சிறுபான்மைக் காப்பீட்டை அரசியலமைப்பில் உள்ளடக்குதல்- பகுதி 2 (Constitutional Accommodation of Minority Protection – Part 2)

45
  • சிராஜ் மஷ்ஹூர்

*அரசு, அரசாங்கம், அரசாங்கத்தின் அங்கங்கள், அரசியலமைப்பு ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பு.

அரசு (State) என்பதும் அரசாங்கம் (Government) என்பதும் ஒன்றல்ல. அரசின் ஓர் அங்கமே அரசாங்கம் ஆகும். அந்த வகையில், அரசானது உருவத்திலும் உள்ளடக்கத்திலும் அரசாங்கத்தை விடப் பெரியது. தெளிவுக்காக அரசு உயிர் போன்றது, அரசாங்கம் உடல் போன்றது எனலாம்.

அரசு என்பது,
1.இறைமை எனும் உச்ச அதிகாரம் (Sovereignty)
2.ஆள்புல எல்லை ( Territory – நீர், நில, ஆகாய எல்லை)
3. ஆளப்படும் மக்கள்/ சனத்தொகை (Population)
4.அரசாங்கம் (Government)
5.சர்வதேச அங்கீகாரம் (International Recognition)
6. அரசியல் அமைப்பு அல்லது சட்ட முறைகள் ( Constitution or Systems of Law)
போன்ற
போன்ற அம்சங்களை உள்ளடக்கி இருக்கிறது.

ஜனநாயக ஆட்சி முறையில், அரசு மாறாத் தன்மை கொண்டது- அரசாங்கம் மாறும் தன்மை கொண்டது. அரசு மாறாமல் நிலைத்திருக்கும் (Permanence), அரசாங்கம் அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கும் (Change) என்பதே இதன் விளக்கமாகும்.

அரசாங்கமானது அரசின் மிக முக்கியமான ஓர் அங்கம் என்பது வெளிப்படை உண்மை. அதேவேளை கோட்பாட்டு ரீதியாக, ஜனநாயக நாடொன்றில் மக்களே உச்சபட்ச அதிகாரம் மிக்கவர்கள். இதை மக்கள் இறைமை (Popular Sovereignty/ Sovereignty of the people) என்பர். மக்களிடமிடமிருந்தே அரசாங்கங்களுக்கு அதிகாரம் கிடைக்கிறது என்பதே ஜனநாயக ஆட்சி முறையின் அடிப்படையாகும்.

மக்கள் தமக்குள்ள அதிகாரத்தை,தேர்தல் மூலம் தாங்கள் தெரிவு செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு (People’s Representatives) கையளிக்கிறார்கள்.
மக்கள் இறைமை (Popular Soverignty) முற்றாக அல்ல, பகுதியளவே இங்கு கைமாற்றப்படுகிறது.

இவ்வாறான ஏற்பாட்டை பிரதிநிதித்துவ ஜனநாயக முறை (Representative Democracy) என்பர். ஆட்சிக் காலம் முடிந்ததும் மீண்டும் அந்த அதிகாரம் மக்களிடம் வந்தடைகிறது. அடுத்த தேர்தலில் அந்த அதிகாரத்தை, தாம் விரும்பும் பழைய அல்லது புதிய பிரதிநிதிகளிடம் மக்கள் மீண்டும் ஒப்படைக்கிறார்கள்.

குறிப்பிட்டதொரு கால இடைவெளியில்
(ஒவ்வொரு 4/5/6 வருடங்களுக்குப் பின்னர்) தேர்தல்கள் இடம்பெறும்.
இத்தேர்தல்கள் மூலம், மக்கள் தமக்கு விருப்பமான ஆட்சியாளர்களைத் தெரிவு செய்யலாம் அல்லது அவர்களை மாற்றி அமைக்கலாம். சர்வாதிகார ஆட்சி முறையிலிருந்து ஜனநாயக ஆட்சி முறை வேறுபடும் முக்கியமான இடங்களுள் ஒன்றாக தேர்தல்களைச் சுட்டிக் காட்டலாம். அந்த வகையில் சுதந்திர தேர்தல்கள், ஜனநாயகத்தின் மிக முக்கியமான பண்பாகும்.

பிரதிநிதித்துவ ஜனநாயக முறையில், அரசின் அதிகாரத்தை (கோட்பாட்டளவில் மக்கள் என்றிருந்தாலும்), நடைமுறை யதார்த்தத்தில் அரசாங்கமே பிரயோகிக்கிறது. இந்த வகையில்தான் அரசாங்கம் அதிக கவனத்திற்குரிய ஒன்றாக மாறுகிறது.

அரசாங்கம் என்பது,
1.சட்டவாக்கத் துறை (Legislature)
2. நிறைவேற்றுத் துறை (Executive Arm)
3.நீதித்துறை (Judiciary)
ஆகிய மூன்று பிரதான அங்கங்களை உள்ளடக்கியது.

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள இரண்டாம் குடியரசு யாப்பின் பிரகாரம் (1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு), பின்வரும் வகையிலேயே அரசாங்கத்தின் இந்த அங்கங்கள் இயங்குகின்றன.

1.பாராளுமன்றம், (வரையறுத்த அளவில்) மாகாண சபைகள் ஆகியன சட்டவாக்கத் துறையாகவும்,

2.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி, அமைச்சரவை, அமைச்சுகள் உள்ளிட்ட பொது நிர்வாக அலகுகள் நிறைவேற்றுத் துறையாகவும்,

3.உச்ச நீதிமன்றம், ஏனைய நீதிமன்றங்கள் உள்ளடங்கிய நீதித்துறைக் கட்டமைப்பு நீதித்துறையாகவும் விளங்குகின்றன.

அரசாங்கமொன்று சுமுகமாக இயங்குவதற்கு, இந்த மூன்று அங்கங்களும் அனாவசிய தலையீடுகள் இல்லாமல் சுயாதீனமாக இருக்க வேண்டும். இதனை வலு வேறாக்கம் (Separation of Power) என்பர்.
நடைமுறையில் நீதித்துறைச் சுயாதீனம் (Independent Judiciary) என்பது அதிகமதிகம் வலியுறுத்தப்படுவது இதனால்தான்.

அதேவேளை, இந்த அங்கங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடும் இடங்களும் அவசியப்படுகின்றன. இவ்வாறான நிலைமையை சமநிலைத் தலையீடுகள் (Checks & Balances) என அழைப்பர். அரசியலமைப்பானது வலு வேறாக்கத்தைக் கவனத்தில் கொண்டிருப்பது போலவே, சமநிலைத் தலையீடுகளையும் கருத்தில் கொண்டிருக்கும்

அரசொன்றை இயங்கச் செய்ய எப்படி அரசாங்கம் முக்கியமோ, அதேபோன்று அரசாங்கத்தை சீராக இயங்கச் செய்ய அரசியலமைப்பும் இன்றியமையாததாகும்.

ஒரு நாட்டை முறையாக நிர்வகித்து நடத்திச் செல்வதற்கான ஏற்பாட்டையும் முறைமைகளையும் வரையறைகளையும் அரசியலமைப்புகளே கொண்டுள்ளன என்பதுதான் அரசியலமைப்பின் சிறப்பியல்பாகும்.

இதேவேளை, அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள் என்ற விடயம் ஒவ்வொரு மனிதனுக்கும்/ பிரஜைக்கும் உள்ள பிரிக்க முடியாத மனித உரிமைகளை வலியுறுத்தி உத்தரவாதப்படுத்துகிறது. அத்தோடு அநீதியோ பாரபட்சமோ உரிமை மீறலோ ஏற்படக் கூடாது என்று மறுத்தும் நிற்கிறது. அரசியலமைப்பின் மிக இன்றியமையாத பகுதியாக, இந்த உரிமைகள் என்ற பகுதி அமைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசாங்க நடவடிக்கைகளின்போது மக்களுக்கு அநீதியோ பாரபட்சமோ ஏற்படுமாயின், இது போன்ற அரசியலமைப்பு உத்தரவாதங்கள் மற்றும் விசேட ஏற்பாடுகள் மூலம் உரிய பரிகாரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இங்குதான் அரசியலமைப்பில் சிறுபான்மைக் காப்பீட்டை உள்ளடக்குதல்/ அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்துதல் எனும் விடயம் முக்கியத்துவம் மிக்கதாக மாறுகிறது.

தொடரும்.