தொற்றும் அபாயம் உள்ளது என்று தெரிந்து கொண்டே உக்ரைன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்க முடியுமென்றால் ஆபத்து இல்லாத கோவிட் மரணங்களை அடக்கம் செய்ய ஏன் அனுமதிக்க முடியாது?

188

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)

கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து மிக அதிகம் என்பதை நன்கு தெரிந்து கொண்டே உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளின் விமானங்களை இலங்கையில் தரையிறக்கவும் நாட்டில் பல இடங்களைப் பார்வையிடவும் இலங்கை மருத்துவ அதிகாரிகளுக்கு அனுமதி வழங்க முடியும் என்றிருந்தால் கொரோனா காரணமாக மரணித்தட உடல்களை அவர்களது சொந்தங்கள் கௌரவமான முறையில் அடக்கம் செய்வதற்கான இலங்கை பிரஜைகளின் உரிமையை வழங்காமல் இருப்பதற்கு எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாத நிலையில் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிறுவப்பட்ட அறிவியல் ஆதாரங்கள் அடிப்படையில் கோவிட் காரணமாக மரணித்த உடல்கள் அடக்கம் செய்யப்படுவதால் எந்தவிதமான ஆபத்தும் இல்லை என நிரூபணமாகியுள்ளது. புதைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக உலகெங்கிலும் உள்ள 190 நாடுகளில் அடக்கம் செய்வது நடைமுறையிலும் இருந்து வருகிறது. எனவே இலங்கையில் மாத்திரம் அறிவியல் அடிப்படையில் எழுந்த தீர்மானம் மறுக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவரும் வகையில் நலிவடைந்துள்ள சுற்றுலா துறையை உயிர்ப்பிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை எந்த வகையிலும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. இருந்தபோதிலும் இதனால் நாட்டில் வெளிநாட்டு கோவிட் கொத்தணி உருவாகும் அபாயகரமான ஆபத்து உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்நிலையில் நிர்ப்ந்தமாக நாம் சில கேள்விகளை எழுப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளது. வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் குறைந்தது ஐந்து பேராவது கோவிட்19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் அல்லவா? பாதுகாப்பற்ற தனிநபர் தொடர்புகள் காரணமாக மீண்டும் புதிய அலையொன்று வெடிக்கும் பாரிய அபாயம் உள்ளதல்லவா? இந்நிலையில் அடக்கம் செய்வதால் கொரோனா பரவுவதற்கான அச்சுறுத்தல் இல்லை என பெரும்பான்மையான துறை சார்ந்த அறிஞர்களும் விஞ்ஞானிகளும் உறுதிப்பபடுத்தியுள்ள தீர்மானத்தை இலங்கை மருத்துவ சங்கம் அனுமதிப்பதன் மூலம் இழந்த அவர்களது நம்பகத்தன்மையை மீட்டெடுப்பதில் என்ன தடை இருக்கிறது?

கோவிட் 19 பரவல் ஆபத்து கண்ணெதிரே தெரிந்த போதிலும் அதனைப் பொருட்படுத்தாமல் பாடசாலைகள் கட்டாயம் மீண்டும் திறக்கப்பட வேண்டும்! தொற்று ஆபத்துகள் இருந்தாலும் அலுவலகங்கள் செயல்பட வேண்டும்! விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும்! துறைமுகங்கள் செயல்பட வேண்டும்! பஸ் மற்றும் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்! வைரஸ் பரவும் அபயாம் வெளிப்படையாக தெரிந்த நிலையிலும் மேற் கூறிய அனைத்தும் இயல்பு நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக அனுமதி கொடுக்கும் போது மரணித்த உடலை புதைத்தல் என்ற விவகாரத்தில் மட்டும் நெகழிந்து கொடுக்க முடியாத இறுக்கம் ஏன் என்பது தான் ஆச்சரியமாக உள்ளது. அதுவும் அடக்கம் செய்வதால் வைரஸ் தொற்றும் அபாயம் ஒரு விகிதம் கூட இல்லை என்பது விஞ்ஞான உண்மையாகும். உண்மையில் இந்த முரண்பாடு ஒரு விசித்திரமான நிலையாகும். பெரும்பான்மை தீவிரவாதத்திற்கு அறிவியலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது என உலகுக்கு காட்ட நினைக்கும் தேவை ஒரு சிலருக்கு இருப்பதால் தான் இத்தகைய விடாப்பிடியை காணமுடிகிறது. இந்த செயற்பாட்டின் மூலம் ஏன் சிறுபான்மையினரிடையே தீவிரவாத்தை திணிக்க வேண்டும்?

கோவிட் 19 தடுப்பு மருந்து விடயத்திலும் ஏனைய சுகாதார விடயங்களிலும் நாம் உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறோம். ஆனால் அடக்கம் செய்யும் விடயத்தில் மாத்திரம் அதைப் புறக்கணிக்கின்றோம். இந்தப் போக்கு ஒரு குழுவாதிக்கம் அதிகாரம் செலுத்துகிறது என்ற தோற்றப்பாட்டையும் மனப்பதிவையும் தான் தருகிறது. ஏனெனில் நுண்ணுயிரியலில் மூத்த பேராசிரியரான ஜெனிபர் பெரேரா தலைமையில் வைராலஜிஸ்டுகள் நோயெதிர்ப்பு நிபுணர்கள் மற்றும் நுண்ணுயிரியலாளர்கள் அடங்கிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தகனம் மற்றும் புதைத்தல் ஆகிய இரண்டையும் அனுமதிக்க முடியும் என்றே பரிந்துரைத்துள்ளது. ஆனால் அரச நிபுணத்துவ குழுவின் பரிந்துரைக்கு உரிய அங்கீகராம் கிடைக்கவில்லை. கோவிட்டினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் சடலங்களை அப்புறப்படுத்தும் வழிமுறையாக அடக்கம் செய்யலாம் என்று இலங்கை மருத்துவ சங்கமும் (SLMA) அறிவித்துள்ளது. கொரோ காரணமாக மரணித்தவர்களை அடக்குவது ஏற்றுக்கொள்ள முடியுமான ஒரு தெரிவாகும் என இலங்கையின் சமூக மருத்துவர்கள் கல்லூரியும் (CCPSL) அடக்கம் செய்யும் முறைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் சட்ட மருத்துவ அதிகாரி டொக்டர் சன்ன பெரேரா தலைமையிலான குழு ஏனைய துறைசார் நிபுணர்களின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கை மீது இதயசுத்தியுடன் மீள்கவனம் செலுத்தி அதில் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு அமைய அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்குவதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். பெரும்பான்மையான நிபுணர்கள், துறைசார் வல்லுநர்கள், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சிவில் ஆர்வலர்கள் மற்றும் பலர் தகனம் அல்லது அடக்கம் ஆகிய இரு தெரிவுகளுக்கும் இடமளிக்கப்பட வேண்டும் என போதுமான அளவு பலமாக குரல் கொடுத்துள்ளனர்.

இலங்கையின் சட்டமும் இவ்விரு தெரிவுகளுக்கும் அனுமதி அளிக்கிறது. ஆனால் சுகாதார அமைச்சின் விதிமுறைகள் இவற்றை மீறும் வகையில் அமைந்துள்ளன. இதனால் இதுவரை உலகளாவிய ரீதியில் பாராட்டை பெற்றுவந்த இலங்கை மருத்துவ மற்றும் சுகாதார சேவைப்பணிகள் சர்வதேசிய ரீதியாக விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. மேலும் தகனம் செய்வதற்கு சம்மதம் தெரிவிக்காத மரணம் அடைந்தவர்களின் உறவினர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக நட்டஈடுகளைக் கோரி  நடிவடிக்கை எடுக்கலாம்.

இதற்கிடையில் சில பிரிட்டிஷ் சட்டத்தரணிகள் இது தொடர்பான சட்ட நடவடிக்கை பற்றி ஆராய்ந்து வருவதாகவும் அறியக்கிடைக்கிறது. இதேவேளை கனேடிய பாராளுமன்றத்திலும் இவ்விவகாரம் எழுப்பப்படவிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த சமயத்தில் இவ்விவகாரத்தை சர்வதேசமயமாக்குவது இலங்கைக்கு முன்னால் உள்ள இறுதித் தெரிவாக அமைந்துள்ளது.