கல்வியில் சமவாய்ப்பும் தேசிய நல்லிணக்கமும்

79

1943 கலாநிதி CWW கன்னங்கரா இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தியபோது இலங்கையில் பாடசாலை செல்லும் வயதில் உள்ள, கற்கும் ஆற்றல் உள்ள சகல பிள்ளைகளும் இனம், மதம், மொமி, பால், பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்து ஆகிய வேறுபாடுகளின்றி பாடசாலையில் சேர்ந்து பயில்வதற்கு இலவசக் கல்வி இடமளிக்க வேண்டும் என விதந்துரை செய்திருந்தார்.

இலங்கையில் ஏறத்தாழ 96 வீதமானோர் எழுத்தறிவுடையோர் ஆவதற்கும் சராசரிக் கல்வி நிலை 8-9 வகுப்பு வரை காணப்படுவதற்கும் கல்வியை அடிப்படையாகக் கொண்ட மேல்நோக்கிய சமூக நகர்வு ஏற்படுவதற்கும் இலவசக் கல்வி காரணமாக அமைந்தமை மறுக்க முடியாதது. ஆயினும், நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களில் இலவசக் கல்வி நடைமுறையில் உள்ளபோதும் மாணவர்கள் கல்வியைப் பூரணப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

பாடசாலைக் கல்வியில் பங்கேற்பதில் பிரதேச வேறுபாடுகள் இன்னும் நிலவுகின்றன. நகர்ப் புறங்களில் வாழும் வசதி வாய்ப்பு உள்ளோர் கல்வியை உயர் மட்டத்தில் அனுபவிக்கின்ற வேளையில், பாடசாலை முறைமைக்குள் சேர்ந்துகொள்ள முடியாத பிள்ளைகள் இன்னும் பின்தங்கிய கிராமப் புறங்களில் உள்ளனர். மலையகத்திலும் வடக்குக் கிழக்கு மாகாணங்களிலும் உள்ள பாடசாலைகள் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளதாகக் கூற முடியாது.

கல்வியில் சமவாய்ப்பு அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும்போதே நல்லிணக்கமும் இன அமைதியும் அதன் மூலம் சாத்தியமாகாலாம். பாடசாலைகளின் தராதரத்தில் வேறுபாடுகள் நிலவுமானால் கல்வியில் சமவாய்ப்பு எனும் கொள்கையும் பாதிப்புக்குள்ளாகின்றது. மேலும் கல்வியின் நியாயத்தன்மை, தராதரம், பொருத்தப்பாடு என்பனவும் பாதிப்புறுகின்றது.

இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் நியாயத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக வெற்றி பெறவில்லை. நகர, கிராமிய பாடசாலைகளுக்கிடையில் வசதி வாய்ப்புக்களிலும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளின் தராதரங்களிலும் பாரிய வேறுபாடுகள் நிலவுகின்றன. பெரும்பான்மை சிறுபான்மை சமூகங்களின் பாடசாலைகளிலும் இவ்வேறுபாடுகள் அவதானிக்கப்படுகின்றன.

நாட்டில் கல்வி இலவசமாக இருப்பினும், மாணவர்களுக்குக் கல்வியை வழங்கும் பாடசாலைகள் பல்வேறு வகையானதாக உள்ளமை கல்வியில் சமவாய்ப்பு என்ற கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்குகின்றது. வறுமைப்பட்ட கிராமப்புற மாணவர்கள் கற்கும் பாடசாலைகளும் வகுப்பறைகளும் அடிப்படை வசதிகள், கற்றல் உபகரணங்கள் என்பவற்றை மிகக் குறைவாகவே கொண்டுள்ளன. சில இடங்களில் சில வதிகள் முற்றாகவே இல்லை என்பது கண்கூடு. இது கல்வியின் நியாயத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகின்றது.

எடுத்துக்காட்டாக, தோட்டப் புற தமிழர்கள் வாழும் மலையக பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் மிகக் குறைந்த வசதிகளுடனேயே இயங்குகின்றன. பொதுவாக இலங்கையிலுள்ள பாடசாலைகளில் 50 சதவீதமான வகுப்பறைகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. சில வகுப்பறைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.

முஸ்லிம்களும் தமிழர்களும் செறிவாக வாழும் வடக்கு கிழக்கு மாகாண பாடசாலைகள் போதிய வகுப்பறைகள், ஆளணி, பௌதிக வசதிகளை போதுமானளவு இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை தகரக் கொட்டில்கள், கிடுகுக் கொட்டில்களைக் கொண்ட பாடசாலைகள் இம்மாகாணங்களில் இன்னும் உள்ளன. புழுதி படிந்த வகுப்பறைகள் மழை காலங்களில் சகதிகளால் நிரம்புகின்றன.

பெரும்பாலானா பாடசாலைகளுக்கு கழிப்பறைகள் இல்லை. கொழும்பிலுள்ள முன்னணி நகர்ப்புறப் பாடசாலைகளோடு ஒப்பிடும்போது மலையக, வடக்குக் கிழக்கு பாடசாலைகள் எங்கோ இருக்கின்றன. நகர்ப்புறப் பாடசாலைகளில் கணனி ஆய்வறை, விஞ்ஞான ஆய்வுகூடம், மருத்துவ அறை, செயற்பாட்டு அறை, தகவல் வள நிலையம், பெரிய விளையாட்டு மைதானம் என்பவற்றோடு நீச்சல் தடாகமும் உள்ளன. சிறுபான்மைச் சமூகங்கள் வாழும் பிரதேசங்களில் இத்தகைய பௌதிக வசதிகள் போதுமானதாக இல்லை என்பதோடு மனித வளமும் குறைவாகவே கிடைக்கின்றது.

கல்வியில் நிலவும் இந்த ஏற்றத் தாழ்வுகள் பொதுவாக நகர, கிராமங்களுக்கிடையில் காணப்படுகின்றபோதும், சிறுபான்மை இனப் பாடசாலைகளில் ஒப்பீட்டு ரீதியில் அதிகம் காணப்படுகின்றன. இது நீண்ட காலத்தில் இன அமைதியையும் தேசிய நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு பெரும் தடையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.