இலங்கை முஸ்லிம்களின் வரலாறு – 6 போர்த்துக்கேயர் வருகையின்போது இலங்கை முஸ்லிம்கள்

176

இலங்கையில் முஸ்லிம்கள் பொதுவாகவும் கொழும்பில் குறிப்பாகவும் எண்ணிக்கையில் அதிகமாக வாழ்ந்துள்ளதை இப்னு பதூதாவின் இக்குறிப்புக்கள் காட்டுகின்றன. கொழும்பு போன்ற நகர்ப்புறங்களில் துறைமுகத்தை அண்டி முஸ்லிம்கள் செல்வத்தோடும் செல்வாக்கோடும் வாழ்ந்து வந்துள்ளதை பதூதாவின் குறிப்பு உணர்த்துகின்றது.

அவர் இலங்கை வருகை தந்தபோது அனுராதபுர இராஜ்யம் வீழ்ச்சியடைந்திருந்தது. அதேவேளை, குருனாகல் ராசதானி படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்த ஒரு காலகட்டமாகும். போர்த்துக்கேயர் இலங்கை வருவதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர் சிங் ரூ (Ching-Hu -1405-1410) எனப்படும் சீன வரலாற்றாசிரியர் மூன்று முறை இலங்கை வந்துள்ளார். அவருடன் சீனாவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் மொழிபெயர்ப்பாளரும் இலங்கை வந்துள்ளார். அவரது பெயர் மால்தீன் என்பதாகும். அவர் எழுதியுள்ள ஒரு நூல் முஸ்லிம்கள் குறித்து சுவாரஸ்யமான ஒரு தகவலை பதிவுசெய்துள்ளது. Ing-iai-cheng-Ian என்பதே அந்நூலின் பெயர். அதில் கொழும்பில் ஒரு முஸ்லிம் இறைபக்தரின் அடக்கஸ்தலம் காணப்பட்டதாக மால்தீன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரலாற்றுக் குறிப்புக்களை முறையாகவும் நுணுக்கமாகவும் நோக்குமிடத்து, கொழும்பு மற்றும் பிற துறைமுக நகரங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் பற்றிய சில அடிப்படை உண்மைகளை நாம் ஊகித்து உணரலாம். புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை, பேருவளை முதல் ஹம்பாந்தோட்டை வரையான துறைமுக நகரங்களை ஒட்டியதாக முஸ்லிம் குடியிருப்புகள் ஏராளமாக இருந்துள்ளன.

பூரண மத கலாசார சுதந்திரத்தோடு முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களிடம் பள்ளிவாயல்கள், மக்தப்கள், நீதிமன்றங்கள் காணப்பட்டுள்ளன. மட்டுமன்றி, உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகத்திலும் முஸ்லிம்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்துள்ளனர். அதேவேளை, செல்வச் செழிப்புடன் வாழ்ந்த முஸ்லிம்கள் ஆடம்பரமாகவும் பகட்டாகவும் வாழ்ந்துள்ளமையும் புலனாகின்றது.

Ceylon of the Early Travelers – 1969 எனும் நூலை ஹுலுகல்ல தொகுத்துள்ளார். அதன் 88 ஆம் பக்கத்தில் முஸ்லிம்கள் பற்றிய வர்ணனையை பின்வருமாறு தருகின்றார். “முஸ்லிம்கள் தமது தலைகளை உயர்ரக கைக்குட்டைகளால் மூடியிருப்பார்கள். அவர்களது பெண்களின் காதுகளில் தொங்கும் விலைமதிப்பற்ற தங்க நகைகள் அவர்களது புயங்கள் வரை படர்ந்திருக்கும். உடம்பின் கீழ்ப் பகுதியில் ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட ஆடை அணிகலன்களையே அணிவது வழக்கம். அவர்கள் அறபையும் தமிழையும் கலந்து பேசுவார்கள். அவர்களது சகோதரர்கள் இந்தியாவின் கரையோர நகரங்களிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த வண்ணம் இருந்தனர். அவர்களும் தமது வியாபாரத்தை உறுதியாக நிலைநாட்டிக் கொண்டனர். தீவின் ஆடம்பரப் பொருட்கள், விலைமதிக்க முடியாத திரவியங்கள் அவர்களைக் கவர்ந்தன. அனைத்துக்கும் மேலாக, அக்கால அரசாங்கங்கள் அவர்களுக்கு வழங்கிய எல்லையற்ற சுதந்திரத்தை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தனர்.”

தொடக்க கால வெளிநாட்டவர்களின் இலங்கை பற்றிய வர்ணனைகளையே ஹுலுகல்ல இந்நூலில் தொகுத்தளிக்கின்றார். அதன்படி இலங்கை முஸ்லிம்களின் இரட்டை அடையாளம், அதாவது அறபு மற்றும் இந்திய முஸ்லிம்களின் கலப்பு அடையாளம் 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுகளில் முக்கிய பண்பாக மாறியதை இக்குறிப்பு காட்டுகின்றது. 13 ஆம் நூற்றாண்டின் பின்னர் இலங்கை முஸ்லிம்களோடு இந்திய முஸ்லிம்கள் இணைந்து கொள்கின்றனர். தென்னிந்திய, வடஇந்திய முஸ்லிம்களின் செல்வாக்கு படிப்படியாக அதிகரிக்கின்றது.

கி.பி. 15 ஆம் நூற்றாண்டளவில் இலங்கை முஸ்லிம்கள் இலங்கையின் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகத்தில் மிக முக்கிய இடத்தை வகித்தனர். இத்துறையில் மிகப் பெரும் செல்வாக்கும் பலமும் அவர்களிடமிருந்தது. நாட்டின் கரையோரப் பகுதிகளில் மட்டுமன்றி, உள்நாட்டிலும் அவர்கள் தமது குடியேற்றங்களை நிறுவியிருந்தனர். புத்தளம், கொழும்பு, சிலாபம், நீர்கொழும்பு, களுத்துறை, பேருவளை, மக்கொன, பயாகல, அளுத்கம, பேருவளை, காலி, மாத்தறை ஆகிய இடங்களில் குறிப்பிடத்தக்க முஸ்லிம் குடியேற்றங்கள் காணப்பட்டன.

சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை போன்ற துறைமுக நகரங்களில் முஸ்லிம்கள் அவர்களுக்கேயுரிய கிராமத் தலைவர்களைப் பெற்றிருக்கக்கூடியளவு செல்வாக்குப் பெற்றிருந்தனர். அளுத்கமையில் கிராமத் தலைவர்களைப் பெற்றிருந்தனர். நீர்கொழும்பிலும் வெலிகாமத்திலும் அவர்களுக்கே உரிய வீதிகள் இருந்தன. மாத்தறை நகர பிரதான பகுதியில் கடைத்தெரு வீதிகளை அண்மித்தவாறு முஸ்லிம் குடியேற்றங்கள் காணப்பட்டன.

கொழும்பில் தற்போது காணப்படும் புதிய சோனகத் தெரு, பழைய சோனகத் தெரு போன்ற வீதிகள் பல நூற்றாண்டுகளாக இப்பகுதியில் முஸ்லிம்களே செறிந்து வாழ்வதனைக் குறிக்கின்றன. (Abeyasinghe T.R.H in Muslim of Sri Lanka Pp. 124-125)
Oroardo Barbassa கொழும்பு முஸ்லிம்கள் பற்றி இவ்வாறு வர்ணிக்கின்றார். “அநேக முஸ்லிம்கள் துறைமுகத்தை அண்டியே வாழ்ந்தனர். அவர்கள் ஒரு வணிகச் சமூகம் மட்டுமன்றி, மிகவும் வளமானவர்கள், செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என்பதை நிறுவும் அனைத்து அத்தாட்சிகளும் அங்கு இருந்தன. வாசனைத் திரவியங்கள், ஏலம், முத்து, மாணிக்கம், யானைத் தந்தம் என்பவற்றின் வர்த்தகம் அவர்களின் தனியுரிமையாக இருந்தது.” 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை வந்த ஒரு போர்த்துக்கேய தளபதியே பர்பாஸா என்பது குறிப்பிடத்தக்கது.