யாப்பின் மூலம் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள் பாதுகாப்பட வேண்டும்

150

2019 நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இத்தேர்தலில் பெரும்பான்மை சிங்கள மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது காணப்பட்ட வெறுப்புக் காரணமாக மிக அதிகளவு வாக்குகளை தற்போதைய ஜனாதிபதிக்கே வழங்கியிருந்தனர். இதனை ஜனாதிபதி அவர்களும் தமது பதவியேற்பு வைபவத்தில் குறிப்பிட்டுக் கூறினார்.

அதேபோல் 2020ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் தற்போதைய ஆளும் கட்சி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு ஆசனங்களுக்கு ஓரிரண்டு ஆசனங்களையே குறைவாகப் பெற்றனர். இந்தத் தேர்தலிலும் பெரும்பான்மை சிங்கள மக்கள் அதிகளவான வாக்குகளை தற்போதைய ஆளுங் கட்சிக்கே வழங்கினர்.

ஒரு அரசாங்கமானது ஆட்சிக்கு வந்த பின்னர் அவ் அரசாங்கமானது அவர்களுக்கு வாக்களித்தவர்களுக்கு மாத்திரமான அரசாங்கமல்ல. அது நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்குமான அரசாங்கமாகும்.

எனவே அரசாங்கம் அனைத்து மக்களையும் சமமாக நடாத்த வேண்டும். அனைத்து இனங்களதும் அரசியல் யாப்பினால் பாதுகாப்பட்ட உரிமைகளை வழங்குவது அவ் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

தற்போது இலங்கையில் கொவிட் காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பது முஸ்லிம் சமூகத்தை அதிகளவு மானசீகமாக பாதித்துள்ளது. இதற்கு எதிராக அவர்கள் சாத்வீகமாக குரலெழுப்பி வருகின்றனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களுக்கு மாறாக ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதானது முஸ்லிம்களது அடிப்படை உரிமையை மீறும் செயலாகும். அன்மையில் வெளியிடப்பட்ட இந்திய  நீதிமன்றத் தீர்ப்பொன்றில் ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்பது அவர் இறந்த பிறகும் நீடிக்கக்கூடியது எனக் கூறியுள்ளது.

தற்போது அராசங்கத்தினால் இறுதியாக நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவின் அறிக்கையின்படி கொவிட் காரணமாக இறப்பவர்களை அடக்கம் செய்வதற்கு மற்றும் எரிப்பதற்கு அனுமதி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொவிட் ஜனாஸாக்களை எரிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் இது தொடர்பாக முடிவெடுப்பது அமைச்சரவையன்றி நிபுணத்துவ குழுவே என்று கூறப்பட்டது.

தற்போது நிபுணத்துவ குழுவின் அறிக்கைப்படி இவை இரண்டிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அரசாங்கம் உடனடியாக இது தொடர்பான புதிய வர்த்த மானியை வெளியிட்டு முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான அடிப்படை உரிமையை நிலைநாட்ட வேண்டும்.

நாடு பொருளாதார ரீதியாக வரலாற்றில் இல்லாதளவு வீழ்ச்சியடைந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் இவ்வா றான பிரச்சினைகளை இனங்களுக்கு மத்தியில் ஏற்படுத்தாமல் அனைத்து இனங்களும் நாம் இலங்கையர் இது எமது நாடு என்று பெருமையாகக் கூறக்கூடிய வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் மாத்திரமே நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினையிலிருந்து மீண்டு வரமுடியும்.