லோரன்ஸ் டி அல்மெய்டாவின் இலங்கை வருகை

119

போர்த்துக்கேயத் தளபதி டொம் லோரன்ஸ் டி அல்மெய்தா (இவன் கோவாவின் போர்த்துக்கேயத் பிரதிநிதியாக இருந்தவன்) கி.பி. 1505 இல் 9 கப்பல்களுடன் மாலைதீவுகளை அடையும் பயணத்தைத் தொடங்கினான். மக்காவுக்குச் சென்றுகொண்டிருந்த முஸ்லிம்களின் வணிகச் சரக்குக் கப்பல்களை இடைமறித்துக் கொள்ளையடிப்பதே அவனது நோக்கமாக இருந்தது. பயணத்தைத் தொடங்கிய சில மணித்தியாலங்களில் அவனது கப்பல் புயலில் சிக்கியதால் காற்றடித்த திசையில் காவுகொள்ளப்பட்டு அவன் காலி துறைமுகத்தை அடைய வேண்டி ஏற்பட்டது.

இலங்கையை வந்தடைய வேண்டும் என்ற திட்டம் அவனிடம் ஏற்கனவே இருந்து வந்ததுதான். எனினும் இப்போது எதிர்பாராத விதமாக அவனும் அவனது சகாக்களும் காலித் துறைமுகத்தை வந்தடைந்தனர். காலியிலிருந்து தென்மேற்கு நோக்கி கப்பல்களைச் செலுத்துமாறு அவன் தனது படையினருக்குக் கட்டளையிட்டான். 9 கப்பல்களும் இப்போது கொழும்பு நோக்கி நகர்கின்றன.

கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த லோரன்ஸ் அங்கு கண்ட முதல் காட்சியை பின்வருமாறு வர்ணிக்கின்றான். எமக்கு அப்போது கொழும்பைப் பார்க்க நேர்ந்தது. நாம் அங்கு வெண்ணிறச் சுவர்களைக் கொண்ட இரு மசூதிகளைக் கண்டோம். முஸ்லிம்கள் எந்தவித இடையூறுகளும் இல்லாமல் தமது மதக் கிரியைகளை சுதந்திரமாக முன்னெடுத்து வருவதைக் கண்டோம்.” (வாமதேவன் பக்.79)

போர்த்துக்கேயர் இலங்கையை வந்தடைந்ததும் முதலில் கண்ணுற்றது முஸ்லிம்களின் மசூதிகளையே. அதன் மூலம் முஹம்மதியர்கள் (முஸ்லிம்கள்) கொழும்பில் வசித்து வருகின்றனர் என்பதை வெகு சீக்கிரத்தில் உணர்ந்து கொண்டனர். ஏனெனில், மொரோக்கோ மற்றும் தென்னிந்திய முஸ்லிம்கள் குறித்து அவர்கள் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தனர்.

உலக அளவில் முஸ்லிம்கள் வணிகத்தில் பெற்றிருந்த செல்வாக்கே அவர்களை பிரபல்யப்படுத்தியிருந்தது. முஸ்லிம்களின் மீதான போர்த்துக்கேயரின் சூழ்ச்சித் திட்டங்களை இனி அரங்கேற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டினர். ஏனெனில், முஸ்லிம்களைத் தமது சர்வதேச எதிரிகளாகவே போர்த்துக்கேயர் பார்த்து வந்தனர். அதன் விளைவாக மொரோக்கோ முதல் இந்தோனேசியா வரையான பிராந்தியங்களில் முஸ்லிம்களைக் கருவறுக்கும் சதிநாசகார வேலைகளில் ஏற்கனவே அவர்கள் ஈடுபட்டு வந்தனர். போர்த்துக்கேயரின் இலங்கை வருகை முஸ்லிம்களின் வரலாற்றை தலைகீழாகப் புரட்டிப் போட்டது. ஒரு புதிய துயர் மிகு அத்தியாயத்தை எழுதத் தொடங்கியது.

கொழும்பில் இறங்கிய போர்த்துக்கேயருக்கு முதலில் இங்கு அகலக் கால்பதிக்க வேண்டும் அவ்வளவுதான். அதற்கான மூலோபாயம் என்ன? தம்மால் செய்ய முடியுமான சூழ்ச்சித் திட்டம் என்ன என்று அவர்கள் சிந்தித்தார்கள். துரதிஷ்டமாக அக்காலத்தில் இலங்கையில் நிலவிய அரசியல் சூழமைவு அவர்களின் நோக்கங்களை அடைந்து கொள்ள மிகச் சாதகமாக இருந்தது.

குறிப்பாக, கோட்டை ராஜ்யத்தில் சிங்கள மன்னர்களுக்கிடையே நிலவிய அதிகார மோதல்களும் அதனால் ஏற்பட்ட அரசியல் பிளவுகளும் ஐரோப்பிய கொலனித்துவ சக்திகளுக்கு வாய்ப்பாக அமைந்தமை வரலாற்றுத் துரதிஷ்டமே.

16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கை கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் என மூன்று ராஜ்யங்களாகப் பிரிந்து காணப்பட்டது. 8ஆம் பராக்கிரமபாகு கோட்டை மன்னராகவும் கேளா சம்மத விக்ரமபாகு கண்டி இராஜ்ய மன்னராகவும் பரராஜசேகரம் யாழ்ப்பாண இராஜ்யத்தின் மன்னராகவும் விளங்கினர்.

போர்த்துக்கேயர் கொழும்பை வந்தடைந்தபோது கோட்டையின் மன்னராக விளங்கிய 8 ஆம் பராக்கிரமபாகு வயோதிபம் அடைந்திருந்ததார். அவருக்கு தர்ம பராக்கிரமபாகு, விஜயபாகு என இருவரும் வேறு சில புதல்வர்களும் இருந்தனர். இளவரசனான தர்ம பராக்கிரமபாகு மன்னனுக்கு உதவியாக கோட்டையின் நிர்வாக விவகாரங்களைக் கவனித்து வந்தார். ஏனைய புதல்வர்கள் பிராந்தியத்தின் ஏனைய பிரதேசங்களுக்குப் பொறுப்பாக இருந்தனர். 8 ஆம் பராக்கிரமபாகுவுக்குப் பின்னர் அவனது மகன் 6 ஆம் பராக்கிரமபாகு கோட்டையின் ஆட்சியாளன் ஆனான். அவனுக்கு கீரவல்ல பரம்பரையைச் சேர்ந்த முதலாவது பட்டத்து இளவரசி மூலமாக புவனேகபாகு, மத்தும பண்டார, மாயாதுன்னை என மூன்று புதல்வர்கள் இருந்தனர். இதேவேளை, முதல் மனைவி இறந்ததன் பின்னர் 6 ஆம் பராக்கிரமபாகு மறுமணம் செய்ததன் மூலம் அவனுக்கு தேவராஜன் எனும் பெயரில் இன்னொரு புத்திரனும் இருந்தான்.

6 ஆம் பராக்கிரமபாகு தனக்குப் பின்னர் அவனது முதல் மனைவியின் மூலம் கிடைத்த மூன்று புதல்வர்களுக்கும் ஆட்சியுரிமையை வழங்கவில்லை. மறுதலையாக 2 ஆம் மனைவி மூலம் கிடைத்த தேவ ராஜனை பட்டத்துக்குரிய இளவரசாகப் பிரகடனம் செய்தான். இதனால் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்த புவனேகபாகு, மத்தும பண்டார மற்றும் மாயாதுன்னை ஆகியோர் கண்டி இராஜ்ய மன்னனின் உதவியுடன் அரச மாளிகையை முற்றுகையிட்டனர். அதன் போது நடைபெற்ற கலவரத்தில் 6ஆம் விஜயபாகு கொலை செய்யப்பட்டான். இது “விஜயபாகு கொலைச் சம்பவம் என்று சிங்கள வரலாற்றில் அறியப்படுகின்றது.

(தொடரும்)