பிரஜைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும்.

190

நீதி அமைச்சு புதிய அரசியல் யாப்பிற்கான ஆலோசனைகளை பொதுமக்களிடம் கோரியுள்ளது. இலங்கை யின் அரசியல் யாப்பில் அத்தியாயம் 3இல் அடிப்படை மனித உரிமைகள் தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளது.

இப்பகுதியில் மத உரிமை, கருத்துச் சுதந்திரம், சித்திரவதைகளிலிருந்து சுதந்திரம், தன்னிச்சையாக கைதுசெய்யப்படுவதிலிருந்து சுதந்திம், பிரஜைகள் அனைவரும் சமமாக நடாத்தப்பட வேண்டும் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவை எமது யாப்பின் மிக அடிப்படையான விடயங்களாகும். யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மேற்குறித்த தனிமனித உரிமைகளை பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் கூட மாற்ற முடியாது. அது மாற்றப்பட வேண்டுமெனில் மக்கள் கருத்துக் கணிப்பிலும் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றே மாற்றப்பட வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுகின்ற சந்தர்ப்பத்தில் உயர் நீதி மன்றத்தில் நேரடியாக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யலாம்.

இவ்வாறு எமது யாப்பில் தனிமனித உரிமைகள் நிலைநாட்டப்படுதலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளமைக்கான காரணம் ஒவ்வொரு மனிதனதும் அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகும். அதேபோல் இந்த அடிப்படை உரிமைகளுக்கு பாதுகாப்பு, சுகாதாரம், போன்ற காரணங்களின் அடிப்படையில் சில வரையறைகளை கொண்டுவரவும் முடியும்.

ஆனால் தற்போது எமது நாட்டில் கொவிட் காரணமாக இறப்பவர்களின் முஸ்லிம் ஜனாஸாக்களை அவர்களது விருப்பத்திற்கு மாறாக பலவந்தமாக எரிப்பதானது அவர்களது தனிமனித உரிமை மீறலாகும்.ஏனெனில் உலக சுகாதார ஸ்தாபனம் மிகத் தெளிவாக கொவிட் பாதிப்பு காரணமாக இறப்பவர்களை உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பேணி அடக்கம் செய்ய முடியும் என வழிகாட்டியுள்ளது.

ஒரு நாட்டின் அரசியல் யாப்பை பேணுவதும், அந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதும் அந்த நாட்டு அரசாங்கத்தின் அடிப்படைக் கடமையாகும்.

இக்கடமை அரசாங்கத்திற்கு மாத்திரமன்றி அரசின் மூன்று கூறுகளான பாராளுமன்றம், நீதித்துறை, நிர்வாகத் துறை ஆகிய மூன்றிற்கும் உள்ளது.

எனவே இலங்கை அரசாங்கமானது முஸ்லிம்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் அவர்களது அடிப்படை உரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும். இது அரசாங்கத்தால் வழங்கப் படும் சலுகை அல்ல இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் நாட்டின் அடிப்படை சட்டமான அரசியல் யாப்பில் உறுப்படுத்தியுள்ள உரிமையாகும்.

புதிய அரசாங்கத்தினால் கொண்டு வரவிருக்கின்ற புதிய அரசியல் யாப்பிலும் பிரஜைகளின் அடிப்படை உரிமைகள் தற்போது இருப்பதை விட இன்னும் அதிகரிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.