாத மாணவர்களில் ஏற்படுத்தும் சில வரலாற்றுத் திரிபுகள் பாடப்புத்தகங்களில் இடம்பெறவே செய்கின்றன. உதாரணம், தரம் 10, வரலாறு பாடப் புத்தகத்தின் 50 ஆம் பக்கத்தில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.

“இஸ்லாம் சமயம் குறித்து கி.பி. 09 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரேயே தகவல்கள் கிடைக்கின்றன. கி.பி. 850 இல் சுலைமான் என்ற வர்த்தகர் ஆதமின் மலைக்கு ஏறியதாக ஒரு குறிப்பு உள்ளது. கொழும்பு மற்றும் மன்னார் போன்ற இடங்களில் முஸ்லிம் குடியிருப்புகள் இருந்து வந்தமைக்கான சான்றுகள் உள்ளன. இப்னு அபூபக்கர் என்ற முஸ்லிம் மதகுரு கி.பி. 948 அளவில் இங்கு வந்ததாகக் கருதப்படுகின்றது. 12 ஆம் 13 ஆம் நூற்றாண்டுகளில் கொழும்பு, பேருவளை, சிலாபம், மட்டக்களப்பு, வெலிகாமம், காலி போன்ற துறைமுகங்களில் முஸ்லிம்களின் வர்த்தக ஆதிக்கம் நிலவி வந்துள்ளது. அவர்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றினர். போர்த்துக்கேயர் பெருந்தொகையான பள்ளிவாயல்களை அழித்தமையால் அதிகளவிலான சான்றுகளைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.”

இப்பந்தியில் பல்வேறு கருத்துப் பிழைகளும் தகவல் பிழைகளும் உள்ளன.

  1. 9ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே தகவல்கள் கிடைக்கின்றன.
  2. சுமார் 13 ஆம் நூற்றாண்டில்தான் முஸ்லிம் குடியேற்றங்கள் நிகழ்ந்தது போன்று காட்டப்படுகின்றது.
  3. முஸ்லிம்கள் வாழ்ந்தனர் என்று குறிப்பிட்டு விட்டு அவர்கள் இஸ்லாம் மதத்தினை பின்பற்றினர் எனவும் கூறப்பட்டுள்ளது.
  4. இப்னு அபூ பகாயா என்பதற்குப் பதிலாக இப்னு அபூபக்கர் என்று எழுதப்பட்டுள்ளது.
  5. முஸ்லிம், இஸ்லாம், அறபு ஆகிய சொற்கள் எவற்றை உணர்த்துகின்றன என்பது தெளிவாக விளக்கப்படவில்லை. அது மாணவர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.