கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்பட மாட்டாது

46

ஜனாதிபதி தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவிப்பு

கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு விற்க கடந்த அரசாங்கம் ஒப்பந்தம் செய்திருந்தது. விற்பனைக்கு பின்னர் ஜப்பானில் இருந்து கடன் பெறுவதும் கடன் தொகையை கொண்டு நிர்மாணப் பணிகளுக்கான உபகரணங்களை கொள் வனவு செய்வதும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். இந்த ஒப்பந்தம் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடன் கலந்துரையாடிய பின்னர், முனையத்தின் 51% உரிமையையும் கட்டுப்பாட்டையும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் தக்க வைத்துக் கொள்ள இணக்கம் காணப்பட்டதாக ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். நாட்டில் முதலீடு செய்வதன் மூலம் நாட்டின் இறைமை அல்லது சுதந்திரத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்பட இடமளிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

தொழிற்சங்கங்களின் கோரிக்கையின் பேரில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத் தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

துறைமுக அமைச்சர் ரோஹித அபே குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர, துறைமுக அமைச்சின் செயலாளர், துறைமுக அதிகார சபை தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் 23 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.