சமூக தலைமைக்கு கட்டுப்படுதல் என்பதற்கு வரையறைகள் உண்டா?

258
  • முஹம்மத் பகீஹுத்தீன்

இஸ்லாமிய சட்ட ப்பரப்பில் தலைமைக்கு ‘கட்டுப்படுதல்’ என்ற கருத்தியலுக்கான வரையறைகள் யாது என்ற வினாவிற்கு இந்தக் கட்டுரை விடை தேடுகிறது. மேலும் தலைமை விடும் தவறுகள் குறித்த சுதந்திரமான கருத்தாடல்கள், பண்பாடான விமர்சனங்கள், நவீன கால உக்திகளைப் பயன்படுத்தி மக்கள் முன்வைக்கும் கருத்து வெளிப்பாடுகள் தலைமைக்கு எதிரான நடவடிக்கைகளா என்பதையும் இவ்வாக்கம் ஆராய்கிறது.

‘இறைவிசுவாசிகளே அல்லாஹ்விற்கு கட்டுப்படுங்கள். அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். உங்கள் சமூகத் தலைமைகளுக்கும் கட்டுப்படுங்கள். (தலைமைக்கும் மக்களுக்கும் மத்தியில்) ஏதாவது முரண்பாடுகள் ஏற்பட்டால் அதில் தீர்வு காண்பதற்கு நீங்கள் அதனை அல்லாஹ்விடத்திலும் தூதரிடத்திலும் கொண்டு செல்லுங்கள்.’ (சூரா நிஸா:59)

இந்த வசனம் அல்லாஹ்வுக்கும் ரஸுலுக்கும் முற்று முழுதாக கட்டுப்படுவது போன்று சமூக தலைமைக்கும் கட்டுப்படுவது கடமை என்ற நிலைப்பாட்டை மறுதளிக்கின்றது.

காராணம் ‘அதீஊ’ என்ற கட்டுப்படுங்கள் என்ற வார்த்தையை இரண்டு முறை பயன்படுத்தி அல்குர்ஆன் மூன்றாவதாக சமூகத் தலைமைக்கு கட்டுப்படுங்கள் என்று கூறும் போது மீண்டும் அந்த வார்த்தையை கூறவில்லை. அதன் பொருள் சமூகத் தலைமைக்கு மக்கள் கட்டுப்படுதல் என்பது கட்டாயம் இருக்க வேண்டிய பண்பாகும். சமூகத்தில் நீதி நிலைபெறுவதற்கு அந்தக் கட்டுப்பாடு அவசியம் என்பதை இந்த வசனம் விளக்குகிறது.

ஆனால் அது அல்லாஹ்விற்கு கட்டுப்படுவது போன்று முற்றுமுழுதான கட்டுப்பாடு அல்ல. உண்மையில் அல்லாஹ்வோடும் இறை தூதரோடும் கட்டுப்படுவதில் மக்கள் ஒரு போதும் கருத்து முரண்பாடு கொள்வதில்லை. இறைவனுக்கு கட்டுப்படுவதும் இறை தூதரை அச்சொட்டாக பின்பற்றி வழிப்படுவதும் ஈமான் கொண்டவர்களின் கடப்பாடாகும். ஆனால் சமூகத் தலைமைகளுடன் முரண்பாடுகள், பிரச்சினைகள் ஏற்பட முடியும். அது இயல்பானது. கட்டுப்படுதல் என்பதில் அதனை கோளாறு என பார்க்க முடியாது என்பதையே இறை வழிகாட்டல் சுட்டிக் காட்டுகிறது.

காரணம் அந்த வசனம் சமூகத் தலைமைக்கு கட்டுப்படுங்கள் என்று ஏவியதன் பிறகு ‘நீங்கள் முரண்பட்டுக் கொண்டால்’ என ஆரம்பிக்கின்றது. இதன் பொருள் மக்களுக்கும் தலைமைக்கும் மத்தியில் பிணக்குகள், சச்சரவுக்ள, பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள் எழும்புவது இயல்பானது என்பதை அல்குர்ஆன் அங்கீகரிக்கிறது.

அப்படி பிரச்சினைகள் வந்தால் அதற்கு ஒரு சுயாதீனமான நீதி சபை இருக்க வேண்டும். அந்த நீதி சபை பக்கச்  சார்பின்றி சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பிரச்சினைகளை அணுக வேண்டும் என்பதற்காகவே அதனை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் கொண்டு செல்லுங்கள் என வழிகாட்டுகிறது. அது சிறந்த முடிவையும் தரும் என அந்த வசனம் உறுதி செய்கிறது.

எனவே அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் முற்றுமுழுதாக கட்டுப்படுவது வாஜிபாகும் என்பதில் அறிஞர்கள்களுக்கு மத்தியல் கருத்துவேறுபாடு கிடையவே கிடையாது.

அவ்வாறே ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும் பாவமல்லாத விடயத்தில் சமூகத் தலைமைக்கு கட்டுப்படுவது வாஜிப் என்பதும் இஸ்லாமிய சட்டப்பரப்பின் தீர்க்கமான கருத்தாகும்.

எனவே சமூகத் தலைமகளுக்கு கட்டுப்படுதல் என்பது ‘நன்மையான விவகாரங்களில்’ மாத்திரம் என்ற வரையறையுடனே அவர்களுக்கான கட்டுப்படுதலை இஸ்லமிய சட்டஒழுங்கு விளக்கியுள்ளது. பாவமான காரியங்களில் தலைமக்கு கட்டுப்படுதல் ஆகாது என்பதே இஸ்லாத்தின் அடிப்படையாகும்.

பாவமான விவகாரங்களில் தலைமைக்கு கட்டுப்படுதல் தடுக்கப்பட்டுள்ளது.

சமூகத் தலைமைகளின் கட்டளைகள் பாவமானா காரியங்களில் இருந்தால் ‘கீழ்படிதல்’ ஹராம் என்பது இஸ்லாமிய சட்டத்தின் தீர்க்கமான முடிவாகும். இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘பாவமான விவகாரங்களில் கட்டுப்படுதல் என்பது இல்லை. கட்டுப்படுதல் என்பது மார்க்கம் ஆகுமாக்கிய விவகாரங்களில் மாத்திரமே உண்டு’ (புகாரி)

சமூகத் தலைமைகள்; இஸ்லாமிய நெறி முறைகளுக்கு புறம்பான நிலைப்பாடுகளை எடுக்கும் போது அவர்களுக்கு கட்டுப்படக் கூடாது என்பதே இஸ்லாமிய சட்டத்தின் வரம்பாகும். இதனை எதிர் மறையான அணுகுமுறை என்றோ அல்லது எதிமறை மனப்பாங்கை ஊக்குவித்தல் என்றோ அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. மாறாக சமூகத்; தலைமைகளின் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு முரணான நிலைப்பாடுகளை அல்லது நீதிக்கு புறம்பான நடவடிக்கைகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்ற வழிகாட்டலாகவே மனம் கொள்ள வேண்டும்.

தவறுகளை சுட்டுவது வணக்கமாகும்

சமூகத் தலைமைகளுக்கு ‘நல்லுபதேசம் செய்வது’ கட்டுப்படுதல் என்ற சிந்தனைக்கு முரணானது அல்ல. மாறாக அது ஒரு வணக்கமாகும். ‘மார்க்கம் என்பது உபதேசமாகும்’ என்ற ஹதீஸில், பொதுமக்களுக்கு உபதேசம் செய்வதை விடவும் சமூகத் தலைமைகளுக்கு உபதேசம் செய்வதை நபிகளார் முற்படுத்தி கூறியுள்ளமை கவனிக்கத்தக்கது .

இங்கு உபதேசம் செய்தல் என்பது நன்மையை ஏவி தீமையை தடுத்தல் என்ற வட்டத்தில் வரும் பாரிய சீர்திருத்தப்பணியை சுட்டுகிறது. உபதேசம் செய்தல் என்பதை அந்த விரிந்த கருத்தில் நோக்கத் தவறும் போது இஸ்லாமிய சட்ட வழிகாட்டலையே பிழையாக புரிந்து கொள்ளும் தவறு ஏற்படும்.

சமூகத் தலைமைகளின் தவறுகளை சுட்டிக் காட்டுவது, விமர்சிப்பது ‘கட்டுப்படுதல்’ என்ற வட்டதிற்கு வெளியில் உள்ள செயற்பாடு அல்ல. அது கீழ்ப்படிதல் என்ற அடிப்படை வேண்டி நிற்கும் ஒரு செயலாகும். சிலபோது சுட்டுவிரல் மொட்டு விரிக்கும் போது சிம்மாசன நோய் தொற்றியுள்ள தலைமைகளுக்கு காயம் ஏற்படலாம். அதற்காக நாம் சுட்டுவிரலை நோக முடியாது. அப்படி நொந்து கொள்வதை குர்ஆனிய வழிகாட்டல் மறுதளிக்கிறது.

தவறுகளை சுட்டிக்காட்டும் அணுகுமுறை

சமூகத் தலைமைகளின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஒழுங்கு கண்ணியமான முறையில் இருக்க வேண்டும். வார்த்தைப் பிரயோகங்கள் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் அமையக் கூடாது. குறிப்பாக தவறை சுற்றும் போது அது தனிமையில் அமைய வேண்டும் என்பது இஸ்லாமிய போதனையாகும். நாலுபேர் முன்னிலையில் சந்தி சந்தியாக நின்று பகிரங்கமாக கீறிக் கிழிப்பது இஸ்லாமிய பண்பாடுமல்ல, மனிதநேயமும் அல்ல.

‘யார் ஒரு ஆட்சியாளனுக்கு நல்லுபதேசம் செய்ய விரும்புகிறாறோ அவர் அதனை பகிரங்கமாக செய்யாதிருக்கட்டும். உபதேசம் செய்ய விரும்புபவர் அதிகாரியின் கையைப் பிடித்து யாருமில்லாத வகையில் தனிமையில் அழைத்து அந்த உபதேசத்தை செய்யட்டும். அவர் அதனை ஏற்றுக் கொண்டால் சரி. இல்லாவிட்டால் அவர் தனது கடமையை நிறைவேற்றியவராவார்’ (அதாரம்: ஹாகிம் 5269, அஹமத் 15369, அல்பானி இந்த ஸஹீஹ் என அறிவித்துள்ளார்)

மேற் கூறிய வழிமுறை தனிமையில் ரகசியமாக உபதேசம் செய்வதில் பயனுண்டு என்று கருதப்படும் தலைவர்களுக்கு பொருத்தமான வழிமுறையாகும். சிலபோது பகிரங்கமாக குறைகளை சுட்டிக்காட்டுவதற்கும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளது. அத்தகைய சந்தர்ப்பங்களிலும் பண்பாடுகள் பேணப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும்.

இரகசிய உபதேசம் மாற்றத்தை கொண்டு வராது என்று கருதப்படும் தலைவர்களுக்கு பகிரங்கமாக சுட்டுவதும் இஸ்லாமிய ஷரீஆ அனுமதித்த வழிமுறையே. ஏனெனில் தப்பான பாதையில் பயணிக்கும் தலைமைகளை சமூகம் நிராகரிக்க வேண்டும் என்பதை இஸ்லாம் விரும்புகிறது. எனவே தான் நபி (ஸல்) அவர்கள்: ‘ ஹம்ஸா (ரழி) அவர்கள் ஷஹீத்களின் தலைவராவார். அவ்வாறே ஒரு மனிதன் மக்களுக்கு அநியாயங்கள் செய்யும் சமூகத் தலைவனுக்கு முன்னால் எழுந்து நின்று நன்மையை ஏவி தீமையைத் தடுத்ததன் காரணமாக கொல்லப்பட்டால் அவனும் உயர்ந்த அந்தஸ்துப் பெற்ற ஷஹீதாவார் என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் அநீதியிழைக்கம் சமூகத் தவைனுக்கு முன்னால் எழுந்து நின்று பகிரங்கமாக உபதேசம் செய்வது உயர்ந்த குணம் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.

துணிவோடு தவறுகளை சுட்டுவது உயர்ந்த குணமாகும். அதனை இஸ்லமிய சட்டப்பரபரப்பில் சமூகத் தலைமைகளுக்கு செய்யும் நல்லுபதேசம் என்ற வகையில் கடமையாக்கியுள்ளது. அந்தக் கடமையை ரகசியமாக செய்வதா அல்லது பகிரங்கமாக செய்வதா என்பது சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ‘நலன்கள்’ என்ற சட்ட விதிக்கு ஏற்பத் தீர்மானிக்க வேண்டும். எனவே தனிமையில் உபதேசம் செய்வதே அடிப்படையானது. தேவை மற்றும் சூழல்நிலைகளைப் பொருத்து பகிரங்கமாக தலைமைகளுக்கு உபதேசம் செய்வதையும் இஸ்லாம் அங்கீகரிக்கின்றது.

தவறுகளை சுட்டும் வழிமுறைகள் விரிவடைந்துள்ளன

நன்மையை ஏவி தீமையை தடுக்கும் மகத்தான பணிக்கான வழிமுறைகள் இன்று வரிவாக்கம் பெற்றுள்ளது. ஒரு நாட்டில் நிலவும் சுதந்திரம், சட்ட ஒழுங்கு, கொள்கைகளுக்கு ஏற்ப மக்கள் அபிப்பிராயங்களை வெளிப்படுத்தும் வழிமுறைகளும் வித்தியாசப்படும். எனவே பண்பாடான முறையில், ஜனநாயக விழுமியங்களைப் பேணி நவீன வழிமுறைகளை பயன்படுத்தி மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதை யாரும் தவறு என்று கருதுவதில்லை.

எனவே ஒரு சமூகம் தங்களது சமூகத் தலைமைகளின் தவறுகளை பண்பாடான வழிமுறைகளில் எடுத்துக் கூறுவதற்கு இஸ்லாம் தடை விதிக்கவில்ல. அமைதி வழிமுறையில் கருத்துக்களையும் ஆட்சேபனைகளையும் வெளிப்படுத்துவது தலைமைக்கு கட்டுப்படுதல் என்ற கருத்தியலோடு முரண்படமாட்டாது. மாறாக அது உண்மையான கட்டுப்படுதலின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படும்.

மக்கள் நலன்களை அடைந்து கொள்ளும் வகையில் அமைந்த நல்ல வழிமுறைகளை பின்பற்றுவது ஆகும் என்பதே இஸ்லாமிய சட்ட மரபாகும். மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அல்லது ஒரு கருத்தை தலைமைக்கு எட்டச் செய்வதற்கு “குறிப்பிட இந்த வழிமுறை தான் தக்க வழியாகும்” என்றிருந்தால் அந்த வழிமுறை ஆகும் என்ற நிலையில் இருந்து வாஜிப் என்ற நிலைக்குக் கூட மாறலாம்.

ஒரு சமூகத்தில் அதன் தலைமைகள் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை மறுதலித்தால் அல்லது வழங்கப்படும்  நல்ல ஆலோசனைகளை புறக்கணித்தல், புதிய காத்திரமான முடிவுகளை நோக்கி நகர இடம் கொடுக்காவிட்டால் கண்டிப்பாக மக்கள் கொதித்தெழுவார்கள். இந்த சந்தர்ப்பங்களில் மக்கள் சாத்வீகமான வழிமுறைகள் மூலம் தலைமைகளுக்கு தவறுகளை சுட்டடிக்காட்டுவது குறைபாடாகாது. நிச்சயமாக அது தீமையை தடுப்பதற்கான சிறந்த வழிமுறையாகும். சமூகத் தலைமைகளுக்கு ‘கட்டுப்படுதல்’ என்பது அடிமைத்துவம் அல்ல. அது சுதந்திரத்தின் ஆணிவேர். இதனை குர்ஆனின் பின்னணியில் புரிவதில் வந்த குறைபாடே அடிமை வாழ்வை நோக்கி நகர்த்துகிறது.

சுட்டிக் காட்டும் போது இது நமக்கு எதிராக வந்த சுட்டு விரல் என எண்ணி அதனை வெட்டி விடுவோம் என்ற மனோபாவம் இருப்பது பொல்லாதது. அது விடியலுக்கான பாதைக்கு முரணானது. இத்தகைய போக்கும் அணுகுமுறையும் எந்தக் காலத்திலும் நல்லதல்ல. குறிப்பாக நாம் வாழும் இந்த காலத்தல் நல்லதே அல்ல.

சமூகத்திற்காக பொறுப்புணர்ச்சியோடு சேவை செய்ய தெரிவ செய்யப்படும் சமூகத் தலைமைகள் ‘ நாம் விசாரனைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல’ என்பதை நடைமுறையில் காட்ட வேண்டும். தலமை என்பது கௌரவமோ அல்லது கட்டிக்காக்கும் பதவியோ அல்ல. இதற்கு நன்மை செய்து துன்பம் வாங்கும் மனதும் பொறுமையும் தான் தேவை. எனவே பொறுப்புதாரிகள் விடுகின்ற தவறுகளை சுட்டிக்காட்டுவது மக்களுக்கு வாஜிப். அச்சந்தர்ப்பங்களில் மக்கள் மௌனமாக இருப்பதுவே துரோகம் என்ற புரிதல் தலைமைக்கு தேவை.

தலைமைத்துவத்தில் இருப்பவர்களை நோக்கி வரும் விமர்சனங்கள் என்பது யாருடைய மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல என்பதை தலைமை உணர வேண்டும். நாங்கள் மனிதர்கள். மனிதர்கள் பலவீனமானவர்களாகவே படைக்கப்பட்டுள்ளனர். நமது செயற்பாடுகள் சரியாக இருப்பது போலவே தவறாகவும் இருக்கலாம். தவறு நிகழ்வது தீமையன்று. ஆனால் தவறுகள் சீர்செய்யப்படாமல் இருப்பதுவே ஆபத்தானது என்ற புரிதல் வேண்டும்.