அம்பாறை மாவட்டத்தில் 917 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்

62

இதுவரை அம்பாறை மாவட்டத்தில் 917 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

குறிப்பாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட கொவிட்19 பரம்பல் தகவலின் அடிப்படையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 1376 பேர் எனவும் கூறப்படுகின்றது.

இதுவரை 21,806 பேருக்கு அன்ரிஜன் மற்றும் பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கூடுதலான தொற்றாளர்கள் அக்கரைப்பற்று, கல்முனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸ் பிரிவுகளில் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பிரதேசங்கள் கொவிட்19 செயலணியின் அங்கீகாரத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டு, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை மீட்டெடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த சில தினங்களில் வெளியாகிய முடிவுகளின்படி, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 குடும்பங்களும், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 குடும்பங்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக இனங்காணப்பட்டுள்ளன.

இதேவேளை கல்முனை சந்தை முடக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய பிரதேசங்களில் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

இதனையடுத்து கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினால் பாண்டிருப்பு பிரதான வீதியில் எழுமாற்றாக 200 பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் சோதனையில் ஒருவர் மட்டுமே கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார்.

இதனை அவதானிக்கும் போது எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செய்றபட வேண்டும் என்பது வெளிப்படையான உண்மையாக காணப்படுகின்றது.