இலங்கையில் சமாதானக் கல்வியின் தோல்வி

118

30 ஆண்டு கால இனப்போர் ஒன்றுக்கு முகம் கொடுத்த எமது நாடு பன்மைப் பாங்கானது. பௌத்தர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வாழும் இந்நாட்டில் கல்வி முறையின் மூலம் இன அமைதியைக் கட்டியெழுப்பும் முயற்சிகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. ஒரு வகையில் கல்வித் துறையில் சமவாய்ப்பை வழங்குவதற்கு சிங்களத் தலைவர்கள் தயாராக இருக்கவில்லை என்பதும் இன நெருக்கடியை மேலும் தூண்டி வளர்க்கக் காரணமானது. 1970 களில் அப்போதைய அரசாங்கம் மேற்கொண்ட பல்கலைக்கழக தரப்படுத்தல் முறைமை இனச்சார்பு கொண்டது என்ற விமர்சனம் இன்றளவிலும் நீடிக்கின்றது.

1990 களுக்குப் பின்னரே இலங்கையில் அமைதிக்கான கல்வி குறித்த சிந்தனை ஒரு சிலரால் முன்வைக்கப்பட்டது. 1992 இல் யுனிசெப்பின் இலங்கைக் கிளை தேசிய கல்வி நிறுவகத்தோடு (NIE) இணைந்து முரண்பாட்டுத் தீர்வுக்கான கல்வி (Education for Conflict Resolution) எனும் பெயரில் ஒரு கருத்திட்டத்தை அறிமுகப்படுத்தின. இதுவே, இலங்கையின் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட சமதானக் கல்வியின் தொடக்க முயற்சியாகும்.

இதனூடு யுனிசெப் வழங்கிய நிதியாதரவோடு நாட்டிலுள்ள 3500 அதிபர்கள், 3000 ஆசிரியர்கள், 500 சிரேஷ்ட ஆசிரியர்கள், 7500 மாணவர்கள் நாடு முழுவதும் சமாதானக் கல்வியை முன்னெடுக்கும் வகையில் பயிற்றுவிக்கப்பட்டனர். ஆனால், அம்முயற்சி மாறிவந்த அரசாங்கங்களால் இடையில் கைவிடப்பட்டது. முதல் முயற்சியே வெற்றியளிக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து சில சிவில் சமூகத் தலைவர்களால் SL Unites எனும் ஓர் அமைப்பு சமாதானக் கல்வி தொடர்பான திட்டவரைபொன்றை முன்மொழிந்தது. இளைஞர்களுக்கான மூலோபாய சமாதானக் கல்வி (Strategic Peace Education for Youth) எனும் பெயரில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டபோதும் அது வெற்றியளிக்காமலேயே இடைநடுவில் கைவிடப்பட்டது.

பாடசாலைக் கல்வித் திட்டத்தில் குடியியல் கல்வி என்ற பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மதங்கள், இனங்கள் பற்றிய புரிந்துணர்வொன்றைக் கட்டியெழுப்புவதற்கு குடியியல் கல்விப் பாடம் ஓரளவு உதவும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் இலங்கையின் இனநெருக்கடியைத் தீர்த்து நிரந்தர சமாதானத்தை மலரச் செய்வதற்கு குடியியல் கல்விப் பாடம் போதுமானதாக இல்லை.

2009 இல் போர் முடிவடைந்ததற்குப் பின்னர் நெதர்லாந்தின் ஆம்ஸ்டடம் பல்கலைக்கழக ஆய்வாளர் நிக்கி லொக்ஸ் கார்டோசோ என்பவர் இலங்கையின் சமாதானக் கல்வி குறித்து ஆய்வொன்றை மேற்கொண்டார். இலங்கை சமாதானமா அல்லது துண்டு துண்டாக சிதைந்து போனதா? – இலங்கையில் சமாதானக் கல்வி பற்றிய ஒரு விமர்சன அணுகுமுறை (Sri Lanka: In Peace or in Pieces – A critical approach to peace education Sri Lanka) எனும் பெயரில் அவரது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் இலங்கையில் சமாதானக் கல்வி தோல்வியடைந்தமைக்கு ஐந்து பிரதான காரணங்களை அவர் முன்னிறுத்துகின்றார்.

  1. பாடசாலைக் கல்வி முறைமை இன ரீதியாகப் பிரிந்து நிற்கின்றமை
  2. நடைமுறையில் இரு மொழிக் கல்விக்கான வாய்ப்பு குறைவாக உள்ளமை
  3. கலாசாரங்களைப் புறந்தள்ளும் கற்பித்தல் சாதனங்கள்
  4. விமர்சன ரீதியான விழிப்புணர்வு மற்றும் திறந்த கலந்துரையாடலுக்கான வாய்ப்பு குறைவாக உள்ளமை
  5. வெவ்வேறுபட்ட கல்விப் பங்களார்களுக்கிடையிலான கூட்டுறவில் காணப்படும் கட்டமைப்பு ரீதியான குறைபாடு