முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய பொருளாதாரப் பிரச்சினை

196

கொரோனா வைரஸ் இலங்கையைப் பாதிக்கும் முன்பே இந்த வருடத்தின் முதல் காலாண்டில்  இலங்கையின் பொருளாதார வளர்ச்சி  (மறை) -1.6 வீதம் ஆகக் காணப்பட்டது. இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி வீதம் (மறை) -16.3 வீதம் எனவும்  மூன்றாவது காலாண்டில் (நேர்) 1.5 வீதம் எனவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருட முடிவில் பொருளாதார வளர்ச்சி (மறை) -5 இற்கும் (மறை) -7 இற்கும் இடையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது 2003ம் ஆண்டிற்குப் பிறகு  எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மறைப் பெறுமானத்திற்கு சென்ற முதற் தடவையாகும்.

கடந்த மாதம் இலங்கையின் நீண்டகால கடன் மீளச் செலுத்துவதற்கான திறனை ஆய்வு செய்யும் பிfச் தரப்படுத்தலில் இலங்கையை CCC என்ற கட்டத்திற்கு தரமிறக்கியிருந்தது. இத் தரமிறக்கலானது இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மீளச் செலுத்தும் திறன் சவாலுக்குட்பட்டுள்ளது என்பதையே சுட்டிக்காட்டுகின்றது. இதன் காரணமாக எதிர்காலத்தில் இலங்கை வெளிநாட்டுக் கடன் பெறுவதை சிரமமாக்கியுள்ளதுடன் திறந்த சந்தையில் கடன் பெறும்போது அதிக வட்டி வீதத்திற்கு கடன் பெற வேண்டிய சூழலையும் உருவாக்கியுள்ளது.

2021 முதல் 2025 வரை அரசாங்கம்  மீளச் செலுத்த வேண்டியுள்ள கடன்தொகை 23.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையில் இத் தொகையானது மிகப் பெரியதொரு சவாலாகும்.

தற்போது நாட்டில்  காணப்படும் கொவிட் நிலைமை காரணமாக எமது நாட்டிற்கு பிரதானமாக அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தரும் சுற்றுலாத் துறை மற்றும் வெளிநாட்டு பணியாளர்களின் வரு மானம் ஆகிய இரண்டு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய கொவிட் நிலைமையானது மிக அண்மையில் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பது கடினமாகும்.

பொருளாதார மந்த நிலைமை காரணமாக அத்திய வசியப் பொருட்களின் விலை பொதுமக்களுக்கு ஈடுகொடுக்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது. நாட்டு மக்களில் பலர் தமது வருமான வழிகளை இழந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பானது மக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாகப் பாதித்துள்ளது.

இவ்வாறு நாட்டின் பொருளாதாரம், நாட்டு மக்களின் வாழ்வாதாரம் ஆகிய இரண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் அரசும் மக்களும் வேறு பிரச்சினைகளில் அதிக கவனத்தைச் செலுத்தி வருகின்றமை கவலையளிக்கின்றது.

முஸ்லிம் மக்களது ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை அரசாங்கம் வழங்காமை காரணமாக நாட்டில் தேவையற்ற பிரச்சினையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான கடுமையான பொருளாதார சவால்களுக்கு அரசாங்கம் முகங்கொடுத்துள்ள சந்தர்ப்பத்தில் சமூகங்களுக்கிடையில் பிரச்சினை ஏற்படாமல் அனைவரும் ஒற்றுமையாக முகங்கொடுப்பதன் மூலமே தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினையிலிருந்து எம்மால் ஓரளவுக்காவது மீள முடியும். இல்லாவிடின் நாட்டின் பொருளாதாரம் தற்போது இருப்பதைவிட மேலும் மோசமான நிலைமைக்குத் தள்ளப்படுவதற்கான வாய்ப்புக்களே உள்ளன. இந்நிலைமையானது நாட்டு மக்களில் ஒரு சாராரை மட்டுமல்லாது அனைவரையுமே பாதிப்பதாகவே அமையும்.