ரியாத் – இஸ்லாமாபாத் – அரசியல் பனிப்போர்: பின்னணியில் உள்ள காரணிகள் எவை?

192
  • முஷாஹித் அஹ்மத்

வேகமாக மாறி வரும் மத்திய கிழக்கு புவி அரசியல் சூழல் தெற்காசியாவின் அரசியலிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ரியாத் மற்றும் இஸ்லாமாபாத்திற்கு இடையிலான உராய்வுகள் பரஸ்பரம் இரு பிராந்தியங்கள் மீதும் தாக்கம் செலுத்தும் என எதிர்வுகூறப்படுகிறது.

இஸ்ரேலை அங்கீகரித்துள்ள ரியாத், இந்தியாவுடன் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் நோக்கம் கொண்டது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இஸ்ரேலின் நட்பு நாடான மோடியின் இந்தியாவுடன் முஹம்மத் பின் சல்மான் கைகோர்த்துச் செயற்படுவது அறபு இஸ்லாமிய உலகெங்கும் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, இரு பிராந்தியங்களையும் தழுவிய இரு முனைகளைத் தோற்றுவித்துள்ளது.

ஒரு முனையில் இஸ்ரேல் இந்தியா, மற்றும் சவூதி அறேபியா அணிதிரண்டுள்ள நிலையில் மறுமுனையில் துருக்கி, மலேசியா, ஈரான், சீனா, பாகிஸ்தான் என்பன அணிதிரண்டுள்ளன. பிராந்தியங்களின் வலுச் சமநிலையை இவ்விரு முனைகளும் எவ்வாறு பாதிக்கப் போகின்றது என்பதே இப்போதைய பேசுபொருளாகும். ஜனவரி 20 இல் ஜனநாயகக் கட்சி சார்பான ஜோ பைடன் ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள நிலையில், இத்தகைய அணிதிரளல் இடம்பெற்றுள்ளது.

சமீபகாலமாக பாகிஸ்தானுக்கும் சவூதி அறேபியாவுக்கும் இடையிலான ராஜதந்திர மற்றும் இராணுவ உறவுகள் மோசமடைந்து வருகின்றன. மத்திய கிழக்கில் பாகிஸ்தானுக்கான ஆதரவுத் தளத்தை ஒதுக்கி வைக்கும் வகையிலும் பொருளாதார ரீதியாக இஸ்லாமாபாத்தை முடக்கும் வகையிலும் ரியாத் ஆட்சியாளர்கள் பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

மத்திய கிழக்கு புவி அரசியலைத் தாண்டி இந்திய துணைக் கண்டத்தில் சியோனிஸ ஆதரவு மோடி அரசாங்கத்தைப் பலப்படுத்தும் வகையில் முஹம்மத் பின் சல்மானின் நகர்வுகள் அமைந்துள்ளன. 2019  ஓகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை தற்போது அதன் உச்சத்தைத் தொட்டுள்ளது.

இந்திய இராணுவத் தலைவர் மனோஜ் முகுந் நரவார் கடந்த மாதம் ரியாதுக்கு மேற்கொண்ட அதிரடி விஜயத்தை அடுத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் பாகிஸ்தான் குறித்த அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க எதிர்நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது. சவூதி அறேபியாவில் பணியாற்றி வந்த பல்லாயிரக்கணக்கான பாகிஸ்தானியர்களை ரியாத் வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.

2018 இல் ரியாத் இஸ்லாமாபாத்திற்கு வழங்கியிருந்த 6.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியில் அரைவாசியை அடுத்த மாதத்திற்கு முன்னர் செலுத்த வேண்டும் என்றும் சவூதி வேண்டியுள்ளது. சவூதியின் நேச நாடான, சர்வதேச இஸ்லாமாபோபியா தொழிற்துறைக்கு நிதியாதரவு வழங்கி வரும் அமீரகம், தனது நாட்டில் பணியாற்றும் பாகிஸ்தான் தொழிலாளர்களது விசாவை புதுப்பிப்பதில்லை என்ற தீர்மானத்தை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் ஏலவே பாரிய பொருளாதாரச் சரிவை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில், 2018 இல் 3.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலகு கடனாகவும் 3 பில்லியனை பெற்றோலிய இறக்குமதிக் கடனாகவும் பெற்றிருந்தது. இந்நிலையில் பொருளாதாரத்தில் திணறல் நிலையொன்றை எதிர்கொண்டுள்ள இஸ்லாமாபாத், கடனின் அரைவாசியை உடனடியாகத் திருப்பிச் செலுத்தல் சாத்தியமில்லை. இதற்கிடையில் மோடி அரசாங்கத்துடன் ஆயுத கொள்வனவு உடனபடிக்கையொன்றில் றியாத் ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஜெனரல் மனோஜ் முகுந்துக்கும் முஹம்மத் பின் சல்மானுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் உள்ளடக்கம் என்ன? அது குறைந்த பட்சம் அரச மாளிகைக்கு நெருக்கமான ஊடகங்களில் கூட வெளிவராதது ஏன்? வரலாற்றில் முதன் முறையாக இந்தியாவுடன் சவூதி இவ்வளவு தூரம் நெருங்கிப் போவதற்குக் காரணம் என்ன?

ட்ரம்பின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தியாவிடமிருந்து ஆயுதங்களையும் இராணுவ ஆலோசனைகளையும் பெறுவதற்கு றியாத் முயற்சிப்பதேன்? அதேவேளை, இராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இஸ்லாமிய உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடான பாகிஸ்தானை ஓரங்கட்ட விளைவதேன்?

இக்கேள்விகளுக்கான ஆய்வுபூர்வமான விடைகள் முழு இஸ்லாமிய உலகையும் திடுக்கிட வைக்கின்றது. அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றது. முழு உம்மத்தையும் கவலையில் மூழ்கடிக்கின்றது. இஸ்ரேலை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையை அசாதாரண சகிப்புடன் இஸ்லாமாபாத் ஏற்றுக்கொள்ள வேண்டும். துருக்கியுடன் கூட்டுச் சேர்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் நாம் உங்களை ஒழித்துக் கட்டுவோம் என்பது போலவே முஹம்மத் பின் சல்மானின் தீர்மானம் செயல்படுகின்றது.

2019 இல் குறிப்பாக ஓகஸ்ட் மாதத்தில் இந்திய அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காஷ்மீரின் சிறப்புரிமையை மோடி அரசாங்கம் ரத்துச் செய்ததோடு, பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு நிலங்களை வாங்க முடியும் என அறிவித்ததைத் அடுத்து பாகிஸ்தான் – இந்திய முறுகல் மென்மேலும் மோசம் அடைந்தது.

காஷ்மீர் பிரச்சினை குறித்து ஆராய்வதற்கு OIC யின் சிறப்பு உச்சிமாநாடொன்றைக் கூட்ட வேண்டும் என இம்ரான்கான் முஹம்மத் பின் சல்மானிடம் கோரிக்கை விடுத்திருந்தார். றியாத் அக்கோரிக்கையை அப்பட்டமாகவே நிராகரித்தது. ஆயினும், 2019 நவம்பர் 28 இல் அறபு நாட்டு வெளிவிவகார அமைச்சர்கள் சிலர் நைகரில் ஒன்றுகூடி காஷ்மீர் விவகாரம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை கடுமையாகக் கண்டனம் செய்தனர்.

2019 டிசம்பரில் துருக்கியும் மலேசியாவும் ஒன்றிணைந்து சமகால இஸ்லாமிய உலகம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் குறித்து ஆராய்வதற்கு சர்வதேச உச்சிமாநாடொன்றை கோளாலம்பூரில் ஏற்பாடு செய்திருந்தன. அதில் துருக்கி, மலேசியா, இந்தோனேசியா, கட்டார், ஈரான் போன்ற நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். காஷ்மீர் விவகாரம், அஸாம் மாநிலம் முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்பட்டமை, பலஸ்தீனில் இஸ்ரேலின் அத்துமீறல்கள் தொடர்பாக ஆராயப்பட்ட இம்மாநாட்டில் மலேசியப் பிரதமர் மஹாதிர் முஹம்மத் மற்றும் ரஜப் தையிப் அர்தூகான் ஆகியோர் இந்தியாவுக்கெதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இம்மாநாடு பாகிஸ்தானைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானது. ஆனால் இஸ்லாமாபாத் அதில் கலந்துகொள்ளவில்லை. கலந்துகொள்ள விடாமல் தடுத்தது முஹம்மத் பின் சல்மான் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இஸ்லாமாபாத் கலந்துகொண்டால் பாகிஸ்தானுக்கு எதிராக கடும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என முஹம்மத் பின் சல்மான் இம்ரான் கானைப் பயமுறுத்தினார். 6.2 பில்லியன் கடன் பெற்ற பாவத்திற்காக இஸ்லாமாபாத் உச்சிமாநாட்டைத் தவிர்ந்து கொண்டது.

இன்று இந்த அரசியல் காட்சி தலைகீழாக மாறியுள்ளது. இஸ்லாமாபாத் சவூதியினால் சகிக்க முடியாத துருக்கியுடன் இராணுவ ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. அதன்படி 30 T – 129 ரக தாக்குதல் திறன் கொண்ட ஹெலிகொப்டர்களை துருக்கியிடமிருந்து பாகிஸ்தான் கொள்வனவு செய்துள்ளது. பாகிஸ்தான் அங்காராவுடன் நெருங்கிச் செயல்படுவதை யூத சியோனிச ஆதரவாளரான முஹம்மத் பின் சல்மானினால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஏனெனில், இஸ்லாமிய உலகிற்கு தானே தலைமைத்துவம் வழங்கிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் சவூதி, துருக்கியின் வளர்ச்சியை அச்சத்தோடு பார்க்கின்றது.

இன்னொரு முனையில் தெற்கு, தென்கிழக்கு ஆசியா முழுவதும் அரசியல் செல்வாக்குப் பெற்று வரும் சீனாவின் பாதை வரைபடத் திட்டத்தில் பாகிஸ்தான் இணைந்துள்ளது. அதன் மூலம் 400 பில்லியன் அமெரிக்க டொலர் உதவி பாகிஸ்தானுக்குக் கிடைக்கின்றது. இந்தியா இஸ்ரேலின் நட்பு நாடு என்பதனாலும் சீனா இந்தியாவின் எதிரி நாடு என்பதனாலும் இஸ்லாமாபாத் சீனாவுடன் இணங்கிப் போவதை சியோனிச ஆதரவு றியாத் வரவேற்கவில்லை.

பாகிஸ்தான் தனது அரசியல், பொருளாதார உறவுகளை வலுப்படுத்தி வரும் அடுத்த நாடு தென்கிழக்கு ஆசியாவிலேயே வேகமாக வளர்ந்து வரும் மலேசியா. மலேசியாவின் முன்னணி கார் கம்பனிகளுள் ஒன்றான Proton பாகிஸ்தானில் கிளை ஆலையொன்றைத் திறந்துள்ளது. 2027 வாக்கில் 4 இலட்சம் கார்களை பாகிஸ்தானில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதற்கு மலேசியா எதிர்பார்க்கின்றது. மறுபுறம் ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்களுக்கு இதன் மூலம் தொழில் வாய்ப்புக் கிடைக்கும் என இஸ்லாமாபாத் எதிர்பார்க்கின்றது.

றியாதின் பரம எதிரியான தெஹ்ரானுடன் பாகிஸ்தான் கடந்த மாதம் கப்பல் போக்குவரத்தை ஆரம்பித்துள்ளது. பாகிஸ்தான் கவாதிர் துறைமுகம் மற்றும் ஈரானின் சவாஹர் துறைமுகங்களுக்கிடையிலான கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டமை வரலாற்றில் இதுவே முதன் முறையாகும். இரு நாடுகளினதும் பகுதியளவிலான பொருளாதார வளர்ச்சிக்கு இது புத்துயிரளிக்கும் என்று தெஹ்ரானும் இஸ்லாமாபாதும் நம்புகின்றன.

ஆக, பாகிஸ்தான் இணைந்துள்ள புதிய கூட்டணி சவூதி ஆட்சியாளர்களுக்கு பெரும் மனஉளைச்சலைத் தந்துள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மத்தியிலேயே கட்டாரை ஒதிக்கி வைக்குமாறும் இஸ்ரேலை அங்கீகரிக்குமாறும் அறபு நாடுகளின் மரமண்டை ஆட்சியாளர்களை ஊக்குவித்து வந்த ட்ரம்ப் ஜனவரி 20 இல் வெள்ளை மாளிகையிலிருந்து ஒதுங்கிச் செல்கிறார்.

மத்திய கிழக்கில் இரு நாட்டுத் தீர்வுக்கு ஆதரவான ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார். இந்த மாறும் அரசியல் சூழமைவு யஹூதி ஆதரவு சவூதியர்களுக்கு கலக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பிராந்தியங்களின் வலுச் சமநிலையில் இப்புதிய அணியின் பலம் ஒழுக்க ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இஸ்ரேல், இந்தியா, சவூதி கூட்டணியை விட கனதியாகவே உள்ளது.

முஸ்லிம் உலகை, குறிப்பாக பலஸ்தீனர்களை யூதர்களுக்குக் காட்டிக் கொடுத்து முஸ்லிம் உம்மாவின் முதுகில் குத்திய றியாத், இஸ்லாமாபாத்தின் புதிய நகர்வுகளைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. முஸ்லிம்களின் புனித நகரங்களான மக்காவும் மதீனாவும் சவூதியுடன் இணைக்கப்பட்டிருப்பதனால் அந்நாட்டை முஸ்லிம்களின் ஆன்மீகத் தலைவாசல் என்றும் நாமே முஸ்லிம் உலகின் தலைமை என்றும் காட்டிக் கொண்டுள்ள றியாத், இஸ்லாமாபாத்தை குறிப்பிட்ட சில புள்ளிகளைத் தாண்டி ஓரங்கட்ட முடியாது என்பதே யதார்த்தம் ஆகும்.

இரண்டு காரணங்களுக்காக இஸ்லாமிய உலகில் பாகிஸ்தான் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்தேனேசியாவுக்கு அடுத்ததாக முஸ்லிம் சனத்தொகையை அதிகம் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது. அதேவேளை, 56 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளிலும் அணுவாயுதப் பலம் கொண்ட ஒரேயொரு நாடாக பாகிஸ்தானே விளங்குகின்றது.

130 கோடி மக்களைக் கொண்ட பிரமாண்டமான இந்தியா வெறும் 18 கோடி மக்களைக் கொண்ட பாகிஸ்தானுக்கு அஞ்சுகின்றது என்றால், பிராந்திய இராணுவச் சமநிலையில் இந்தியா பாகிஸ்தானை விஞ்ச முடியாது என்றால் அதன் கையிருப்பிலுள்ள அணுவாயுதப் பலமே அதற்கான காரணமாகும்.

இஸ்லாமாபாதை றியாத் தனது இந்துத்துவ, சியோனிஸ விசுவாசத்திற்காக முற்றிலும் ஒதுக்கி வைக்க முடியாது என்பதற்கு மூன்றாவதாகவும் ஒரு நியாயம் உள்ளது. அது பாகிஸ்தான் மூலம் வருடாந்தம் சவூதி அறேபியா பெறும் அந்நியச் செலாவணியாகும். வருடாந்தம் 250,000 பாகிஸ்தானியர்கள் ஹஜ்ஜுக்குச் செல்கின்றனர். 600,000 பேர் உம்ராவுக்குச் செல்கின்றனர். இன்றுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் இதன் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணியை இழப்பதற்கு றியாத் ஒருபோதும் விரும்பாது.

ஆக றியாத், இஸ்லாமாபாத் பனிப்போரினால் ஒப்பீட்டு ரீதியில் பல பாதகமான விளைவுகளை சந்திக்கப் போவது சவூதி ஆட்சியாளர்களே என்பது வெளிப்படை. வரலாற்றில் அநியாயத்திற்கும் ஆக்கிரமிப்பிற்கும் துணை போன எந்த நாடும் நிலைத்து நின்றதில்லை. இந்தப் பாடத்தை சவூதி ஆட்சியாளர்கள் கற்பதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை.