போர்த்துக்கேயரின் வருகையின்போது முஸ்லிம்களின் அரசியல், பொருளாதார, சமூக நிலையை ஓரளவு நோக்கினோம். ஏற்கனவே விபரிக்கப்பட்டது போன்று இக்காலப் பிரிவில் இலங்கையின் கரையோரப் பகுதிகளில் முஸ்லிம்கள் மிகச் செறிவான குடியேற்றங்களை ஏற்படுத்தி, வணிகத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இம்முஸ்லிம் குடியேற்றங்களின் பொருளாதார செழிப்பிற்கு அவர்களது கையிலிருந்த ஏற்றுமதி இறக்குமதி வணிகமும் அதன் விநியோகமும் அடிப்படைக் காரணமாக அமைந்தது.
உள்நாட்டு வணிகத்திலும் முஸ்லிம்கள் ஈடுபட்டனர். கண்டி இராச்சியம் சுதந்திர இராச்சியமாக செயல்பட ஆரம்பித்ததும் முஸ்லிம் வியாபாரிகள் புத்தளம், திருகோணமலை, கொட்டியாரம், மட்டக்களப்பு ஆகிய இடங்களிலிருந்து தங்களது இறக்குமதிப் பொருட்களை மத்திய மலைநாட்டிற்குப் பரிமாற்றம் செய்தனர். முஸ்லிம் வணிகர்கள் கரையோரத் துறைமுகங்களிலிருந்து உள்நாட்டிற்கு வணிகப் பொருட்களை சுமந்து செல்ல தவளம் எனும் மந்தைப் பொதிகளைப் பயன்படுத்தினர்.
எருதுகளை ஒன்றோடு ஒன்று பிணைத்து அவற்றின் முதுகுகளில் பெருந்தொகை வியாபாரச் சரக்குகளை ஏற்றிக் கொண்டு பல நாட்கள் பயணித்து நீண்ட தூரத்தை அடைவதே தவளம் முறை எனப்படுகின்றது.
பி.ஜே. பெரேரா தனது பண்டைய இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகமும் வியாபாரமும் எனும் நூலில் 198 ஆம் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “கொழும்பு, புத்தளம், மன்னார் பகுதிகளிலும், யாழ்ப்பாண துறைமுக நகரிலும் போர்த்துக்கேயர் வருகைக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே முஸ்லிம்கள் செறிவாகக் குடியிருந்தனர். மேற்குறிப்பிட்ட நகரங்களில் அவர்களது செல்வாக்கே ஓங்கியிருந்தது.
கோட்டை இராச்சியத்தின் தோற்றத்திற்கு முன்னரேயே சில துறைமுக நகரங்கள் முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தன. சிங்களத் தலைநகரங்களில் கூட முஸ்லிம்கள் பள்ளிகளைக் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
குப்லாய்க் கானின் அரச மாளிகையிலிருந்து திரும்பும் வழியில் சீனாவின் திரவியங்களைச் சுமந்து கொண்டு Marignolli (1329–1349) இலங்கையைத் தரசித்தபோது கொழும்பில் முஸ்லிம்கள் அவரை ஒரு ஐரோப்பியர் என தவறாக நினைத்து அவரைக் கைதுசெய்து அவரிடம் காணப்பட்ட செல்வங்களையும் பறிமுதல் செய்தனர். அப்போது கொழும்பை முஸ்லிம்கள்தான் கட்டுப்படுத்தி வந்தனர். மெரிக்நொல்லி கொழும்பை முஸ்லிம்களின் தனியாதிக்கத்திலிருந்த ஒரு நகராகவே குறிப்பிடுகின்றார். அதேவேளை, அங்கு பௌத்த மற்றும் கிறிஸ்தவ மக்களையும் கண்டதாகக் குறித்துள்ளார்.
மார்க்கோபோலோ இலங்கை வந்து சுமார் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் மெரிக்நொல்லி இலங்கையைத் தரிசித்துள்ளார். 13 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் 14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும் கொழும்பில் முஸ்லிம்கள் அங்கீகாரம் பெற்ற கௌரவமான மக்கள் சமூகமாக வாழ்ந்துள்ளனர் என்பதையே இது காட்டுகின்றது.
மொரோக்கோவின் பிரபல நாடுகாண் பயணியும் மானிடப் புவியியலாளரும் பண்பாட்டு மானிடவியலாளரும் உலகப் புகழ்பெற்ற தேச சஞ்சாரியுமான இப்னு பதூதா (கி.பி. 1344) தனது ரிஹ்லா என்ற பயண அனுபவ நூலில், கொழும்பை ‘கலன்பூ’ என வர்ணிக்கின்றார். அவர் கொழும்பை தரிசித்தபோது அது முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிலும் ஆதிக்கத்திலும் இருந்ததை பின்வருமாறு வர்ணிக்கின்றார்.
அங்கு 500 அபீசீனியர்கள் இருந்தனர். தீவின் இந்தத் துறைமுகத்தில் இடம்பெற்ற வணிகம் முழுவதும் ஜலஸ்தி எனப்படும் அறேபியர் ஒருவரின் ஆட்சியின் கீழிருந்தது. 500 குதிரைப் படைகளுடனான கோட்டை ஒன்றுடன் அவன் கொழும்பு நகரைக் கட்டுப்படுத்தினான்.