கெபிடல் வன்முறையும் கெபிடலிஸத்தின் வன்முறையும்

97

அமெரிக்க ‘ஜனநாயக’த்தின் மீது காறி உமிழும் உலகம்

  • கலாநிதி றவூப் ஸெய்ன்

ஜனநாயகம் யார் என்ன சொன்னாலும் முதலாளித்துவத்தின் முகம்தான் என்பதை கெபிடல் வன்முறை மீளவும் நிறுவியுள்ளது. தனது தோல்வியை மூடி மறைக்க ஜனநாயகக் கட்சியின் ஊழலை போர்வையாக்கிய ட்ரம்ப், தனது குண்டர்களைத் தூண்டி பாராளுமன்றக் கட்டிடத்தையே ஆக்கிரமிக்க வைத்தார். நான்கு பேர் உயிரிழந்து 60 இற்கும் மேற்பட்டோர் காயப்படும் அளவுக்கு கெபிடலில் (பாராளுமன்றக் கட்டிடம்) ட்ரம்பின் குண்டாந்தடிகள் வன்முறைகளை கட்டவிழ்த்தனர். பொலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்த்து நின்றனர்.

தோற்றுப் போன ஒரு வேட்பாளர் இவ்வளவு கும்மாளமடிக்கும் அளவுக்கு அவரிடம் அதிகாரிம் உள்ளதே உண்மை. யார் சொன்னது அமெரிக்காவில் ஜனநாயகம் உள்ளது என்று. ஒற்றைப் பூதத்தின் கைகளில் அத்துணை அதிகாரங்களையும் குவித்து விட்டு இப்படி வாய் பார்த்து நிற்பதுதான் முதலாளிய ஜனநாயகம் என்றால், அது அமெரிக்காவில் உள்ளது என்று ஏற்றுக்கொள்ளலாம்.

மறுதலையாக, மக்களின் மேலாண்மை என்பதற்கு அங்கு கிஞ்சிற்றும் இடமில்லை. அதிகாரத் துஷ்பிரயோகம், ஊழல், மோசடி, தனிமனித ஆணவம் என அமெரிக்க ஜனநாயகத்தின் முகத்தில் எத்தனை வடுக்கள்? தெருச் சண்டைக்கும் குண்டர் வன்முறைக்கும் அமெரிக்க அரசியல் ஒன்றும் விதிவிலக்கல்ல என்பதை உலக மகா வல்லரசின் தலைவரே நிறுவியுள்ளார். இனி உலக நாடுகளுக்கு ஜனநாயகம் போதிப்பதற்கான அருகதை அமெரிக்காவுக்கு எங்கே இருந்து வரும்.

அதிகாரத்திலிருந்து விலகுவதற்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அதிகார வெறி தலைக்கேறி புத்திபேதலித்துப் போயுள்ள ட்ரம்பைப் போன்றவர்களுக்கு இன்னும் ஒரு நான்காண்டு பதிவிக்காலம் கிடைத்தால் என்ன நடக்கும் என்பதை உலகமே ஊகித்துணர முடியும். எஞ்சியுள்ள 10 நாட்களில் அவர் என்ன செய்து விடுவாரோ என்ற அச்சம் அமெரிக்கர்களையே இப்போது ஆட்டிப் படைக்கின்றது.

தோற்றுப் போன ட்ரம்ப், தனது தாழ்வு மனப்பான்மையை வன்முறை வடிவத்தில் வெளிப்படுத்துகிறார். குண்டாந்தடிகளுக்கு ஒரு பொறுக்கியைப் போல் பாராளுன்றத்தை முற்றுகையிடுமாறு கட்டளையிடுகிறார். இத்தகைய ஒரு நாடுதான் உலகப் பொலிஸ்காரனாக இருக்கின்றது என்றால் இது எவ்வளவு பெரிய ஆபத்து. இதேபோன்ற ஒரு வன்முறையில் Black Lives Matter அமைப்பு ஈடுபட்டிருந்தால் அவர்களை அமெரிக்கப் பொலிஸார் எவ்வாறு கையாண்டிருப்பார்கள் என்று தெரிவுசெய்யப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி ஜோ பைடனே கேள்வியெழுப்புகின்றார். இதுதான் ஜனநாயகக் காவலர்களின் உண்மை முகம்.

கடந்த நவம்பர் தேர்தலில் வாக்காளர் கல்லூரியின் முடிவுகளின்படி ஜோ பைடன் வெற்றி பெற்றார். ட்ரம்ப் எதிர்பார்த்ததற்கு மாற்றமாக தோல்வியடைந்தார். பைடனின் வெற்றியை நிராகரித்து வந்த ட்ரம்ப், கடந்த ஒன்றரை மாதங்களாக தனது ஆதரவாளர்களைத் தூண்டி நாட்டில் பெரும் களேபரங்களை உண்டுபண்ணி வந்தார்.

வாக்காளர் கல்லூரியின் வாக்குகளைப் பாராளுமன்றத்தில் செனட் சபைக்கு முன்னால் பிரித்தெடுத்து அவற்றை எண்ணுவதன் மூலம் ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாக அறிவிப்பது அவர்களின் தேர்தல் வழக்கம். அதுவே கடந்த வாரம் கெபிடல் ஹில் என்று அழைக்கப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்தது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன்பாகக் கூடிய ட்ரம்ப் ஆதரவாளர்கள் பைடனுக்கு எதிரான கோஷங்களுடன் கலவரத்தில் இறங்கினர். ஒரு கட்டத்தில் இக்குண்டாந்தடிகள் நாடாளுமன்றக் கட்டிடத்தின் உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களைச் சூறையாடினர். தொடர்ந்து அந்தப் பகுதியில் வெடித்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வன்முறைச் சம்பவம் அமெரிக்க வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள் என்று ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்தாலும் அதையும் தாண்டி அவர்களது ஜனநாயக முகத்தின் மீது அவர்களே பூசிக் கெண்ட கரியாகவே பார்க்கப்படுகின்றது.

தேர்தலில் முறைகேடுகள் நடந்து விட்டதாக ஆதாரமில்லாமல் தொடர்ந்தும் குற்றம் சாட்டி வந்த ட்ரம்ப், பைடன் வெற்றி பெற்றார் என்ற தேர்தல் முடிவை மாற்ற வேண்டும் என்றும் அவர் வெற்றி பெற்றதாக நாடாளுமன்றம் சான்றளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தவே கும்பல் நாடாளுமன்றத்திற்குள் புகுந்தது. கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் தப்பியோடும் காட்சியை உலக ஊடகங்கள் ஒலிபரப்பியமை அமெரிக்க ஜனநாயகத்தின் மீது விழுந்த பேரடியாகும்.

அவைத் தலைவர் அலுவலக இருக்கையில் கலவரக் கும்பலில் ஒருவன் அமர்ந்திருப்பதைக் காட்டும் படமும் நாடாளுமன்ற உரை மேடையை அந்தக் கும்பலில் ஒருவன் தூக்கிச் செல்வதைக் காட்டும் படமும் கண்ணாடிகளை உடைத்தவாறு நாடாளுமன்ற பக்கச் சுவர்களில் கலவரக் கும்பல் ஏறும் படமும் அமெரிக்கர்களுக்கு மட்டுமன்றி, உலகின் ஜனநாயக நேசர்களுக்கு பெரும் அசௌகரியத்தைத் தந்திருக்கலாம். பாராளுமன்றத்தை ஆக்கிரமித்த குண்டர்களைப் பாராட்டிய ட்ரம்ப், அவர்களை தான் நேசிப்பதாகவும் தெரிவித்தார்.

புதன் கிழமை நடந்த பாராளுமன்றக் கலவரம், அதைத் தொடர்ந்து எழுந்த எதிர்வினைகள் ஆகியவற்றுக்குப் பின்னர் ட்ரம்ப் வெளியிட்ட ஒரு வீடியோவில் சுமுகமான முறையில் அதிகார மாற்றம் நடப்பதற்கு தான் உறுதியேற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20 ஆம் திகதி ஜோ பைடன் பதவியேற்கவுள்ளதோடு, ட்ரம்ப் வீட்டுக்குச் செல்லவுள்ளார். புதன் கிழமை நடந்த குழப்பங்களும் வன்முறைகளும் அமெரிக்கர்களுக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான பாராக் ஒபாமா, பில்கிளின்டன், ஈராக் ஆக்கிரமிப்பாளர் ஜோர்ஜ் புஷ் ஆகியோர் ட்ரம்பின் இந்த வன்முறையை கடுமையாகச் சாடியுள்ளனர்.

அமெரிக்க கெபிடல் ஹில் கட்டிடத்தில் புதன் கிழமை நடந்த வன்முறையைப் போல 207 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்துள்ளது. உலகின் மிகப் பெரிய வல்லரசான அமெரிக்காவில் ஆட்சியை விட்டுக் கொடுக்க மனமில்லாத அதிபரின் ஆதரவாளர்கள் தீவிர வன்முறையில் இறங்கிய சம்பவமொன்று இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பதிவாகியுள்ளது.

1812 ஆம் ஆண்டில் நடந்த போரின்போது பிரிட்டிஷ் படைகள் மோதலுக்குத் தயாராகின. அதன் தொடர்ச்சியாக துணை எட்மிரல் அலெக்சாந்தர் மற்றும் மேஜர் ஜெனரல் ரொபட் தலைமையிலான பிரிட்டிஷ் படை 1714 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த நாடாளுமன்றக் கட்டிடத்தை தீயிட்டுக் கொளுத்தினார்கள். அப்போது பெய்த பெருமழையால் கெபிடல் என்ற கட்டிடம் தப்பித்தது. இந்தத் தாக்குதல் காரணமாக கெபிடல் கட்டடத்தை பிலடெல்பியாவுக்கு மாற்றுமாறு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரினார்கள். ஆனால் பிலடெல்பியா கட்டுமானத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து அந்தப் பேரவையை 1783 இல் முற்றுகையிட்டனர். அதனால் அக்கட்டடம் வொஷிங்டனில் அமைக்கப்பட்டது.

1714 ஆம் ஆண்டு சம்பவத்திற்கு ஓராண்டுக்கு முன்னர் மேற்கு கடனாவின் தலைநகராக இருந்த யார்க் நகரை அமெரிக்கா தீக்கிரையாக்கியது. அதற்குப் பதில் நடவடிக்கையாகவே பிரிட்டிஷ் படையினர் வெள்ளை மாளிகை உட்பட வொஷிங்டன் நகரின் பல பகுதிகளை எரித்தனர். அக்காலத்தில் கனடா ஒரு தனிநாடாக உருவாகவில்லை. பிரிட்டிஷ் கொலனியின் ஒரு பகுதியாகவே இருந்தது.

அமெரிக்காவின் நாடாளுமன்றக் கட்டடம் வெறுமனே ஒரு கட்டடம் அல்ல. அது அமெரிக்க ஜனாநாயகத்தின் சின்னம். அது அமெரிக்கர்களின் வாழ்வியல் அடையாளம். நாம் சட்டத்தினால் உருவான தேசம். அமைதியாக அதிகாரம் கைமாறுவது நமது அரசியல் அமைப்பின் அடிப்படைச் சிறப்புக்களில் ஒன்று என இந்த வன்முறைச் சம்பவத்திற்குப் பின்னர் வரலாற்றுச் சமூகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

200 ஆண்டுகளுக்குப் பின்னர் அதேபோன்ற ஒரு வன்முறை இப்போது நடந்தேறியுள்ளது. உலகின் வேறொரு நாட்டில் இதுபோன்ற ஒரு வன்முறைச் சம்பவம் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்த சமீபத்திய வரலாறு எங்குமே பதிவாகவில்லை.

தெரிவுசெய்யப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அமெரிக்க வரலாற்றின் இருண்ட தருணம் எனவும், இது தேசத் துரோகத்தின் இறுதி எல்லை எனவும் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளார். இந்த நேரத்தில் எமது ஜனநாயகம் முன்னொருபோதும் இல்லாத வகையில் வன்முறைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. நவீன காலத்தில் நாம் கண்ட எதையும் போலல்லாமல், அமெரிக்க கெபிடல் மீது தாக்குதல் நடந்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்புச் செயன்முறைக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக டொனால்ட் ட்ரம்பின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என அமெரிக்காவில் தொடர்ந்தும் அசாதாரண சூழலை ஏற்படுத்தி வந்தனர். அதன் உச்சமாகவே பாராளுமன்றக் கட்டடத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் வன்முறையாளர்களைத் தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதனால்தான் ஒரு பொலிஸார் வன்முறையாளர்களால் கொல்லப்பட்டுள்ளார். வன்முறை இடம்பெற்ற நேரத்தில் கூட அதிகாரம் ட்ரம்பிடம் இருந்ததனால் பொலிஸார் அவருக்கு விசுவாசமாக இருந்தார்களோ என்ற சந்தேகம் எழுகின்றது.

ஜோ பைடன் சொல்வது போல தப்பித் தவறி இந்த ஆர்ப்பாட்டத்தை கறுப்பர்கள் செய்திருந்தால் அமெரிக்காவின் வெள்ளை நிற வெறிப் பொலிஸார் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்திருப்பார்கள். அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்ற வாக்கியம் மிகத் தெளிவாக உள்ளது. ஆனால் நடைமுறையில் அங்கு வெள்ளையனுக்கு ஒரு சட்டமும் கறுப்பனுக்கு ஒரு சட்டமும் என்பதே நடைமுறையில் உள்ளது.

சர்வதேச ரீதியாகத் தேடப்படும் குற்றவாளியின் பட்டியலில் ட்ரம்பைச் சேர்க்க வேண்டும் எனக் கூறியுள்ள ஈரான், அவரைக் கைதுசெய்வதற்கு இன்டர் போலின் உதவி தேவை என்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நிலையிலேயே, டொனால்ட் ட்ரம்பின் இந்த பைத்தியக்காரத்தனம் பாராளுமன்றக் கட்டடத்தின் மீதான வன்முறையாக வெளிப்பட்டுள்ளது.

ட்ரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியின் செனட்டர் ஸூமர் என்பவர், ட்ரம்ப் இதற்கு மேல் ஒரு நாள் கூட அமெரிக்க ஜனாதிபதியாக இருப்பதற்கு லாயிக்கற்றவர் என்றும் அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கு செனட் சபை உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். ஆனால், அந்தக் கோரிக்கைக்கு செனட்டிலுள்ள குடியரசுக் கட்சிப் பிரதிநிதிகள் ஆதரவளிக்கவில்லை.

ட்ரம்பின் வன்முறைக்கு அமெரிக்க ஜனநாயக முறைமையில் போதுமான எதிர்வினைகள் காட்டப்படவில்லை. பொலிசார் கூட வன்முறையாளர்களுக்கு ஆதரவாகவே செயற்பட்டுள்ளனர். இத்தாக்குதலுக்குக் குண்டர்களை ஏவினார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் ஜனவரி 20 இற்குப் பின்னர் ட்ரம்பை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் தண்டிப்பதற்குமான ஏற்பாடுகள் கூட அமெரிக்க ஜனநாயகத்தில் இல்லை. ஏனெனில், செனட் சபையின் பெரும்பான்மையான வாக்குகளால் அவர் இருக்கும் 10 நாட்களுக்குள் பதவி நீக்கம் செய்யப்பட்டாலேயே அவரைத் தண்டிக்க முடியும் என்று அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் கூறுகின்றது.

அமெரிக்க ஜனநாயகத்திலுள்ள பெரிய பெரியஓட்டைகளெல்லாம் இப்போதுதான் வெளித் தெரிய ஆரம்பிக்கின்றது. இத்தனை ஓட்டைகளையும் உள்ளே வைத்துக் கொண்டு பிற நாடுகளுக்கு நாயகத்தைக் கற்பிப்பதற்கு அமெரிக்க அதிபர்கள் முயல்வதுதான் வெட்கக் கேடானது. ஜனநாயகம் தனது முதலாளித்துவ முகத்தை மாற்றிக் கொள்ளாத வரை கெபிடல் வன்முறையை மட்டுமன்றி, கெப்பிடலிஸத்தின் வன்முறையையும் நம்மால் தடுத்து நிறுத்த முடியாமல் போகும்.